July 21, 2019
  • July 21, 2019
Breaking News
May 22, 2018

நான் பப்ளிசிட்டிக்காக என் ரசிகருக்கு போஸ்டர் ஒட்டலை – சிம்பு

By 0 424 Views

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாகக் கருதப்படும் விஷாலும், சிம்புவும் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அதிசயம் சென்னையில் நடந்தது. சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘எழுமின்’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில்தான் இந்த ஆச்சரியம் நடந்தது.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் விஜி. விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள்.

கார்த்தி பேசும்போது, “நான் கள்லூரி, பள்ளி விழாக்களுக்கு செல்கிறேன். அங்கெல்லாம், சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது வசனம் பேசுவது என்று எல்லாரும் சினிமா நோக்கியே போய் கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதற்கு இந்த படம் உதாரணமாக இருக்கும்…!” என்றார்.

விஷால் பேசும்போது, “நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுறேன். இந்தப் படத்தில் பசங்க கலக்கி இருக்கிறார்கள். குழந்தைகள் எல்லோரும் தற்காப்பு கலைகள் கற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமா ‘குட் டச்’, ‘பேட் டச்’ எது என்று சொல்லித் தர வேண்டும். இந்த படத்துக்கு கொடி அசைக்க என்னைவிட ஜாக்கிசான் தான் வர வேண்டும்.
விவேக் உண்மையை தைரியமா பேசுவாரு. எலக்சன்ல நின்னா கண்டிப்பா MLA ஆயிடுவாரு..!” என்று கோர்த்து விட்டார்.

விவேக் பேசும்போது, ‘எனக்கு நல்லது செய்யணும்னு விஷால், கார்த்தி, சிம்புவைக் கூப்பிட்டேன். ஆனா எல்லாரும் சேர்ந்து என்ன அரசியல்ல கோர்த்து விடுறாங்க. பலபேர் கொள்கை இல்லாம இருக்காங்க.

எழுமின் வார்த்தை சைனீஷ் மாதிரி இருக்குனு சொல்றாங்க. சிலர் ‘ஏழுமீன்’னு படிக்கிறாங்க. தமிழ் வார்த்தை கூட தெரியாம இருக்காங்க. சமூகத்தில் விளையாட்டுல திறமை இருந்தும் முன்னேறி வர முடியாம இருக்காங்க. அவங்களுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்..!” என்றார்.

அவர்களில் சிம்பு பேசியதுதான் ஹைலைட். “இந்தப் படத்துல நடிச்ச பசங்கலாம் அவங்க அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க. அவங்க இல்லேன்னா நீங்க வந்திருக்க மாட்டீங்க. பேரண்ட்ஸுக்கு ஒண்ணு சொல்றேன். பசங்களுக்கு என்ன வருமோ அந்தத் திறமைய வளர்த்து விடுங்க.

உங்க எல்லாருக்குமே தெரியும், என்னுடைய அப்பா, அம்மா, திறமை எல்லாத்தையும் தாண்டி, என்னோட மிகப்பெரிய பலம் என்னுடைய ரசிகர்கள்தான். என்னுடைய ரசிகர் ஒருத்தர் என் மேல இருக்க அன்புல எனக்கு கட் அவுட் வச்சப்போ ஏற்பட்ட தகராறுல இறந்து போயிட்டார்.

ஒருநாள் எதார்த்தமா அவர் நண்பர்களை பார்த்தேன். அந்த ரசிகரோட போஸ்டர் ஒட்டிட்டு இருந்தாங்க. அந்த ரசிகர் எத்தன முறை எனக்காக கட் அவுட் வச்சிருப்பாரு. அதனாலத்தான் அவருக்காக போஸ்டர் ஒட்டுனேன். அத நான் பப்ளிசிட்டிக்காக பண்ணதா சொல்றாங்க. ஆனா அதுக்காகலாம் நான் பண்ணல. எனக்கு கட் அவுட் வச்சி பால் ஊத்தி உங்க அன்பை நிரூபிக்கனும்னு அவசியம் இல்லை. இனிமே எனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம்..!” என்றார்.

இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லை. ஒட்டுமொத்த ரசிகர்களுக்காக சொன்னதாகவும் எடுத்துக்க்கொள்ளலாம்..!

Ezhumin Trailer Launch

Ezhumin Trailer Launch