இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ‘சோலையம்மா’ படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமாகி தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருக்கும் வில்லன் நடிகர் கரிகாலன். அதில் தமிழில் ரமணா, அரவான், அடிமைச் சங்கிலி, நிலாவே வா, கருப்பு ரோஜா, தயா, தேவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவரே இயக்கி நடித்த படம் ‘வைரவன்’.
அரவான் படத்துக்குப் பின் சில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடு படாமல் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா..?
தற்போது மீண்டும் சினிமாவுக்குள் வருகிறார். பெருந்தலைவர் காமராஜர் மீது அதிக பற்று கொண்ட கரிகாலன், அதனால் ‘காமராஜர் கனவுக் கூடம்’ என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார்.
அதன் மூலம் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாகக் கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளாராம்.
இதற்கு அவர் சொல்லும் விளக்கம், “ஏழை எளியோருக்கு பள்ளிகள், குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான திரையரங்குகள்,திருமண மண்டபங்கள் என்று செயலாற்ற இருக்கிறோம். அதோடு இன்றைய தேவையான கம்ப்யூட்டர் கல்வியையும் போதிக்க உள்ளோம்.
இதையெல்லாம் நடைமுறைப் படுத்த வேண்டுமானால் என் கையில் உள்ள ‘சினிமா’ என்ற ஆயுதத்தால் செயலாக்க முடியும் என்று யோசித்தேன். அதனால்தான் முதல் கட்டமாக சினிமா கம்பெனி ஆரம்பித்துள்ளேன்..!” என்கிறார் கரிகாலன்.
நாட்டில் அடிப்படைக் கல்வியாக போதிக்க வேண்டிய கல்வி, ஒழுக்கம், தேசப்பற்று, பெரியவர்களுக்கு மரியாதை , உற்சாகமாக இருப்பது., உடற்கல்வி போன்றவையோடு பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை இதையெல்லாம் மீட்டெடுக்கப் போகிறாராம் கரிகாலன்.
அதுபற்றி, “இதையெல்லாம் அடிப்படை கல்வியாக போதித்து இருந்தால் நம் நாடு உலக மக்களிடையே முதல் நாடாக இருந்திருக்கும். கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு என்னைச் சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று ஒரு ஆசை. அதற்காகத்தான் இப்படி நிறைய முயற்சிகளை எடுக்கிறேன்..!” என்கிறார் கரிகாலன்.
அவரது இந்த ‘காமராஜர் கனவுக் கூடம்’ நிறுவனத்தைத் தொடங்கிவைத்து வாழ்த்தினார் இயக்குநர் பிரபுசாலமன். இதன் முதல் தயாரிப்பாக ‘பெருந்தலைவன்’ படத்தை அவரே நடிக்க விரைவில் தொடங்கவிருப்பதாகக் கூறுகிறார்.
எப்படியோ காமராஜரின் கனவை நனவாக்கினால் சரி..!