November 22, 2024
  • November 22, 2024
Breaking News
July 30, 2022

விக்ராந்த் ரோனா திரைப்பட விமர்சனம்

By 0 528 Views

இன்றைக்கு பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டி விட்டது. ஆனால், அதுவே ஆறு ரூபாய்க்கு விற்ற காலத்தில் நடக்கிற கதை என்கிறார்கள். அதை ஒரு ஃபேன்டஸி திரில்லராகக் கொடுத்திருக்கிறார் எழுதி இயக்கி இருக்கும் ‘அனுப் பண்டாரி’.

கம்ரூட் என்ற மலை கிராமத்தை நமக்கு அறிமுகப்படுத்தும்போதே கிலி தொற்றிக் கொள்கிறது. அங்கே காரில் வரும் தாயையும் அவள் குழந்தையையும் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி கொல்வதுடன் படம் தொடங்குகிறது.

அந்தக் கிராமத்திலுள்ள வீட்டில்தான் தன் மகளின் கல்யாணத்தை நடத்துவேன் என்று பிடிவாதமாக வருகிறார் அந்த ஊர்ப் பெரிய மனிதர் மதுசூதனனின் தம்பி ரமேஷ் ராய்.

அதைக் கேட்டதும் அலறுகிறார் மதுசூதனன். அந்தப் பாழடைந்த வீட்டில் உள்ள கிணற்றில்தான் அந்த கிராமத்து காவல் அதிகாரி உள்பட பல சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. ஒரு பிரம்மராட்சசன் அவர்கள் அனைவரையும் கொன்று கொண்டு இருப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

ஒரு போலீஸ் அதிகாரியும் கொல்லப்பட்டதால் அந்த இடத்தை நிரப்பவும் கொலைகளைப் பற்றிய உண்மைகளைக் கண்டு பிடிக்கவும் வரும் இன்னொரு போலீஸ் அதிகாரிதான் விக்ராந்த் ரோனா என்கிற ஹீரோ கிச்சா சுதீப். அந்த வழக்கை விசாரிக்கையில் பல மர்மங்கள் வெளிப்படுகின்றன.

அதே கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளும் கொல்லப்பட்டிருப்பது தெரிகிறது. அந்தக் கம்ரூட் வீட்டுக்கும், கொலைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று அவர் கண்டுபிடிப்பதுதான் கதை. 

இதற்கிடையில் பெரியவர் மதுசூதனனின் மகன் சஞ்சு, கடவுளின் நகைகளைக் களவாடிய குற்றத்துக்காக சிறிய வயதில் ஊரை விட்டு ஓடி விடுகிறான். அந்த சஞ்சு இப்போது இளைஞனாகத் திரும்பி வர, அவனுக்குப் பின்னாலும் பல மர்மமான உண்மைகள் இருக்கின்றன. அந்த சஞ்சு வேடத்தை ஏற்றிருக்கிறார் நிரூப் பண்டாரி.

வில்லாக வளையும் உடல்வாகு கொண்ட கிச்சா சுதீப் படு ஸ்டைலாக வருகிறார். சாட்டையை எடுத்து விளாசுவதிலும், சண்டைக் காட்சிகளிலும், பின்னுகிறார். ஜாக்குலின் பெர்ணாண்டஸுடன் அவர் ஆடும் அந்த ‘ராக்கம்மா’ பாடலில் நடனத்திலும் அசத்துகிறார்.

சஞ்சுவாக வரும் நிருப் பண்டாரியும், அவரது காதல் கதையும் மட்டுமே டார்க்கான படத்தில் குளுமையை ஏற்படுத்துகிறது. அவர் யார் என்பதை சுதீப் கண்டுபிடிப்பதும் ஆச்சரியம்.

கிட்டத்தட்ட நாயகியாக இருக்கும் நீதா அசோக் தனது அழகாலும், நடிப்பாலும் கவர்கிறார். காமெடி பாத்திரத்துக்காக அமைக்கப்பட்ட கார் டிரைவர் கார்த்திக் ராவால் நம்மை அவ்வளவாக சிரிக்க வைக்க முடியவில்லை.

முழுக்க முழுக்க தொழில் நுட்பத்தை நம்பியே எடுக்கப்பட்ட படத்தில் 3டியும், ஒலிப்பதிவும் ஹாலிவுட் படம் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது.
 
லொகேஷன் எது, செட் எது, கிராபிக்ஸ் எது என்று பிரிக்க முடியாத அளவில் கலரிங்கும் அற்புதமாக உள்ளது. அந்த கிளைமாக்ஸ் பூத லோகம் கனவு போல் விரிகிறது.
 
இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் ‘ராக்கம்மா’ பாடலில் பின்னி, பின்னணி இசையிலும் மிரட்டி விடுகிறார்.
 
விலினியத்தின் ஒளிப்பதிவில் அவருக்கு சவாலாக இருப்பது மின்சாரம் இல்லாமல் இருக்கும் அந்தக் கிராமத்தில் இரவில் வெறும் விளக்குகளின் வெளிச்சத்தில் படப்பிடிப்பு நடத்தப் பட்டிருப்பதுதான். அதுதான் நமக்கும் சவாலாக அமைகிறது. படத்தில் பகல் எது இரவு எது என்று தெரியாமல் எல்லாமே இருட்டாக இருப்பது குறை.
 
அது மட்டுமல்லாமல் கதை நடக்கும் காலச் சூழலுக்கு ஏற்புடையதாக இல்லாமல் நவீன உடை, ஹேர் ஸ்டைலுடனேயே எல்லோரும் வருகிறார்கள். படம் ஒரே இடத்தில் நகர்வதால் அங்கங்கே அலுப்பும் ஏற்படுகிறது.
 
இது ஒரு பான் இந்தியப் படமாக இருக்க, தமிழிலேயே நமக்குப் புரியாத அளவில், திரைக்கதை, வசனமும், உச்சரிப்பும் இருப்பதும் பெரும் குறை.
 
இப்படிப்பட்ட ஒரு கதையைக் கேட்டு இதைத் தயாரிக்க மகா தைரியும் வேண்டும். அது சுதீப்பிடம் இருந்திருக்கிறது. ஆனாலும் அந்தத் தைரியம் நியாயமானதுதானா என்பதை படத்தின் ரிசல்ட்தான் சொல்ல வேண்டும். 
 
அந்த வகையில் தயாரிப்பாளர் சுதீப்புக்கு விக்ராந்த் ரோனா – வேலியில் போன ஓணான்..!