July 14, 2025
  • July 14, 2025
Breaking News
June 23, 2019

சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்-வைகோ

By 0 1136 Views

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…

“தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை, இந்திய அரசு பல வழிகளிலும் அடக்கி, ஒடுக்கி வருகின்றது.

ஈழத்தமிழ் இளைஞர்கள் என்றாலே, அவர்களைத் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, எந்தவித விசாரணையும் இன்றி, செங்கல்பட்டில் இருந்த சிறப்பு முகாமிற்குள் ஆண்டுக்கணக்கில் பூட்டி வைத்தனர். இப்போது அந்த முகாமை, திருச்சி மத்திய சிறைக்கு இடம் மாற்றி, அங்கே அடைத்து வைத்து இருக்கின்றார்கள்.

கடந்த சில நாட்களாக, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்காமல், புறக்கணித்து வருகின்றது.

பல அகதி முகாம்களில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. கழிப்பு அறைகளின் பக்கமே போக முடியவில்லை. கிட்டத்தட்ட திறந்தவெளி சிறைச்சாலை போலத்தான் இருக்கின்றன.

ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவுக்குக் குடிபெயர்ந்த ஈழத்தமிழர்களை, அந்த நாடுகள் வரவேற்று மதித்து, உதவிகள் அளித்து, குடிஉரிமையும் வழங்கி இருக்கின்றன. ஆனால், அகதிகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் இன்றுவரை இந்தியா கையெழுத்து இடவில்லை.

இந்தியாவில் குடி உரிமை கோருகின்ற ஈழத் தமிழர்களுடைய விண்ணப்பங்களை, 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என, நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. எனவே, இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை, இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது. சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்..!”