புராணம் தெரிந்தவர்கள் யசோதா என்ற பெயரைக் கேட்டால் இன்னொருவர் குழந்தைக்குத் தாயானவள் என்று புரியும். இந்த டைட்டிலை விட வேறு எந்த டைட்டிலும் இந்தப் படத்துக்குப் பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை.
சமீப காலத்தில் பெரிதும் செய்திக்கு உள்ளாகும் வாடகைத்தாய் விஷயம்தான் படத்தின் ‘ கரு ‘.
குழந்தை இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக வரலட்சுமி சரத்குமார் நடத்தும் ஒரு தனியார் மருத்துவமனை ரகசியமாக இப்படி வாடகைத் தாயாக விரும்பும் பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளை தருகிறது. அங்கு வந்து தன் தங்கைக்காக வாடகைத் தாயாகிறார் சமந்தா.
அங்கு அவருக்கு நேரும் வினோத அனுபங்கள்தான் கதை. அவருக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்கும்தான் அவை திடுக்கிடும் அனுபவங்கள். அதைக் கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் ஹரி ஹரீஷ்.
இதற்கிடையில் ஒரு மாடல் விபத்தில் இறக்க, அது விபததல்ல கொலை என்று மோப்பம் பிடித்து, சம்பத்ராஜ் தலைமையில் ஒரு போலீஸ் டீமைக் களத்தில் இறக்குகிறார் போலீஸ் கமிஷனர் முரளி ஷர்மா.
இந்த இரண்டு கதையும் பின்னும் இடத்தில் இரண்டுக்குமான தொடர்பு முடிச்சு இறுகி உறைய வைக்கும் ஒரு குற்றமாக அது ஆகிறது.
அற்புதமான உடற்கட்டும் இளமையும் கொண்ட சமந்தா இதில் கர்ப்பிணியாக நடிக்க ஒத்துக் கொண்டதை முதலில் பாராட்டியாக வேண்டும். பரிதாபமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போதும் சரி, வீரப் பெண்ணாக மிளிரும் போதும் சரி அவரது எக்ஸ்பிரஷன்கள் அற்புதம்.
அத்துடன் முதல் நிலை ஹீரோக்களுக்கு இணையாக அவர் சண்டையும் போட்டு இருக்கிறார் என்பது ஆகப்பெரிய ஆற்றல்.
அவருக்கு எதிர்முனையில் வில்லியான வேடம் ஏற்றிருக்கும் வரலட்சுமி சரத்குமாரையும் அப்படி ஒரு நெகட்டிவ் ரோல் ஏற்று நடித்ததற்காக பாராட்டியாக வேண்டும். எதையும் எதிர்கொள்ளும் துணிவும் கர்வமும் கொண்ட அந்த பாத்திரத்துக்கு வரலட்சுமி மெத்த பொருத்தமாக இருக்கிறார்.
ஆனால் ‘ அழகு ‘ என்று வரும் இடங்களில் எல்லாம் ” அலகு ” என்று அவர் உச்சரிப்பதுதான் அழகாக இல்லை.
டாக்டராக வரும் உன்னி முகுந்தன் சமந்தாவின் காதலுக்கு இலக்காகும்போது முகுந்தனுக்கு இப்படி ஒரு முகம் பின்னால் இருக்கும் என்று அவர் மட்டும் அல்ல, நாமும் எதிர்பார்க்கவில்லை.
மந்திரி ராவ் ரமேஷ் , போலீஸ் பயிற்சி அதிகாரி சம்பத் ராஜ் , போலீஸ் அதிகாரி சத்ரு , போலீஸ் கமிஷனர் முரளி சர்மா , மற்றும் கர்ப்பிணிகளாக வரும் மதுரிமா ,காவ்யா ,கல்பிகா கணேஷ் ,திவ்யா ஸ்ரீபதா, பிரியங்கா சர்மா என அனைவருமமே பாத்திரங்களில் ஒன்றி இருக்கிறார்கள்.
மணி சர்மா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கச்சிதம். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தை பிரம்மாண்டப்படுத்தி இருக்கிறது.
வாடகைத் தாய்களை வைத்துக் குழந்தைகள் பிறக்கச் செய்து அதில் தான் பெரிய லாபம் சம்பாதிக்கிறார்கள் என்று பார்த்தால் அந்த குழந்தைகளை வைத்து இவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற உண்மை தெரிய வரும்போது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
அங்கங்கே சினிமாவுக்காக சில லாஜிக் மீறல்கள் இருப்பதால் அந்த இடங்களில் மட்டும் இது சினிமா என்று தெரிய வந்து விடுகிறது.
ஆனாலும் கனமான கதையம்சம் கொண்ட இந்த படம் பெண்களின் பேராதரவை பெரும் என்பதோடு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு கமர்சியல் படமாகவும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
யசோதா – சக்தி வடிவம்..!