தலைப்பைப் பார்த்துவிட்டு “எது வாங்குனா எது இலவசம்..?” என்றுதானே யோசிக்கிறீர்கள்..? வேறு என்ன வினைதான். ஒரு வேண்டாத வினையை நீங்கள் விலை கொடுத்து வாங்கப் போனால் அதன் விளைவு உங்கள் பின்னாலேயே இலவசமாய் துரத்திக் கொண்டு வரும் என்பதைத்தான் இயக்குனர் எஸ்கே.செந்தில் ராஜன் சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை மாவட்டங்களையும் கலவர பூமியாகக் காட்டி ஆயிற்று, இனி வேறு என்ன மீதி இருக்கிறது என்று இயக்குநர் யோசித்து இருப்பார் போல. அதனால், இதுவரை இல்லாத விதமாக இதில் கரூரை கலவர பூமியாக மாற்றி விட்டார்.
கரூரில் இளம்பெண்கள் கடத்தல், கற்பழிப்பு, கொலை இதெல்லாம் சாதாரணமப்பா என்கிற விதமாக முதல் பத்து காட்சிகள் கடக்கின்றன. அதில் நகைச்சுவை நாயகன் ராமர் உள்ளிட்ட ஒரு கோஷ்டி வண்டிகளைத் திருடி உரியவர்களிடமே விற்று காசு பார்த்து வருகிறது. அதன் விளைவுகளைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் காசு பார்ப்பதும் போதை ஏற்றுவதுமாகவே திரிகிறது ராமர் அண்டு கோ.
இப்படியே முதல் பாதி கடக்க, இரண்டாம் பாதியில்தான் கதைக்கு வந்து சேர்கிறார்கள். மூவர் அணியாக இருக்கும் ராமர் அண்டு கோவின் கண்களில் நாயகி பூஜாஶ்ரீ மாட்ட ‘அவள் எனக்குத்தான்’ என்கிற ரீதியில் மூவரும் அலைகிறார்கள்.
அதன் விளைவு என்ன, படத்தின் முன் பாதியில் காட்டப்பட்ட குற்றங்களுக்கும் இவர்கள் காதலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை எல்லாம் பின்பாதியின் பின்பாதியில் சொல்லி முடிக்pகிறார் இயக்குநர்.
விஜய் டிவியில் என்ன செய்கிறாரோ அதையே தான் இங்கும் செய்கிறார் ராமர். அவருடன் வரும் நண்பர்களும் அப்படியே.
பாக்கெட்டில் கைவிட்டுப் பார்க்காமல் பருத்திவீரன் போல, சுப்பிரமணியபுரம் போல… என்றெல்லாம் கற்பனையில் மிதந்து ஒரு படத்தைத் தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார் எஸ்கே செந்தில் ராஜன் மேற்படி படங்களின் பத்தில் ஒரு பங்கு பட்ஜெட் கூட இந்த படத்துக்கு இருந்திருப்பது கடினம்.
எனவே அதற்குள் என்ன முடியுமோ அதை எடுத்து இருக்கிறார். அது கூட பரவாயில்லை. ஆனால் இது போன்ற படங்களுக்கு நான் லீனியரில் கதை சொல்வது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம்.
அழுக்கு முகங்களுக்கு இடையில் ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரே முகம் நாயகி பூஜாஶ்ரீ முகம்தான். கௌதம் மேனன் போன்றவர்களின் கைகளில் சிக்கினால் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்துவிடும் சாத்தியம் உள்ள இவர், இவர்களின் கைகளில் சிக்கிவிட்டாரே என்று நாம் பதறக்கூடிய அளவிலேயே வந்து போகிறார்.
ஆனால் அதன் நியாயம் கிளைமாக்சில் புரிந்து போகிறது.
அர்வின் ராஜ் இசையில் பாடல்கள் கவனிக்கும் அளவில் இருக்கின்றன. விக்னேஷ் மலைச்சாமியின் ஒளிப்பதிவு ஓகேதான்.
முன்பாதியில் கதைக்குள் வந்து இன்னும் பத்து காட்சிகளை ரசிக்கும்படி அமைத்திருந்தால் ரசிக்க வைத்திருக்கும் படம்.
படம் சொல்லும் நீதி – இளம்பெண்கள் கேக் கொடுத்தால் அதை சாப்பிடாதீர்கள் என்பதுதான்.
அது வாங்குனா இது இலவசம் – நான் கரூர்க்காரண்டா..!
– வேணுஜி