பன்னாட்டு தயாரிப்பான கார் ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியுடன் படம் தொடங்குகிறது.
அதைத்தொடர்ந்து அதன் சுவடுகளே இல்லாமல் கட்டிட தொழிலாளியான கருணாஸ் தன் கைக்குழந்தையுடன் காவல் நிலையம் வந்து குழந்தை பெற்ற தன் மனைவி ரித்திகாவை மருத்துவமனையில் இருந்து காணவில்லை என்று புகார் செய்கிறார். அவர் கிடைத்தாரா என்பதுதான் மீதி கதை.
கருணாசுக்கு இந்தப்படம் பல விருதுகளைப் பெற்றுத் தரும். என்ன ஒரு அற்புதமான நடிப்பு..? அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கும் அவரைக் கைக்குழந்தையைப் பிடுங்கி விட்டு இன்ஸ்பெக்டர் பாகுபலி பிரபாகர் அடித்துத் துவைக்கும்போது நமக்குப் பதறுகிறது.
இன்ஸ்பெக்டர் பிரபாகரும், உதவி கமிஷனர் உமா ரியாஸ்கானும் சேர்ந்து செய்யும் செயல்கள் அதிர வைக்கின்றன. ஆனாலும் அதிகார வர்க்கத்தின் கைப்பாவைகளாக அவர்கள் இருக்கும் உண்மையும் சுடுகிறது.
இனியா, திலீபன் இருவரும் பாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கிறார்கள். இனியாதான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் என்று பார்த்தால் அவர் நிலை ரித்திகாவின் நிலையை விடக் கண்ணீர் விட வைக்கிறது.
மகேஷ் முத்துசாமியின் இருண்மையான ஒளிப்பதிவு படத்தின் தன்மையே புரிய வைத்து விடுகிறது.
ஸ்ரீகாந்த்தேவாவின் இசையில் இயக்குனர் யுரேகா எழுதி இருக்கும் பாடல் நெகிழ வைக்கிறது.
தன் முந்தையப் படங்களை விட கனமான ஒரு கதையை நேர்த்தியாகவும் படமாக்கி இருக்கும் ராம்நாத் பழனிகுமாருக்குப் பாராட்டுகள்.
படத்தில் கருணாசுக்கு அடுத்து நல்ல மனிதராக வருவது காவலர் அருண்பாண்டியன்தான். ஆனால் மருத்துவமனையில் இருக்கும் கருணாஸ் மனைவி ரித்திகாவை எதற்காக இன்ஸ்பெக்டரிடம் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று புரியவில்லை. அதற்கு எந்தக் காரணமும் இல்லை.
அதேபோல் அருண்பாண்டியனுக்கு ஏதாவது நோய் இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு மெதுவே நடக்கிறார். மெதுவாகப் பேசுகிறார். அதன் காரண காரியங்கள் புரியவில்லை. போலீஸ் வேலைக்கு ‘அன் பிட் ‘ போலவே நடந்து கொள்கிறார்.
இருந்தாலும் எங்கோ ஆரம்பித்து எதற்கோ முடிச்சு போட்டு பன்னாட்டு கம்பெனிகள் அதிகாரிகள் துணையுடன் எப்படி ஒரு தனி மனிதன் மேல் தாக்குதலை நடத்தி விட முடியும் என்று புரிய வைத்திருப்பதில் இந்த படம் வெற்றி பெறுகிறது.
ஆதார் – நல்ல படத்துக்கான அடையாளம்..!