தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு ஊடரங்கு காலம் முடிவதற்கு முன் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி கருத்துக்களை பெற்று அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வந்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை முழுவதுமாக தளர்த்தக்கூடாது. படிப்படியாக தளர்த்த வேண்டும். சென்னையில் எந்த தளர்வும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியது. அதேபோன்றுதான் தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்தது.
4-வது ஊரடங்கு காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது மருத்துவக்குழு சார்பில் சென்னையில் கொரோனா பாதிப்பு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் இருப்பது போன்ற கருத்துக்களை எடுத்துக்கூறியதாக தெரிகிறது.
அப்போது 31-ந்தேதிக்குப்பின் பொதுமுடக்கத்தை தளர்த்த வேண்டாம் என்றும் வலியுறுத்தியதாக தெரிகிறது.
பொதுவாக முதலமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் மருத்துவக்குழு சார்பில் செய்தியாளர்களை சந்திப்பார்கள். ஆனால் இன்று மருத்துவக்குழு பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.
இதனால் வருகிற 30-ந்தேதி பொது முடக்கம் வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Related