பொது மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படும் பாலை விற்பனை செய்யும் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பால் விலையை கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார். அதன்பின் ஐந்து ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவில்லை.
ஆனால் பால் உற்பத்திக்கான செலவு பட மடங்கு உயர்ந்துள்ளதாகவும், தீவனம் விலை அதிகரித்துள்ளதால் மாடுகளைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே, உடனடியாக ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பால் கொள்முதல் கூட்டுறவு சங்க அதிகாரியுடன் பால் கொள்முதல் விலையை உயர்த்தவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தும் போது விற்பனை விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். அதை எந்த அளவிற்கு உயர்த்துவது என்பது குறித்து துறையின் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
இது குறித்து பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன்…
“பால் உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ரூ27-ல் இருந்து ரூ.42 ஆக 15 ரூபாய் உயர்த்தவும், எருமை பால் கொள்முதல் விலையை ரூ.29-ல் இருந்து ரூ.50 ஆக 21 ரூபாய் உயர்த்தவும் வேண்டும் என்று கூறியுள்ளோம்.
அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்து பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாக முதல்- அமைச்சர் கூறியுள்ளார்…!” என்றார்.
இதனால் ஆவின் பால் விலை உயர்வு ரூ.10 முதல் ரூ.15 வரை இருக்க வாய்ப்பு உள்ளது. வேலூர் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பததால் தேர்தல் முடிந்த பின்னர் விலை உயர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.