November 8, 2024
  • November 8, 2024
Breaking News
October 10, 2024

வேட்டையன் திரைப்பட விமர்சனம்

By 0 76 Views

இது சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றாலும், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனிலிருந்துதான் கதை தொடங்குகிறது. மூத்த வழக்கறிஞராக இருக்கும் அவர் பதவியேற்கவிருக்கும் காவல்துறையினருக்குப் பாடம் எடுப்பதில் இருந்து படமும் ஆரம்பிக்கிறது.

அதற்குப் பின் வழக்கமான பீடிகைகளுடன் ரஜினிகாந்தின் அறிமுகம் நிகழ்கிறது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் அவர் அறிமுகமாகும் போதே துப்பாக்கியைக் கையில் பிடித்தபடி பொட்டு பொட்டென்று சுட்டுக் கொண்டே வருகிறார். 

ஒரு பக்கம் வழக்கை ஆராய்ந்து உண்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதே சட்டத்தைக் காப்பாற்றும் செயல் என்கிற பொறுப்புணர்வுடன் அமிதாப் இருக்க, தண்டனை பெறும் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடாமல் இருக்க குற்றவாளிகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்கிற ரீதியில் வேட்டையன் ரஜினி செயல்பட இவர்கள் இருவருக்குமான ‘நீயா நானா..?’ போராட்டம்தான் படம்.

அதன் உச்சகட்டமாக ஆசிரியை துஷாரா விஜயன் கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியை கிஷோர் தலைமையிலான காவல் படை பிடித்தும், அவன் தப்பி விட ரஜினிகாந்த் கைக்கு வருகிறது வழக்கு. தப்பி ஓடிய இளைஞனைக் கண்டுபிடித்து சுட்டுக் கொல்கிறார் ரஜினி. ஆனால் அவன் குற்றவாளி அல்ல எனத் தெரிய வர, அதற்குப் பிறகு என்ன நிகழ்கிறது என்பது மீதிக்கதை.

ரஜினியின் நடிப்பு பற்றிப் புதிதாக சொல்ல வேண்டியதில்லை அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எனும்போது அவருடைய நடையும், உடையும், மிடுக்கும் வழக்கம் போல லகலக. ஆனாலும் சில காட்சிகளில் அவர் மிகவும் வயதானவராகத் தெரிவதை இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் கவனித்துத் திருத்தி இருக்க வேண்டும். 

பல இடங்களில் ரஜினி முகத்தை – கை விரல்களைப் பார்ப்பதற்கு நமக்குப் பாவமாக இருக்கிறது. இன்றைய ஏஐ தொழில்நுட்பம் என்னென்னவோ சாதிக்க… ரஜினியை திருத்தமானவராகக் காட்டுவதில் ஏன் யாரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்றே புரியவில்லை. 

ஆனால் அவரை விட வயதானவரான அமிதாப் கம்பீரம் குறையாமல் அந்த வேடத்துக்கென்றே பிறந்தவர் போல அப்பட்டமாகப் பொருந்துகிறார். ரஜினியை உண்மையை உணரச் செய்யும் காட்சியில் அவரது நடிப்பு மிளிர்கிறது.

மஞ்சுவாரியரை ரஜினியின் மனைவி என்ற கமிட் செய்து விடுவதால் நமக்கு வேறு எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை.

கதையின் மையமான ஆசிரியை துஷாரா விஜயன் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய அளவுக்கு அருமையான பாத்திரம் ஏற்றிருக்கிறார். 

கேரளப் படவுலகின் இணையற்ற நடிகர்களைக் கூட்டி வந்து இங்கே காமெடி செய்ய வைப்பது வேலையாகப் போய்விட்டது. அப்படி ஒரு அற்புதமான நடிகர் பகத் பாசிலுக்கு யோகி பாபு ஏற்கக்கூடிய ஒரு கேரக்டரைத் தந்திருக்கிறார்கள். அவர் பெரிய நடிகர் என்பதால் அந்த வேடத்தை கிரிஞ்சுடன் முடித்திருக்கிறார்கள்.

கல்வியை வைத்து மிகப்பெரும் செல்வந்தராக நினைக்கும் ராணா டகுபதி டாம்பீகமாக இருக்கிறார். அத்தனைப் பெரிய செல்வாக்கு மிகுந்தவரை, அவரது அலுவலகத்திலேயே போய் ரஜினி அவரது சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து வருவதெல்லாம் நிஜத்தில் சாத்தியமே இல்லை.

ரக்சன் பெருமைப்படும் அளவுக்கு பெரிய வேடமில்லை. மற்ற வேடங்களில் வரும், கிஷோர், ரித்திகா சிங்,ஜி.எம்.சுந்தர், அபிராமி, ரோகிணி, ரமேஷ் திலக்,ராவ் ரமேஷ் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கின்றனர்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு ஓகே என்ற அளவிலேயே நின்று இருக்கிறது.

அனிருத் இசையில் பாடல்களும் ஓகே ரகம்தான். பின்னணி இசையும் பெரிதாக ஈர்க்கவில்லை.

எழுதி இயக்கியிருக்கும் த.செ.ஞானவேல், நல்ல படத்தையும் கொடுக்க வேண்டும், அது ரஜினி படமாகவும் இருக்க வேண்டும் என்கிற நெருக்கடியில் நிறைய குழம்பி இருப்பது புரிகிறது.

என்கவுண்டர் பற்றிய விவாதம், போதைப்பொருள் புழக்கம், நீட் உள்ளிட்ட பயிற்சி மையக் கொள்ளைகள், சாதீயப் பிரச்சினைகள் என்று எல்லா முக்கிய விஷயங்களையும் போட்டு இன்னும் குழப்பி இருக்கிறார்.

வாழவேண்டிய திறமை மிகுந்த அப்பாவி இளைஞனை தவறாக ரஜினிகாந்த் சுட்டுக் கொல்லும் போதே கதையும் அவன் கூடவே செத்துப் போய் விடுகிறது. அதற்குப் பின் என்ன நியாயம் சொன்னாலும் ரஜினி மீது நமக்கு மரியாதையே ஏற்படவில்லை. 

இதனால் அவர் செய்த மாற்ற என்கவுண்டர்கள் மீதும் நமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. கதையின் போக்கில் பார்த்தால் கண்டிப்பாக சமூக ஆர்வலர்கள் அவை குறித்து கேள்வி எழுப்பி இருப்பார்கள்.

ஒரு சதிகாரன், என்கவுண்டர் ஸ்பாட்டில் வைத்து ஒரு இன்ஸ்பெக்டர் மீது குற்றம் சொல்ல, எந்த விசாரணையும் இல்லாமல் அந்த இன்ஸ்பெக்டரை அதே ஸ்பாட்டில் அந்த குற்றவாளியை வைத்தே ரஜினி கொல்வதெல்லாம் டூ மச்.

இந்த விஷயங்கள் எல்லாம் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேட்டையனை ‘கேரக்டர் அசாஸின்’ செய்து கொன்று விடுகின்றன.

இதுவே கதையின் தலையாய குற்றம்.

ஒரு மாபெரும் குற்றத்தை செய்து விட்டு மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்கும் ரஜினியை விட, மன்னிப்பைத் துறந்து மரணத்தை ஏற்ற ரமணா விஜயகாந்தின் பாத்திரம் ஏனோ நம் நினைவில் வந்து சல்யூட் அடிக்க வைக்கிறது. 

வேட்டையன் – தப்பிய குறி..!