எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் ராகவேந்தர். டி எஸ் ராகவேந்தர் என்று சொன்னால்தான் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். வைதேகி காத்திருந்தாளில் ரேவதி அப்பா கதாபாத்திரத்தில் வருவாரே அவர்தான்.
இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட. இவரது இயற்பெயர் விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரிலேயே ஆரம்பக்காலங்களில் இவர் திரைப்படங்களில் பின்னணி பாடி வந்தார்.
1980-இல் வெளிவந்த யாக சாலை என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.பாலசந்தரின் படங்களில் நடித்திருக்கிறார். ‘சிந்து பைரவி’ அதில் முக்கியமான படம்.
இசைஞானி இளையராஜாவின் பல பாடல்களை இவர் பாடியுள்ளார் என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாத விஷயம். ‘அழகு மலராட’ பாடலில் ஜதி சொல்லுவதில் இருந்து அதில் ரேவதியின் அப்பாவாக பாடலில் நடித்தவரும் அவரே.
தவிர ‘வருஷம் 16’ படத்தில் வரும் ‘ஏய் அய்யாச்சாமி…’ உள்ளிட்ட பாடல், தனிப்பாடலாக உச்சஸ்தாயியில் பாடிய ‘பாக்கு கொண்டா வெத்தலை கொண்டா…’ உள்ளிட்ட சக்கரை தேவன் பாடலை பாடியுள்ளார்.
‘திருமதி பழனிச்சாமி’ படத்தில் இடம்பெற்ற ‘அம்மன் கோவில் வாசலிலே…’ என்ற பாடலையும் பாடியுள்ளார். போற போக்கில் யதார்த்தமாக பாடுவதில் வல்லவர் டி.எஸ் ராகவேந்தர்.
‘தந்துவிட்டேன் என்னை’, ‘சிந்து பைரவி’, ‘அண்ணா நகர் முதல் தெரு’, ‘விக்ரம்’, ‘சொல்லத்துடிக்குது மனசு’, ‘கற்பூர முல்லை’, ‘இளையவன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களிலும் ‘என்டெ சூரிய புத்ரிக்கு’ போன்ற சில மலையாளப் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இவரது மகள் கல்பனா ராகவேந்தரும் ஒரு பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் சிங்கர் உள்ளிட்ட போட்டிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.
வயோதிகம் காரணமாக எந்த ஒரு சினிமா நிகழ்விலும் இவர் தற்போது பங்கேற்காமல் இருந்தவர் இன்று காலமாகி விட்டார்! அவருக்கு அஞ்சலியாக ‘அழகு மலராட’ பாடல் வீடியோ கீழே…