June 14, 2026
  • June 14, 2026
Breaking News
June 11, 2026

ஆட்டி திரைப்பட விமர்சனம்

By 0 112 Views

பெண்களுக்கு எதிரன பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், பழங்காலத்தில் தமிழ்ப்பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்கிற ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் ஏற்படுத்தியிருக்கும் படம்.

1970 ல் நடக்கிறது கதை.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் குற்றவாளிகளை சட்டத்தால் தண்டிக்க.வழியின்றி அவர்களை என்கவுண்டர் செய்து விட்டு, அதன் தண்டனையாக மாற்றல் வாங்கிக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் அதேபோல் மாற்றலாகி ஒருமலைப்பகுதிக்கு வருகிறார்.

எந்தக் குற்றமும் பதிவாகாத அந்தப் பகுதியில் காவல் நிலையம் இருப்பதே ஆச்சரியமாக இருக்க, அதுவே இசக்கிக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது.

1880 களில் வெள்ளையர்கள் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தேயிலை தோட்டத்தில் பணிபுரிய மக்களை வரவழைத்து அங்கே பணி அமர்த்தியதில் அவர்கள் பரம்பரையாக அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.

கல்வியறிவு இல்லாத அந்த கிராமத்து மக்களின் அடுத்த.தலைமுறையாவது கல்வி அறிவு.பெற வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு வரும் என்ஜிஓ ஆசிரியர்கள் மூலமாக கல்வியறிவு பெற்ற அபி நட்சத்திரா கல்வி பயிற்றுவித்து வருகிறார்.

அப்படி அங்கே புதிதாக வரும் ஒரு ஆசிரியர் பிரவீண் பழனிசாமி, அபி நட்சத்திராவிடம் அத்து மீறி நடக்க முயல, கொதித்துப்போன அபி அவரை அறைந்து விடுகிறார். அதைத்தொடர்ந்து பிரவீண் மர்மமாக இறந்து போக, இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணனுக்கு வேலை வருகிறது.

அவர் துப்புத்துலக்க ஆரம்பிக்க, அந்த கிராமத்தை பற்றிய முன்கதை, அங்கு போலீஸ் ஸ்டேஷன் உருவான வரலாறு என்று எல்லா மர்மங்களும் விலக ஆரம்பிக்கிறது.

அது தமிழ் ஆதிக்குடியில் பெண்கள் நிலை எவ்வாறு இருந்தது என்று பெருமைபடச் சொல்லும் கதையாக அமைகிறது.

அமைதி ராஜாக வரும் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் பெயருக்கு சம்பந்தமில்லாமல் புயலாக வருகிறார். ஆனாலும் என்கவுண்டர் செய்த துப்பாக்கி ரவைக்கே கணக்கு சொல்ல வேண்டும் என்ற சூழலில் அவர் பாட்டுக்கு கான்ஸ்டபிள் சுகுமாரை தூக்கத்திலிருந்து எழுப்பவெல்லாம் சும்மாவே சுடுவதெல்லாம் ஓவர்.

தானே பள்ளி செல்லும் சிறுமி போல இருக்க, குழந்தைகளுக்கு கல்வியறிவு தரும் அபி நட்சத்திரா கவர்கிறார். பிரவீண் பழனிசாமி யின் கை தன் மீது பட்டதும், சீறும் காட்சியில் அதைவிட அதிகமாகக் கவர்கிறார் அபி.

வில்லன் போல வரும் பிரவீண் பழனிசாமி பாத்திரத்துக்கு ஏற்றாற்போல் மைனர் போல இருக்கிறார். 

படத்தில் பாடல்கள் இல்லாத குறையைப் போக்க பழைய சினிமா பாடல்களை போஸ்ட்மேன் சௌந்தர் பாடுவது ஆறுதல்.

காமெடிக்கென்று வரும் காதல் சுகுமார் அதற்கு முயற்சி செய்து தோற்கிறார்.

பிற பாத்திரங்களில் வரும் நபர்கள் புதியவர்களாக இருக்கிறார்கள்.

சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு கதை நடக்கும் காலக்கட்டத்தை உணர்த்துகிறது.

தீசன் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிக்கு உயிரூட்டுகிறது.

முன்பாதிப் படம் சாதாரணமாக நகர, படத்தின் இரண்டாவது பாதியில் திருமுருகனின் திரைக்கதை பரபரப்பை ஏற்படுத்துகிறது.

ஆராய்ச்சி மாணவி பழந்தமிழ்ப் பெண்களின் நிலை குறித்துப் பேசுவது உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. அதைப் படமாக்கிய வகையில் குயிலி நாச்சியார் தலைமையில் வரும் பெண்களின் புரட்சிப் படையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

ஆட்டி – சிங்கப்பெண்கள்..!

– வேணுஜி