September 13, 2025
  • September 13, 2025
Breaking News
September 13, 2025

யோலோ திரைப்பட விமர்சனம்

By 0 14 Views

இது youtube யுகம். அதன் அடிப்படையிலேயே  படத்தின் நாயகன் தேவ் ஒரு youtube சேனல் நடத்தி வருகிறார். அதன் பெயர்தான் ‘யோலோ..!’

இவரது நோக்கமே இரவில் பேய் போல வேடமிட்டு தனியாக வருபவர்களை பயமுறுத்தி பிராங்க் பண்ணுவது. அப்படி வில்லனின் ஆசை நாயகியை பிராங்க் பண்ணப் போய் அவர் கோமாவில் விழுகிறார்.

இன்னொரு பக்கம் நாயகி தேவிகாவை பெண்பார்க்க வருபவர்கள் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை தாங்கள்  அறிந்ததாக சொல்கிறார்கள். 

ஆனால் தேவிகா மறுக்க ஒரு கட்டத்தில் அவருக்கும் மேற்படி தேவுக்கும் திருமணம் ஆனது உறுதியாகிறது. ஆனால் தேவுக்கும் அந்தத் திருமணம் பற்றிய நினைவு இல்லை. இருவருக்குமே தெரியாமல் எப்படி திருமணம் ஆனது என்பதை ஆராயப் போகும்போதுதான் அவர்கள் நடத்தும் யூடியூப் சேனலை விட பயங்கரமான சம்பவம் காத்திருக்கிறது. 

அவர்களுக்கு உண்மையிலேயே திருமணம் ஆனதா? அப்படி ஆன திருமணம் ஏன் யாருக்கும் தெரியவில்லை..? அவர்களும் ஏன் அதை மறந்தார்கள்.? என்கிற எல்லா குழப்பக் கேள்விகளுக்கும் மீதிப் படம் பதில் சொல்கிறது.

நாயகன் நாயகியைப் பற்றி சொல்வதற்கு முன்னால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு ஹீரோவைப் பற்றி சொல்லியாக வேண்டும். அவர்தான் ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி. 

படத்தில் வரும் நாயகன் தேவ் மற்றும் நாயகி தேவிகா மட்டுமல்லாது படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களின் முகங்களையும் அழகுற காட்டி இருப்பதில் ஒளிப்பதிவாளரின் பங்கு முதன்மையாக இருக்கிறது. 

தேவிகா மட்டுமல்லாமல் இன்ன பிற பாத்திரங்களில் வரும் அத்தனைப் பெண்களும் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.

மற்றபடி தேவ் மற்றும் தேவிகாவின் இளமை படம் முழுவதும் சிறகடித்து பறக்கிறது. ரொம்பவும் அவர்களை நடிக்க விட்டுவிடாமல் கொஞ்சமாக நடிக்க வைத்திருப்பதே அழகாக இருக்கிறது.

“தேவிகாவுக்கு கல்யாணம் ஆகி இருந்தாலும் பரவாயில்லை.. அவருக்கு டைவர்ஸ் வாங்கித் தந்து நானேதான் அவரைக் கட்டுவேன்..!” என்று ஒற்றைக் காலில் நின்று அடம்பிடிக்கும் விஜே நிக்கி, காமெடியன் இல்லாத குறையைப் போக்குகிறார்.

இவர்களுடன் ஆகாஷ் பிரேம்குமார், ஸ்வாதி நாயர், பூஜா, கிரி துவாரகிஷ், படவா கோபி, யுவராஜ் கணேசன் உள்ளிட்ட பிற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சரியான அளவுகோலில் நடித்திருப்பதும் இயக்குனரின் திறமைதான்.

சகிஷ்மா சேவியன் பின்னணி இசை படத்திற்கு  வலு சேர்த்தாலும் பாடல்கள் எல்லாம் ஏதோ கிணற்றுக்குள் இருந்து ரெக்கார்டிங் செய்தது போல் ஒலிப்பது ஏன் என்று தெரியவில்லை.

நான்கு பேர் சேர்ந்து திரைக்கதை வசனத்தை எழுதி இருந்தாலும் அதற்குரிய அவுட்புட் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

படத்தை இயக்கியிருக்கும் சாம்.எஸ், இன்னும் குழப்பம் இல்லாமல் கதையைச் சொல்ல முயற்சித்து இருக்கலாம். 

நகைச்சுவைப் படமாக இருந்தாலும் படம் முழுவதும் சிரிக்க முடியவில்லை. ஆனால் இளமையிலும் அழகியலிலும் தப்பித்துக் கொள்கிறது படம்

யோலோ – இளமை இதோ இதோ..!

– வேணுஜி