நம்மை வாழ்வில் அதிகம் சிரிக்க வைத்தவர்களின் வாழ்க்கை நிறைய நேரங்களில் சோகமாகவே முடிவதை பார்த்திருக்கிறோம்.
உலகின் நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் தொடங்கி கலைவாணர் என் எஸ் கே தொடர்ந்து சந்திரபாபு வரை பல நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கை சோகத்திலேயே முடிந்திருக்கிறது.
அப்படி ‘ சின்ன கலைவாணர் ‘ என்று அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் பல படங்களில் நம்மை சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர்.
அத்துடன் சமூக ஈடுபாட்டோடு மரங்களை நடுவதில் மிக்க ஆர்வம் கொண்டு பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு சாதனை புரிந்திருக்கிறார். கலைத்துறை மூலமாக அவரது சமூக அக்கறைக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது உலகறிந்த விஷயம்.
இப்போதும் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அவர் வந்த உடன் கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டார். போட்டு கொண்டதுடன் மட்டுமல்லாமல் மற்றவர்களையும் அதை ஊக்கப்படுத்தும் விதத்தில் தொலைக்காட்சி வாயிலாக பேட்டியும் அளித்தார். இந்த சம்பவம் நேற்று நடந்தது.
ஆனால் இன்று காலை அவர் சுயநினைவை இழந்து வடபழனியில் உள்ள SIMS மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது மருத்துவர்களை அதிர்ந்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட பரிசோதனைகள் வாயிலாக அவரது இருதயத்திற்கு வரும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததாகவும் அதனை ஆஞ்சியோ பிளாஸ்ட் முறையில் அகற்றி அவரது ரத்த ஓட்டத்தை சீர் செய்ததாகவும், இப்போது அவர் உயிர் காக்கும் ‘ எக்மோ ‘ கருவியுடன் பிணைக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
இதை கேள்விப்பட்டதும் எல்லோருக்கும் எழுந்த ஒரு கேள்வி அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் இப்படி பாதிக்கப்பட்டாரா என்பதுதான். அதற்கு சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளரிடம் கூறும்போது ‘ தடுப்பூசி போட்டுக் கொண்டதால் இப்படி ஆகவில்லை. இது இயல்பாக நேர்ந்த ஆரோக்கிய பாதிப்புதான்…’ என்று தெளிவுபடுத்தினார்.
சரி… சிகிச்சை தான் முடிந்து விட்டதே… அவர் நலமாக இருக்கிறார் என்று சொல்வார்கள் என்று நாம் எதிர் பார்த்தால் இன்னும் 24 மணி நேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என்று ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார்கள்.
எனவே அவர் மீண்டும் நலமடைந்து மீண்டும் நடிக்க வர வேண்டும் சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்றுதான் எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். அதையே நாமும் வேண்டுவோம்..!
உண்மையில் அவருக்கு என்னதான் நடந்தது என்பதை மருத்துவ உலகம் தான் நமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.