May 3, 2024
  • May 3, 2024
Breaking News
August 2, 2023

கல்லறை திரைப்பட விமர்சனம்

By 0 312 Views

கல்லறை என்று தலைப்பு வைத்து விட்டதாலோ என்னவோ கொடைக்கானலில் தொடங்கும் முதல் காட்சியில் ஒரு கல்லறையைக் காட்டி விடுகிறார் இயக்குனர் ஏ.பி.ஆர்.

தன் இரு மகள்களோடு கொடைக்கானல் வருகிறார் புதுப் பணக்காரர். சொந்தமான  சொகுசு பங்களாவில் மூவரும் தங்கி, தன் இளைய மகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.

அந்தப் பெண்ணுக்கு நோய் என்று எதுவும் இல்லை. ஆனால் போதைப் பழக்கத்துக்கு அடிமையானதால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார் அந்தப் பெண். அதற்கு அங்கிருக்கும் மருத்துவர் சொல்லும் ஒரு உபாயம் – ‘உடனடியாக போதை மருந்து நிறுத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக போதை மருந்து கொடுத்து அதன் அளவை குறைத்து தான் நிறுத்த வேண்டும்’ என்பதுதான்.

அதனால் சட்டத்துக்குப் புறம்பாக போதைப் பொருள் கடத்தும் தனது நண்பன் ஒருவன் வழியாக போதை காளான்களை வரவழைக்கிறார். அதை சப்ளை செய்யும் மூன்று இளைஞர்கள் பக்கா ரவுடிகளாக இருக்க, அவர்கள் அந்த வீட்டுப் பெண்கள் மீதும் கண் வைக்கிறார்கள்.

இதற்கிடையில் அந்த பங்களாவுக்குள் ஒரு ஆவி இருப்பதும் தெரிய வருகிறது.

ரவுடிகளின் கெட்ட எண்ணம் பலித்ததா, ஆவி தன்னுடைய ரத்தப் பசியைத் தீர்த்துக் கொண்டதா என்பதுதான் மீதிக்கதை.

நாயகனாக வரும் ரமேஷ் ஜி அவர் ஏற்று இருக்கும் இன்ஸ்பெக்டர் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார். அவருக்கு ஒரு ஆக்ஷன் காட்சியாவது கொடுத்திருக்கலாம்.

திவான் சைசில் இருந்தாலும் நாயகி தீப்தி திவான், கவரவே செய்கிறார். ஏதோ ஒரு சாயலில் மீரா ஜாஸ்மின் போல இருக்கிறார் என்றால் மீரா ஜாஸ்மின் கோபித்துக் கொள்ள நேரிடும். அந்த ‘ கன பாடி ‘ யை வைத்துக்கொண்டு அவர் உடற்பயிற்சி  செய்வது துணிச்சல்தான்.

எல்லோருமே புது முகங்களாக இருக்க நடிப்பு பற்றி நாம் பெரிதாக எதிர்பார்க்க வாய்ப்பில்லைதான். ஆனால் தயாரிப்பாளரான ரதி ஜவஹரே ஒரு பெண் மருத்துவர் வேடத்தில் நடித்திருப்பது ஆச்சரியம்.

அவரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் சேர்ந்து படத்தின் இறுக்கத்தை குறைக்க கொஞ்சம் லூட்டி அடிக்கிறார்கள்.

ஏ கே ராம்ஜியின் இசையில் ஆடூர் பாலா எழுதிய பாடல்கள் படத்தில் பாடல்கள் இல்லை என்ற குறை இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.

ஒலிப்பதிவுதான் பக்கத்து வீட்டு ரேடியோவில் பாடும் பாடல் போல எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பட்ஜெட் படம் என்றாலும் பிரித்வி ராஜேந்திரன் தன்னால் ஆன லொகேஷன்களைப் படம் பிடித்திருக்கிறார். நாயகியே ஓரிடத்தில் நாயகனிடம் கேட்பது போல இன்னும் நல்ல லொகேஷன்களுக்கு சென்றிருக்கலாம். 

படத்தில் கடைசியில் மிஞ்சுவது நாயகனும் நாயககியும்தான் என்ற அளவில் மற்றப் பாத்திரங்கள் எல்லோருமே கொல்லப்படுகிறார்கள். அதற்கு ஒரு நியாயமும் இருப்பது நல்ல விஷயம்.

ஆனால் சிகிச்சைக்கு வந்த தீப்தியின் தங்கையை ஆவி கொன்றதில் எந்த நியாயமும் இல்லை.

குறைந்தபட்சம் அந்த ஆவி மட்டுமே அந்த வீட்டில் தங்கி இருக்கிறது என்று சொல்லியாவது படத்தை முடித்து இருந்தால் இதன் இரண்டாம் பாகத்துக்கான ‘ லீட் ‘ போன்று இருந்திருக்கும்.

கல்லறை – பட்ஜெட்டுக்குள் பழிதீர்த்த ஆவி..!