ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின் போது லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும், ஆயிரக் கணக்கில் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்ததும் உலகம் அறிந்த உண்மை.
சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அவர்களைத் தேடும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களின் நிலை இன்னும் புரியாத புதிர்.
அதைவிடக் கொடுமை அவர்களைக் காணாமல் போனோர் என்றழைப்பதுதான். ஐநாவின் பார்வைக்கு இந்த விஷயம் கொண்டு போகப்பட்டும் அந்த விஷயம் சர்வதேச சமூகத்திடம் எடுபடவில்லை. அந்த வேலையை இந்தச் சிறிய படம் செய்கிறது.
இந்த அரிய முயற்சியைத் திரைப்படமாக எடுத்த இயக்குநர் ஆனந்த ரமணனுக்கும், அந்த முயற்சியை முன்னெடுத்த ஐபிசி தமிழுக்கும் பாராட்டுகள்.
அப்படித் தன் கணவனைத் தேடிக்கொண்டிருக்கும் நவயுகாவும், தந்தை வந்துவிடுவார் என்று நம்பும் அவருடைய பெண்குழந்தை தமிழரசியும் இயல்பாக நடித்திருப்பது கண்முன் அவர்களின் துயரத்தைச் சொல்கிறது.
கண்ணிவெடி அகற்றும் வேலைக்கு நவயுகா செல்வதில் இருந்து தொடங்கும் படம் போர் முடிந்தும் தமிழர்கள் வாழ்வு மேம்படாததை உரைக்கிறது.
“அப்போ நம்மைக் காப்பாத்திறதுக்காக கண்ணிவெடியை புதைச்சோம். இப்ப அதை எடுக்கிறோம்…” என்று ஒருவர் சொல்ல, “எல்லாமே நம்ம நிலத்தைக் காக்கிறதுக்காகத்தான்..!” என்று இன்னொருவர் பதில் சொல்வது வரலாற்றுப் பதிவான வசனம்.
வழக்கமாக இது போன்ற தமிழர்களைத் தாங்கிப் பிடிக்கும் படஙகளில் தமிழர்களையும் அவர்தம் இயல்புகளையும் மிகவும் உயர்த்திப் பிடிப்பார்கள். ஆனால், இந்தப்படத்தில் அப்படிப் பாசாங்காக இல்லாமல் தமிழர்களுக்கு உள்ளும் இருக்கும் இயல்பான மனித குண விகாரங்களையும் காட்சிப் படுத்தி இருப்பது நடுநிலையான பதிவு.
மருமகளும், பேத்தியும் நம்பிக்கையுடன் தன் மகனைத் தேடிக் கொண்டிருக்க, அந்தத் தாய்க்கே மகன் வருவான் என்ற நம்பிக்கை இல்லாமல் போவதும், ஆனால் தன் தந்தை வந்துவிடுவார் என்று சிறுமி நம்புவதும் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள்.
கண்ணி வெடியைத் தேடுகையில் மனித எலும்புக் கூடு கிடைப்பதும், ஒரு இடத்தில் அந்தக் கண்ணிவெடி வெடித்து ஒரு பெண் காயப்படுவதும் கூட பதற வைக்கும் பகுதிகள்.
பட்ஜெட் காரணமாக படத்தின் நேர்த்தி குறைவாக இருப்பதுதான் ஒரு குறை.
ஆறாம் நிலம் – ஆறாத ரணம்..!
– வேணுஜி