மநுதருமசாஸ்திரம் என்ற நூலின் தமிழாக்க பி.டி.எஃப் வடிவத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். மொத்தம் 462 பக்கங்கள்… வாசிக்க வாசிக்க இதெல்லாம் ஒரு நூலென்றா தூக்கிட்டு திரியிறிங்கடான்னு தான் கேட்கத் தோன்றுகிறது! இது பெண்களை மட்டுமல்ல, பிராமணர்கள் தவிர்த்த அனைவரையும் கேவலப்படுத்தி தான், இழிவுபடுத்தித்தான் பெரும்பாலும் சொல்கிறது. அடிப்படையில் மனிதரை பாகுபடுத்தும் சிந்தனையுள்ள இந்த நூல், வேறென்ன கருத்தைச் சொல்லி என்ன பயன்???
ஒரு சின்ன உதாரணம், இன்னொருவன் வெட்டிய குளத்தில் பிராமணன் குளித்தால், பிராமணனின் பலனனைத்தும் குளம் வெட்டியவனுக்கு சென்றுவிடுமாம்… குளம் வெட்டியவனின் பாவமனைத்தும் பிராமணனுக்கு சேருமென்று கூறுகிறது…
தீட்டு(!) குறித்து கூறும்போதெல்லாம் பிராமணனுக்கு இரண்டு நாளென்றால், அடுத்தடுத்த பிறப்பு நிலையில் இந்த நாள்கணக்கு அதிகரித்து, சூத்திரனுக்கு 30 நாட்கள் என்று கூறுகிறது. ஏனென்றால் பிராமணன் வேதம் படித்ததால் தீட்டு குறைவாம்!
இன்னொன்றில், பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள ஷத்திரியனையும் வயதை வைத்து மரியாதை தராமல், பிராமணனுக்கு தகப்பனுக்கான மரியாதையும், ஷத்திரியனுக்கு பிள்ளைக்கான மரியாதையும் தர வேண்டும் என்கிறது!
ஒரு நட்பு சேர்வதற்குக்கூட அளவுகோல் வைத்துள்ளது. இதன் அளவுகோல் முழுக்க முழுக்க வேதம் கற்றவனை, பிராமணனை உயர்த்தி, மற்றவர்களை அடுத்தடுத்த நிலைகளில் தாழ்த்தியுமே எழுதப்பட்டிருக்கிறது.
சண்டாளர், வண்ணான் உள்ளிட்ட தாழ்ந்த ஜாதியினரோடு ஒரு மர நிழலின் அடியில்கூட ஒருமித்து வசிக்கக்கூடாது என்கிறது! இப்படி எக்கச்சக்கமான தீண்டாமைக் கருத்துக்களின் குப்பைக்கூளமாகவே இந்நூல் உள்ளது.
இந்த நூலும், வேதம் கற்ற பிராமணர்களே உயர்ந்தவர்கள் என்ற தவறான எண்ணத்தாலோ, அவர்களை உயர்த்தினால் கிடைக்கும் ஆதாயத்துக்காகவோ எழுதப்பட்ட ஒன்றேயாகும். இது முழுக்க முழுக்க மனிதநேயத்துக்கும், பிறப்பால் அனைவரும் சமமென்ற சிந்தனைக்கும், அறிவியலுக்கும், அறவியலுக்கும் எதிரானதேயாகும்.
இந்த நூல், பிராமண மேலாதிக்கத்தை அறியாமையால் போற்றிய அன்றைய காலகட்டத்து சிந்தனைக்கு ஏற்புடையதாக இருந்திருக்கலாம். அந்த காலகட்ட அறிவுக்கேற்ற நியாயத்தைக் கூறுவதாக இருக்கலாம். ஆனால் இன்றோ அனைத்து ஜாதியினரும் கல்வியால் உயர்ந்து வரும் சூழலில் இந்த நூல் ஒரு குப்பையே… நம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாத, தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்று கூறும் நம் அரசியலமைப்புச்சட்டத்துக்கு நேரெதிரான நூலாகும்.
பிறப்பால், ஜாதியால் தங்களைத் தாழ்த்திக்கொள்ள இன்றைய கல்வி விழிப்புணர்வுள்ள காலத்தில் யாருமே விரும்பமாட்டார்கள். இன்றைய தினம் புரிதலில்லாமல் திருமாவளவனுக்கெதிராக போராடுவதாக சாலையில் இறங்கியவர்களைப் பார்க்கையில், இரட்சணிய யாத்திரிகத்தில் வரும் ‘இன்னதென அறிகிலார் தாம்செய்வது இவர் பிழையை’… என்ற வரி தான் நினைவுக்கு வருகிறது!
குறிப்பு: திருமாவைப்போலவே பாஜகவைச் சேர்ந்த, தீவிர ஆர்.எஸ்.எஸ்காரரான இராமசுப்பிரமணியனும் ஒரு வீடியோவில் மநுதர்மசாஸ்திரத்தில் பெண்களை இழிவுபடுத்தி எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டி, பாஜகவினரின் போராட்டம் தேவையற்றது என்றும், இதுகுறித்து விவாதம் வந்தால், பாஜகவினருக்குத்தான் சங்கடம் என்றும் கூறியிருந்தார்.
உண்மையில் இந்த நூலை அனைத்து தமிழர்களும் உணர்ந்து வாசிக்க வேண்டும். அப்போது தான் ஷத்திரியர், சூத்திரர் என்ற வார்த்தையெல்லாம் எவ்வளவு இழிவானது என்றும், வர்ணரீதியாக இந்த நூல் மனிதர் அனைவரையும் எப்படி பிரித்து இழிவுபடுத்துகிறது என்றும் உணர முடியும்!
– வ.சு. கெளதமன்