June 9, 2026
  • June 9, 2026
Breaking News
May 25, 2026

வாரண்ட் (Zee 5 Original) இணையத் தொடர் விமர்சனம்

By 0 105 Views

தமிழ் இணையத் தொடர்கள் மீது ரசிகர்களின் கவனம் பதியத் தொடங்கியதே Zee5 -ல் வெளியான ‘விலங்கு ‘ இணையத் தொடருக்குப் பிறகுதான். 

அதை எழுதி இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இந்த வாரண்ட் தொடரின் கதையை எழுதி இருப்பதோடு கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். 

காவல்துறை பற்றிய நாம் அறியாத விஷயங்கள் இவருக்கு மட்டும் எப்படித் தெரிகின்றனவோ தெரியவில்லை. 

விலங்கு தொடர் போலவே இந்த தொடரிலும் காவல்துறைக்கு உள் நடக்கும் அனைத்து விஷயங்களையும் இதில் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார்.

கதை இதுதான்.

அப்பா பாலாஜி சக்திவேல் ஆசைப்படுவதன் பேரில் அவர் சொல்லும் எல்லா அரசுத் தேர்வுகளையும் சந்தித்து எழுதிக் கொண்டிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். ஆனால் அவை எதிலும் தேர்வு பெறாத நிலையில் போலீஸ் துறையில் இருக்கும் உறவினர் காளி வெங்கட்டின் ஆலோசனைப்படி உள்ளடி வேலைகள் செய்து போலீஸ் துறையில் சேர்கிறார்.

எப்படியோ மகனுக்கு ஒரு அரசு வேலை கிடைத்ததில் அப்பாவுக்கு ஆனந்தம். ஆனால் அப்பாவியாகவே வளர்ந்த பிரசாந்த் பாண்டியராஜுக்கு அந்த வேலை இதுவரை வாழ்வில் சந்திக்காத நெருக்கடிகளைத் தருகிறது.

அவமானம், அபாயம், அச்சம் என்று நாள் ஒரு மேனி பொழுதொரு உணர்வுகளுமாக காலம் கடத்தும் அவருக்கு ஒரு கட்டத்தில் இந்த வேலையில் தாக்குப் பிடிக்க முடியாது என்று தோன்றுகிறது. 

ஆனாலும் தன்னை அவமானத்துக்கு உள்ளாக்கியவர்களுக்கு தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்ய அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்குகிறது.

அதிலிருந்து அவரால் மீண்டு வர முடிந்ததா… இல்லையா ? என்பதைச் சொல்வதுதான் ‘வாரண்ட்’.

ஆள் வளர்ந்திருந்தாலும் அமைதியான வெகுளித்தனமான இளைஞர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.

ஆரம்பத்தில் ஒரு அக்யூஸ்டைப் பிடிக்கப் போகும்போது ஏற்படும் பதட்டத்தை அற்புதமாக வெளிக்காட்டி இருப்பவர், தன் நிலையை மாற்றுவதற்காக எடுக்கும் அதிரடி நடவடிக்கையில் அதற்கு நேர் எதிரான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திகைக்க வைத்திருக்கிறார். 

இந்தக் கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு நமக்கு நன்றாகத் தெரிந்த எந்த நடிகர் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு அதில் பொருந்தி இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

நாயகிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத கதை என்றாலும் நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி திரைக்கதையின் சீரியஸ் தன்மையை குறைக்க உதவியிருக்கிறார்கள்.

இவர்களுள் சாயா தேவியின் கதாபாத்திரமும் நடிப்பும் அதிகம் ரசிக்க வைக்கின்றன.

பிரசாந்த் பாண்டியராஜின் தந்தையாக வரும்  பாலாஜி சக்திவேல் நடிப்பு அபாரம். தன் விருப்பப்படி மகன் அரசு வேலைக்குப் போக வேண்டும் என்று விரும்பினாலும் அதற்காக அவனைக் கடிந்து கொள்ளாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் அவரது பாத்திரம் படு இயல்பு. 

அத்துடன் பிரசாந்தின் அம்மாவாக நடித்திருக்கும் கெளசல்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அருள்தாஸ், காவலராக நடித்திருக்கும் ஹெலோ கந்தசாமி உள்ளிட்டோர் அனைவருமே தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஒரு கேமராவை நிறுத்திப் படம் பிடித்தது போலவே தெரியவில்லை, அந்தக் காவல் நிலையத்துக்குள் நாமே போய் வந்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி வடுகிறார் ஒளிப்பதிவாளர் அசோக் குமார்.

இந்தத் தொடருக்கான சாம்.சி.எஸ் சின் தீம் மியூசிக் அபாரம். பின்னணி இசையிலும் வர வர மேம்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

சினிமா பாணியில் இருந்து வித்தியாசப்படும் இணைய தொடர்களின் தேவையறிந்து படத்தொகுப்பை கவனத்திருக்கிறார் ஆர்.ராமர். 

பிரசாந்த் பாண்டியராஜுடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் விக்னேஷ் நடராஜன், அத்தனை அத்தியாயங்களையும் ரசனை குறையாமல் உணர்வுப்பூர்வமாக இயக்கியிருக்கிறார்.

அங்கங்கே இயல்புக்காக வரும் தகாத வார்த்தைகள் மட்டும் இது ஓடிடி இணையத் தொடர் என்று நம்ப வைக்கிறது. மற்றபடி ஒரு அற்புதமான க்ரைம் நாவல் படித்த சுவாரசியத்தை எள்ளளவும் குறையாமல் கொடுத்திருக்கிறது இந்தத் தொடர்.

‘வாரண்ட்’  – ரசனைக்கு கேரண்டி..!

– வேணுஜி