வழக்கமாக ஆவி கதைகள் எனப்படும் ஹாரர் வகைப் படங்கள் எல்லாம் சஸ்பென்ஸ் திரில்லராக ஆரம்பித்து கடைசியில் ஆவியில் வந்து முடியும். ஆனால் இந்தப்படத்தில் ஒரு ஹாரர் படம் போல ஆரம்பித்து கடைசியில் சஸ்பென்ஸ் திரில்லராக முடித்திருக்கிறார் இயக்குனர் சந்தீப் சாய்.
படம் முழுக்க நிறைந்து இருக்கிறார் அறிமுக நாயகன் வெங்கட் ரெட்டி. முதல் பட நாயகனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது என்றிருக்க இவரே படத்தின் தயாரிப்பாளராகவும் இருப்பதால் அது வாய்த்திருக்கிறது என்று சொல்லலாம்.
இறந்து போன அப்பாவின் நினைவாக அவர் கட்டி வைத்திருக்கும் பிரம்மாண்ட பங்களாவில் வாழ்ந்து வரும் வெங்கட் ரெட்டி ஒரு பொறியாளராக இருக்கிறார். அப்பாவின் அந்த அதி நவீன வீட்டுக்குள் ஒரு தனி மனிதனாக வாழ்ந்து வர அடிக்கடி அங்கே வினோத காட்சிகள் அவருக்கு தெரிய அச்சம் கொள்கிறார்.
தன்னை யாரோ தொடர்ந்து குறி வைப்பதாக உணரும் அவர் நண்பனின் உதவியுடன் போலீசுக்கும் போய் பார்க்கிறார். அதிலும் விடை கிடைக்காமல் ஒரு ரவுடியை துணைக்கு வைத்துக் கொள்கிறார். அவரது ஆலோசனைப்படி ஒரு மந்திரவாதியை அழைத்து வந்து வீட்டை சோதனை இடுகின்றனர். ஆனால் அங்கு வந்த மந்திரவாதியும் இறந்து போக இன்னும் சஸ்பென்ஸ் கூடுகிறது.
இன்னொரு பக்கம் அவர் வேலை செய்யும் நிர்வாகத்தின் பெண் பெண் முதலாளியே அவரது வீட்டை அபகரிப்பதற்காக ஆட்களை அனுப்பி முயற்சி செய்கிறார் என்றும் அதற்கு நண்பனே உதவி செய்கிறான் என்றும் ஒரு கட்டத்தில் புரிந்து கொள்கிறார்.
இன்னொரு பக்கம் நாயகி உபாசனாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறார். அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் உபாசனாவாக இருக்க ஒரு கட்டத்தில் அந்த உபாசனா இன்னொரு இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்து இவரை தவிர்த்து விடுவதாகத் தோன்ற என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மனநோய் மருத்துவரை நாடுகிறார்.
அங்கிருந்து எல்லாமே விசித்திரமாக போக இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள் எல்லாமே இன்னும் விசித்திரமாக ஆகி ஒரு கட்டத்தில் எல்லா குழப்பங்களுக்கும் விடை கிடைக்க படம் முடிகிறது.
தனக்காக உருவாக்கிக்கொண்ட வாய்ப்பை வெங்கட் ரெட்டி சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சொல்லமுடியும். கட்டான சிக்ஸ்பக் உடற்கட்டோடு ஒரு நாயகனுக்கு உரிய இலக்கணங்களொடன் தோன்றுகிறார். பிளாஷ்பேக்கில் வரும் அவரது அப்பாவாகவும் அவரே தோன்றுவது ஆச்சரியம். அத்துடன் இருக்கும் இளைய வேடத்திலும் இரண்டு மூன்று கெட்டப்புகளில் வந்து அசத்துகிறார்.
இறந்துபோன சாமியார் உடலை மறைக்க முயல அந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வந்துவிட அவரது பதட்டமே அவரைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று தோன்றுகிறது. அந்த இடத்தில் கொஞ்சம் நடிப்பை அடக்கி வாசித்திருக்கலாம்.
நாயகியாக வரும் உபாசனாவின் உயரம் மலைக்க வைக்கிறது. ஒரு சில காட்சிகளில் வந்தாலும் வனப்பில் கவர்கிறார். ஒரு கட்டத்தில் வெங்கட் ரெட்டி காதலிப்பதும் இன்னொரு கட்டத்தில் அவரை தெரியாதது போல நடிப்பதற்கும் லாஜிக் சரியாக இருக்கிறது.
படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும் வெங்கட் ரெட்டியின் ‘ஜிம் மேட்ஸ்’ போலிருக்கிறது. எல்லோரும் கட்டான உடலில் கவர்கிறார்கள்.
கே.பி.பிரபுவின் ஒளிப்பதிவும் இசையும் தேவைக்கேற்ற அளவில் இருந்தாலும் இந்த திரில்லர் படத்துக்கு இன்னும் உயிரூட்டி இருக்கலாம்.
சஸ்பென்ஸ் திரில்லர் என்பதால் முதல் பாதியில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டாலும் இரண்டாவது பாதியில் அதை சரிக்கட்ட இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார்.
எல்லோருக்கும் முதல் படம் என்ற அளவில் ஆரோக்கியமான முயற்சியாகவே படுகிறது இந்த படம்.
சினிமாவை நேசிக்கும் வெங்கட் ரெட்டி போன்றவர்களால்தான் மீடியம் பட்ஜெட் படங்கள் சினிமாவை உயிர்ப்போடு வைக்கின்றன. அந்த வகையில் குறைகளை மறந்து இந்த முயற்சியைப் பாராட்டலாம்.
படத்தின் இறுதி காட்சி யாரோ படத்தின் இரண்டாவது பகுதியும் தொடருமோ என்று நினைக்க வைக்கிறது.
யாரோ – முடிவல்ல ஆரம்பம்..!