விஜய் சேதுபதியைப் பார்த்து கொஞ்ச நாள் ஆகிறதே என்று நினைப்பவர்களுக்கு என்றே பளிச்சென்று கம்பேக் தந்திருக்கிறார் அவர்.
அவரை மட்டுமே மனதில் வைத்து இயக்குனர் ஆறுமுககுமார் எழுதிய கதை போல் இருக்கிறது.
விஜய் சேதுபதியின் கண்களே பல கதைகள் பேசும். அதில் எது நிஜம், எது பொய் என்றெல்லாம நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது அதை உள்ளடக்கி கமர்சியல் வேல்யூவுடன் கலந்த கதை இது.
சிறையில் இருந்து வெளியே வரும் விஜய் சேதுபதி பிழைப்புக்காக மலேசியா வருகிறார். வந்த இடத்தில் (தொழிலதிபர்..?) யோகி பாபுவைச் சந்தித்து (அவரது காதலி..?) திவ்யா பிள்ளை மூலமாக வேலையும் பெறுகிறார். தொடர்ந்து ருக்மினி வசந்துடன் மோதலும், பின்பு காதலும் வருகிறது.
காதலுக்காக பணம் திரட்டப் போய் சீட்டாட்ட பிரச்சனையில் சிக்கி மாபெரும் கடனாளியாகி அந்தக் கடனை அடைக்க வங்கிப் பணத்தைக் கொள்ளை அடித்து… போலீஸ் ஒருபுறமும் ரவுடிகள் ஒரு புறமும் துரத்த, என்ன ஆகிறார் விஜய் சேதுபதி… அவர் காதல் என்ன ஆனது என்பதுதான் கதை.
அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் கண்களில் வழியும் காதல் அற்புதக் கவிதை. அதில் விழுந்த ருக்மிணிக்கு அவரது அகன்ற உடற்கட்டெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது புரிகிறது. சண்டைக் காட்சிகளில் கூட அசால்டாக சமர் செய்கிறார் சேது.
அத்தனை அழகாக இருக்கும் ருக்மிணிக்கு வாய்த்த வாழ்க்கை அத்தனை அழகாக இல்லை. ஸ்டெப் பாதர் பப்லுவிடம் சிக்கி ஸ்டெப் ஸ்டெப்பாக அவர் அனுபவிக்கும் வேதனைகள் கொடுமை.
மிகப்பெரிய ஆறுதல் பல படங்களில் நம்மை சிரிக்க வைக்க முடியாத யோகி பாபு இந்தப் படத்தில் பல இடங்களில் நம்மைச் சிரிக்க வைப்பது. அதற்கு அற்புதமான உரையாடல் அமைத்திருக்கும் இயக்குனரைதான் பாராட்ட வேண்டும். அந்த இடத்தில் யோகி பாபுவுக்கு மாற்றாக வேறு யார் நடித்திருந்தாலும் கூட நாம் இந்த அளவு சிரித்திருக்க முடியும்.
வில்லன் பி.எஸ்.அவினாஷ் அறிமுகமும் அவரிடம் விஜய் சேதுபதி மாட்டிக் கொள்ளும் இடங்களும் மிரட்டலாக இருக்கின்றன. ஆனால் போகப்போக அவரை காமெடியன் ஆக்கி இருப்பது திரைக்கதையை பலவீனப்படுத்துகிறது.
இன்னொரு வில்லன் பப்லுவின் ஆரம்பமும், முடிவும் கூட அப்படியே.
ருக்மிணி படத்துக்குள் இல்லாவிட்டால் திவ்யா பிள்ளையையே ஹீரோயினாக நம்பியிருப்போம். ஆனால், அவரை யோகிபாபு காதலிப்பதெல்லாம் வன் கொடுமை.
மலேசியாவை எல்லா ஒளிப்பதிவாளர்களும் அழகான காட்ட முடியும். ஆனால், அதைத் தாண்டி நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத்,
அதையும் தாண்டிய பிரமாண்டத்தை ஜஸ்டின் பிரபாகர் இசை கொடுத்திருக்கிறது. பாடல்கள் இனிமை. சத்தம் தாண்டிய நேர்த்தியை சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசையும் கொடுத்திருக்கிறது.
ஆனாலும், வங்கி வேன் கொள்ளையை இன்னும் நம்பகமாக எடுத்திருக்கலாம். அதில் அடித்த அத்தனைப் பணத்தையும் யோகிபாபு வீட்டு ஹாலில் அப்படியா கிடத்தி வைத்திருப்பார்கள்..? கட்டிலுக்கு அடியிலாவது பதுக்கியிருக்க வேண்டாமா..?
படத்தின் கடைசியில் தொக்கி இருக்கும் விஜய் சேதுபதி யார் என்ற கேள்விக்கு இதன் அடுத்த பகுதியைப் பிரீக்வலாக எடுத்தால் விடை கிடைக்கலாம். அதற்கான சாத்தியம் படத்தில் இருக்கிறது.
ஒரு சில லாஜிக் மீறல்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்திருக்கிறது இந்தப்படம். அந்த வகையில்…
ஏஸ் – மாஸ்..!
– வேணுஜி