January 15, 2025
  • January 15, 2025
Breaking News
January 15, 2025

காதலிக்க நேரமில்லை திரைப்பட விமர்சனம்

By 0 28 Views

படங்களில் இரண்டு வகை. முதல் வகை, இப்படி எல்லாம் நடக்கிறதோ இல்லையோ – ஆனால், மக்களுக்குப் பிடிக்கும் என்கிற அளவில் கற்பனை கலந்து எடுக்கப்படுபவை.

மக்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ உண்மையில் இப்படித்தான் நடக்கிறது என்று உண்மையை உரித்துச் சொல்வது இரண்டாம் வகை. 

இந்த இரண்டாம் வகையைச் சார்ந்ததுதான் இந்தப்படம். ஆனால் இப்படி எடுப்பதற்கு மகா துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் இயக்குனர் கிருத்திகா உதயநிதியிடம் நிரம்பவே இருக்கிறது.

“இதுதான் கதை…” என்று அப்படியெல்லாம் இரண்டு வரியில் சொல்லி விட்டுப் போய்விட முடியாது. மிக விளக்கமாகவே இந்தப் படத்தின் கதையைச் சொல்லியாக வேண்டும். 

பெருநகரங்கள் தோறும் புற்றீசலாகப் பரவி வரும் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களைப் பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா..? அதைத் தெளிவாக கவனித்த கிருத்திகா, இந்த படத்தின் கதையை அதை மையமாக வைத்தே எழுதி இருக்கிறார்.

இன்றைய நவீன யுகத்தின் பிரதிநிதிகளாக வருகிறார்கள் நாயகன் ஜெயம் ரவியும், நாயகி நித்யா மேனனும்.

(ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார். அது பழகும் வரை இதில் ஜெயம் ரவி என்றே அழைப்போம்)

இருவரும் கட்டிடக்கலையில் கட்டுமானத்திலும் வடிவமைப்பிலுமாக நிபுணர்களாக இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் பெங்களூருவில் இருக்கும் ஜெயம் ரவி தனது நண்பன் வினய்க்கு கம்பெனி (!) கொடுப்பதற்காக தனது உயிரணுவை அதற்கான மையத்தில் பாதுகாத்து வைக்கிறார். வினய் எதற்காக அப்படிச் செய்கிறார் என்றால் அவர் ஒரு ஆணைக் காதலிக்கிறார். இந்நிலையில் என்றாவது குழந்தை வேண்டும் என்று விரும்பினால் அப்போது உதவும் என்று தனது உயிரணுவைச் சேகரித்து வைக்க… அவருக்கு கம்பெனி கொடுக்க ஜெயம் ரவியும் இன்னொரு நண்பன் யோகி பாபுவும் அப்படியே செய்கிறார்கள்.

இன்னொரு பக்கம் சென்னையில் தனது கணவருடன் செயற்கைக் கருத்தரிப்பு மையத்துக்கு வரும் நித்யா மேனன், செயற்கைக் கருவூட்டல் மூலம் ஒரு குழந்தையைச் சுமக்க ஆரம்பிக்கிறார். 

கதைக்கான ‘கரு’வும் இங்கேதான் உருவாகிறது. பெங்களூருவில் தன் உயிரணுக்களை ஜெயம் ரவி பாதுகாத்து வைப்பதற்காகக் கொடுத்தார் இல்லையா, அது தவறுதலாக ‘டோனர் ‘ அதாவது தானம் செய்பவர் லிஸ்டில் போய் அது நித்யா மேனனின் வயிற்றுக்கு வந்து சேர்கிறது. 

இத்தனைக்கும் நித்யா மேனனுக்கு ஜான் கோக்கனுடன் திருமணம் ஆகியிருக்க, ஜான் கோக்கனின் கள்ள உறவை அறிந்த நித்யா மேனன் அவரை விட்டு விலகி விடுகிறார்.

இந்தப் பக்கம் ஜெயம் ரவிக்கு அவர் காதலி டிஜே பானுவுடன் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில், அதில் விருப்பமில்லாத பானு மாயமாகி விடுகிறார்.

இந்நிலையில் ஜெயம் ரவியும், நித்யா மேனனும் பெங்களூருவில் நடக்கும் ஒரு கட்டடக்கலை கண்காட்சியில் சந்தித்ததில் ஒருவரிடம் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனால் வயிற்றில் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கும் நித்யா மேனனுக்கு இன்னொரு காதலைத் தொடங்குவதில்  விருப்பம் இல்லாமல் சென்னை வந்துவிடுகிறார்.

அதற்குப் பின் எட்டு வருடங்கள் ஓடிவிட, நித்யா மேனனுக்கு ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்க… மீண்டும் இருவரும் சந்திக்கிறார்கள். அதற்குப் பின் நடந்தது என்ன என்பதெல்லாம் மாடர்ன் டைம்ஸ் சமாச்சாரங்கள்.

ஜெயம் ரவிக்கு ரொம்பவும் ‘தில்’ தான். முதல் காட்சியிலேயே உயிரணுவைச் சேமித்து வைக்கப் புறப்படும் தைரியம் வேற எந்த ஹீரோவுக்கும் இருக்குமா என்று தெரியவில்லை.

அத்துடன் முந்தைய படத்தை விட ஸ்மார்ட் ஆகவும், அழகாகவும், உணர்வு ததும்பும் நடிப்புடனும் இந்தப் படத்தில் மெருகேறித் தெரிகிறார்.

அதைவிட நித்யா மேனனுக்கு அதிக ‘தில் ‘. “நான் வெர்ஜின்தான்னு உனக்குத் தெரியுமா..?” என்று அம்மா லஷ்மி ராமகிருஷ்ணனிடம் கேஷுவலாகக் கேட்பதில்  ஆரம்பித்து (அப்போது அருகில் அப்பாவும் இருக்கிறார்…) கணவன் விரைப்புத்தன்மை இல்லாதவன் என்பதை அவன் வாயிலிருந்தே சொல்ல வைத்து, செயற்கைக் கருத்தரிபபின் மூலம் ஒரு குழந்தையைக் கணவன் இல்லாமலேயே வயிற்றில் சுமப்பது வரை ‘வேற லெவல்’ நித்யா. 

நித்யாவின் கண்களே அத்தனை உணர்ச்சிகளையும் சொல்லி விடும்போது தனியாக நடிப்பு என்று எதுவும் தேவைப்படாமல் போகிறது.

இவர்களைவிட ‘தில்’லான இன்னொருவர் ஆணை மோகிக்கும் ‘கே ‘ ஆக வரும் வினய் தான்.

இப்படிப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாத்திரங்களும் நாகரிக உலகின் உச்சாணிக்கொம்பில் நிற்க, இப்படி ஒரு கதையை இயக்க எண்ணிய கிருத்திகாவின் ‘தில்’தான் அனைத்திலும் உச்ச பட்சம்.

ஜெயம் ரவியின் அப்பாவாக வரும் லால், மகனின் எல்லாக் கூத்துக்கும் ஈடு கொடுப்பதும் சோ நைஸ். அதேபோல்  ஷாக்குக்கு மேல் ஷாக் ஆக மகள் கொடுக்க, அதைத் தாங்க முடியாமல் “ஒண்ணு நான் இந்த வீட்டில் இருக்கணும், இல்லைன்னா அவள் இருக்கணும்..!” என்று நித்யாவை வீட்டை விட்டு விட்டு லஷ்மி ராமகிருஷ்ணன் வெளியேற்றி விடுவது சோ சேட்.

மனைவியிடமும் மகளிடமும் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் நித்யா மேனனின் அப்பா மனோவின் நிலைதான் பரிதாபம். 

மாடலுக்கென்று அளவெடுத்து செய்தது போல இருக்கும் டிஜே பானுவை ரசிக்க முடிகிறது. ரவிக்கும், நித்யாவுக்கும் காதல் கொஞ்சம் கொஞ்சமாகப் பொங்கி வரும் நேரத்தில், ஓடிப்போன பானு திரும்ப வந்து புகைமூட்டம் போடுவது நமக்கும்தான் எரிச்சலாக இருக்கிறது. 

ஆனால் ரவியின் கண்களில் நித்யா மீது காதல் இருப்பதை கண்டுபிடித்து, அதை ரவியிடமே கூறி “உன்கிட்ட அந்தக் காதலை நான் ஏற்கனவே பார்த்தவ..!” என்பது டச்சிங்..!

நித்யா மேனனின் மகனாக வரும் அந்தச் சுட்டிப் பையன் ரொம்பவே கவனத்தை ஈர்க்கிறார்.

நித்யாவின் எல்லா முன்வைப்புகளுக்கும் உடனிருந்து கவனித்துக் கொள்ளும் வினோதினியையும் ரசிக்கலாம்.

காவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவையும், கலரிஸ்ட் ரங்காவின் கைவண்ணத்தையும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். பிரேமுக்கு பிரேம் ஓவியம்.

அதேபோல் ஆஸ்கார் நாயகனின் இசையும், படத்தின் தன்மையை அழகாக பிரதிபலித்திருக்கிறது. ஆனால் பாடல்களின் எண்ணிக்கை இவ்வளவு கூடுதலாக இருந்திருக்க வேண்டியதில்லை. 

மெதுவாகக் கதை நகர்வது ஒன்றே இந்தப் படத்தின் பலவீனமாகக் கருதப்பலாம். ஆனால் அதுவேதான் இதை ஒரு வாழ்க்கையாக உணரச் செய்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

படத்தில் 60% ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருப்பதால் மட்டும் இது ஆங்கில படம் போல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. நேர்த்தியிலும் அப்படியே..!

ஒவ்வொரு கலைஞர்களிடமும் படத்துக்கு தேவையானவற்றை துல்லியமாக வாங்கி விடுபவரே சிறந்த இயக்குனர். அந்த வகையில் கிருத்திகா உதயநிதி இந்தப் படத்தில் முதல் நிலை இயக்குனர்கள் பட்டியலில் இணைந்து விடுகிறார்.

அத்துடன் பழைய டைட்டிலை வாங்கி எங்கே கெடுத்து விடுவார்களோ என்று நினைத்தவர்களின் நினைப்பை மாற்றி அந்த டைட்டில் முன்னதை விட இதற்கே சிறப்பாக பொருந்துகிறது என்று நம்ப வைத்து இருப்பதும் கிருத்திகாவின் சாதனைதான்.

இதெல்லாம் ‘கல்ச்சுரல் ஷாக்’ என்பவர்கள் இன்னும் ஒரு 20,  25 வருடங்கள் கழித்து இதையெல்லாம் ஆமோதிக்கவே செய்வார்கள்.

அந்த வகையில்…

காதலிக்க நேரமில்லை – ஒரு காலக் கண்ணாடி..!

– வேணுஜி