April 25, 2024
  • April 25, 2024
Breaking News
March 9, 2022

அறுவை சிகிச்சை இன்றி பேஸ்மேக்கர் – சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை சாதனை

By 0 591 Views
சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் டாக்டர் பாபு ஏழுமலை தலைமையிலான இதய பிரிவு மருத்துவர் குழு, முதல் முறையாக இரட்டை அறை பேஸ்மேக்கர் கருவியை அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அதுவும் இந்த பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நோயாளர்கள் இருவரும் வயது முதிர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
92 வயது கொண்ட முதியவர் ஒருவர் அடையாறு ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு அடிக்கடி மயக்கம் அடையும் பிரச்சினையால் வந்தார். அவரது இதயம் முழுமையாக அடைபட்டு நிமிடத்திற்கு 33 இதயத்துடிப்பு மட்டுமே இருந்திருக்கிறது. அங்கு கம்பியற்ற பேஸ்மேக்கரை பொருத்தும் சிகிச்சை முடிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் வீடு திரும்பி அன்றாட வேலைகளை செய்யத் தொடங்கி இருக்கிறார்.
 
அதேபோல் 60 வயதுடைய இன்னொரு நோயாளர் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையில் சிறுநீரகப் பிரச்சனை கொண்டும், கோவிட் நிமோனியா மற்றும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகளுடனும் போர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மாரடைப்புடன் குறைந்த இதயத்துடிப்பும் இருந்திருக்கிறது. 
 
அவருடைய வழக்கமான டயாலிசிஸ் நடைமுறையை பாதிக்காத வரையில் டாக்டர் பாபு தலைமையிலான மருத்துவக் குழு தீர்வை காண முற்பட்டதில் அதிக பலன் தரக்கூடிய 2 இதய அறைகளுக்கான கம்பியற்ற பேஸ்மேக்கரை பொருத்துவது என்று தீர்மானித்து அப்படி அறுவை சிகிச்சையில்லாமல் பொருத்தியதில் அவர் இன்றைக்கு வழக்கமான நடைமுறைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
 
அந்த நோயாளரை பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்றைக்கு அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் நடந்தது.
 
இந்த நிகழ்வின் போது போர்டிஸ் மலர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ கண்காணிப்பாளர் சோபியா அன்செட்டா, சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் பாபு ஏழுமலை, ஃபெஸிலிடி டைரக்டர் ஆர். சந்திரசேகர் உடன் இருந்தனர்.
 

Doctor Babu Ezhumalai

இந்த கம்பிகள் அற்ற இரண்டு அறைகள் கொண்ட பேஸ்மேக்கரை வெற்றிகரமாக அவருக்கு பொருத்திய பாபு ஏழுமலை கூறுகையில், “எங்கள் மருத்துவர்களுக்கு இந்த இரண்டு வயதான நோயாளர்களும் சவாலான வகையில் இருந்தனர்.

 
இந்த கம்பிகள் அற்ற பேஸ்மேக்கர் இரண்டு கிராம் மட்டுமே எடை அளவில் இருப்பதால் இதனை இதயத்தில் அறைக்குள்ளேயே பொருத்துவது எளிதாகிறது. இதை அறுவை சிகிச்சை இல்லாமல் கதீட்டர் என்ற முறையிலேயே ரத்த நாளங்கள் வழியாக செலுத்தி விட முடியும். அத்துடன் இந்த சிகிச்சை முடிந்து 24 மணி நேரத்தில் வீடு திரும்ப முடிகிறது. இந்த பேஸ்மேக்கர் ஆயுள் மிகவும் அதிகமாக இருக்கிறது.
 
ஒருவரின் பேஸ்மேக்கர் செயல்ப்பாடு முடிந்து விடும் பட்சத்தில் புதிய பேஸ்மேக்கரை பொருத்தும் போதும் அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை. வழக்கமாக அறுவை சிகிச்சை செய்யப்படும் இடத்தில் தோன்றும் நோய்த்தொற்றும் இதில் ஏற்படுவதில்லை.
 
அத்துடன் ஒரு பேஸ் மேக்கர் செயல்பாடு முடிந்த நிலையில் இன்னொரு பேஸ்மேக்கர் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் பழைய பேஸ்மேக்கரை எடுக்காமலேயே இன்னொரு பேஸ் மேக்கரையும் பொருத்திக்கொள்ள முடியும்..
 
இந்த புதிய முறை பேஸ்மேக்கர் தொழில்நுட்பத்தில் உள்ள வசதி என்னவென்றால் இது கிட்டத்தட்ட இயற்கையான இதயத்திற்கு இணையாக வேலை செய்வதுதான். இதயம் துடிப்பதற்கு தேவைப்படும் மின்சாரத்தை இது தேவையான நேரத்தில் கொடுத்து இதயத்துடிப்பு குறையும் நேரத்தில் அதை சீராக்கும்..
!” என்றார்.
 
புதிய முறை பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட 60வயது நோயாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட பின் இயல்பான வாழ்க்கையை என்னால் மேற்கொள்ள முடிகிறது. காலையில் எழுந்ததும் 45 நிமிடம் மூச்சு வாங்காமல் நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன். அத்துடன் வாரம் ஒருமுறை நீரிழிவுக்கு டயாலிசிஸ் செய்து கொள்வதும் எளிதாக இருக்கிறது. முன்புபோல் மூச்சிறைப்போ, களைப்போ இல்லாமல் இயல்பான முறையில் இருக்கிறேன்..!” என்றார்.
 
வெற்றிகரமான இந்த சிகிச்சைகள் குறித்து ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் ஃபெஸிலிடி டைரக்டர் திரு ஆர். சந்திரசேகர் கூறும்போது, “இரண்டு இதய அறைகளுக்கான கம்பியற்ற பேஸ்மேக்கர் தொழில்நுட்பம் என்பது வயது முதிர்ந்த நோயாளர்கள், டயாலிசிஸ் நிலையில் இருப்பவர்கள், ரத்தம் அடர்த்தியாகாமல் இருப்பதற்கு மருந்து எடுப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
 
அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளர் நீண்ட நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டுமே என்ற கவலையையும் இது குறைக்கிறது. வழக்கமான மற்ற சிகிச்சைகளுக்கு மாறாக இந்த சிகிச்சை முடிந்தவுடன் ஒருவர் இயல்பான வாழ்க்கைக்கு மிக விரைவாக திரும்பலாம். மற்றுமொரு புதிய மருத்துவ மைல்கல்லை தொட்ட டாக்டர் பாபு ஏழுமலை மற்றும் மருத்துவ நிபுணர்கள், தொற்று கட்டுப்பாட்டாளர்கள், மயக்க மருந்து நிபுணர், டயட்டீஷியன், செவிலியர்கள் அடங்கிய பல்துறை நிபுணர்களின் ஒருங்கிணைப்புக்கும் செயல்பாட்டுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்..!” என்றார்.