July 27, 2024
  • July 27, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அழிவில்லாத சத்யராஜ் வில்லனாக ராஜீவ் மேனன் – வெப்பன் சுவாரஸ்யம்
August 2, 2023

அழிவில்லாத சத்யராஜ் வில்லனாக ராஜீவ் மேனன் – வெப்பன் சுவாரஸ்யம்

By 0 251 Views

கொஞ்சம் துரிதமாகவோ அல்லது தாமதமாகவோ ஹாலிவுட் என்ன முயற்சி எடுக்கப்படுகிறது அது கோலிவுட்டுக்கும் வந்துவிடும்.

அப்படி சூப்பர் ஹீரோக்கள் படங்கள் பல கோடி வீட்டில் வந்து கொண்டிருக்க சூப்பர் ஹியூமன் பற்றிய படம் ஒன்றை வெப்பன் என்று தலைப்பிட்டு வரவிருக்கிறது.

அந்தப் படத்தில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒரு சூப்பர் ஹியூமனாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார் சத்யராஜ். பார்வைக்கு மனிதனைப் போலவே தோற்றமளிக்கும் அவர் உண்மையில் ஒரு மெஷின்தான். கேட்கவே சுவாரஸ்யத்தை தரும் அந்தப் படம் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

‘சவாரி’ திரைப்படம் மற்றும் ‘வெள்ள ராஜா’ இணையத் தொடரை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தன்யா ஹோப், மாயா, மைம் கோபி, கனிகா, யாஷிகா ஆனந்த், ராஜீவ் பிள்ளை, கஜராஜ், வேலு பிரபாகரன், பரத்வாஜ் ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில் விரைவில் ’வெப்பன்’ படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் மற்றும் தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பகிர்ந்து கொண்டார்கள்.

குகன் சென்னியப்பன் இந்தப் படத்தைப் பற்றிக் கூறும்போது, “வழக்கமாக சூப்பர் ஹியூமன் கதாபாத்திரங்கள் எல்லாமே மனித குலத்துக்கும் ஒரு சமூகத்துக்கும் ஆபத்து வருகையில் அதில் தங்களது சக்தியைப் பயன்படுத்தி மக்களைக் காப்பதாகவே  அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அப்படி வழக்கமான படமாக இருக்கக் கூடாது என்பதற்காக என் கதையில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் சத்யராஜ் என்ற பாத்திரம், தன்னைக் காத்துக் கொள்வதற்காக எப்படி போராடுகிறது என்று சொல்லி இருக்கிறேன்.

இப்படியான சூப்பர் ஹியூமன்கள் கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்திலேயே இந்தியாவில் ஒரு சிறுவனுக்கு உடலில் மின்சாரம் ஓடிக்கொண்டு… அவன் மீது எந்த பல்பை வைத்தாலும் அது எரிவதாகவும் பார்க்கிறோம். இதுபோன்று அரிய சக்தி படைத்த நிறைய மனிதர்கள் நம்முடன் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே சூப்பர் பவர் கொண்டவர்கள் தான்.

அப்படி சூப்பர் ஹியூமன்களைத் தேடிக் கண்டுபிடித்து தன்னுடைய தளத்தில் வெளியிடும் யூட்யூபராக வருகிறார் வசந்த் ரவி. அவர் சத்யராஜைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரது வீடியோவை எடுக்க வருகையில் நேரும் விஷயங்கள்தான் படத்தின் கதை.

இதில் வில்லனாக என்னுடைய குருநாதர் ராஜீவ் மேனனை நடிக்கக் கேட்டுக் கொண்டேன். அவரும் கதை பற்றி நிறைய சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்ற பின்னரே இதில் நடிக்க ஒத்துக் கொண்டார்.

இதுபோன்ற சூப்பர் பவர் கொண்ட ஹீரோக்களைப் பற்றிய படங்கள் ஹாலிவுட்டில் நிறைய வந்துவிட்டன ஆனால் அவற்றில் எல்லாம் மிகப்பெரிய பட்ஜெட்டைக் கொண்டு அவர்களுடைய சாகசங்களைக் காட்டுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

நமக்கு இந்தக் களம் புதிது என்பதால் அப்படிப்பட்ட முயற்சியை இதில் மேற்கொள்ளாமல், சத்யராஜ் எப்படி உருவானார், அவருடைய சக்திகள் என்ன, அவர் தன் சக்திகளை காத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்தார் என்கிற அளவுடன் கதை சொல்லி இருக்கிறோம். இது நம்முடைய பட்ஜெட்டுக்குப் பொருத்தமாக இருப்பதோடு நம் கலாச்சாரப்படி அவரைப் புரிந்து கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கிறது.

இந்தப் படம் வெற்றி பெறும் பட்சத்தில் இதனுடைய அடுத்தடுத்த பாகங்களையும் எடுக்கவிருக்கிறோம். அதில் இன்னும் கூட பட்ஜெட் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது..!” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் மன்சூர் பேசுகையில், “இந்தப் படத்தின் களமே வித்தியாசமாக இருந்ததால் இதை விருப்பத்துடன்தான் தயாரித்தோம். அதே விருப்பத்துடன் மக்களும் வந்து இந்தப் படத்தைப் பார்க்கும் பொருட்டு நெருக்கடிகள் இல்லாத செப்டம்பர் மாதத்தில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறோம்..!” என்றார்.