இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘வாழ்க விவசாயி’.
விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி.
படம் பற்றிய அனுபவங்களை அப்புக்குட்டி பகிர்ந்து கொண்டதிலிருந்து…
“இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக ‘வாழ்க விவசாயி ‘கதை அமைந்திருக்கிறது. இயக்குநர் பி.எல்.பொன்னிமோகன் சொன்ன கதை அப்படி அமைந்தது. இதை தயாரிக்க நல்ல தயாரிப்பாளர் வேண்டுமே என்று எண்ணியபோது பால் டிப்போ கதிரேசன் கிடைத்தார். படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரும்படி விரைவாகவே எனக்கு முன் பணம் கொடுத்தார். இயக்குநர் மோகன் சொன்னபடியே கதையை அழகாகப் படமாக்கியிருக்கிறார்.
ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். நாற்று நடுவது ,களை எடுப்பது, கதிர் அடிப்பது , அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும். எனவே இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாக இருந்தது .” என்றவர் தன் கதாநாயகி பற்றிக் கூறும்போது, “எனக்குக் கதாநாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது .அவர் என்னை விட உயரமாக… என்னைவிட நிறமாக இருப்பாரே என்று கவலைப்பட்டேன்.
ஆனால் அவரைப் பற்றி நான் கவலைப்பட்டது பயந்தது எல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது . அவர் உயரம் தெரியாத படியும் மேக்கப்பில் நிறத்தைக் குறைத்தும் எனக்கு ஜோடியாக நடிக்க வைத்துவிட்டார்கள் . வசுந்தரா ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை என்பதற்கு ஒரு உதாரணம்.
“ஒரு நாள் ஒரு பரணில் கதாநாயகன் கதாநாயகி நாங்கள் இருவரும் ஏறி அமர்ந்து பேசிக்கொண்டு கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. முதல் நாள் நல்ல மழை பெய்திருந்தது .பாண் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட இருந்தது. முதலில் அதில் நான் ஏறினேன் .அடுத்து வசுந்தரா ஏறிய போது அந்தப் பரண் சரிந்து விழுந்தது. நான் விழுந்து என் மேல் அவர் விழுந்தார். என் மேல் அவர் விழுந்ததைப் பார்த்து எனக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது.
ஆனால் அவரோ “நல்ல வேளை என்னை காப்பாற்றி விட்டீர்கள். நான் உங்கள் மேல் விழுந்திருக்காவிட்டால் எனக்கு இந்நேரம் அதிகமாக அடிபட்டிருக்கும்” என்றார். எனக்கு அப்பாடா என்றிருந்தது..!”