June 20, 2024
  • June 20, 2024
Breaking News
December 2, 2023

வா வரலாம் வா திரைப்பட விமர்சனம்

By 0 157 Views

நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்பார்கள். ஆனால் கதாநாயகனும் அவரது நண்பருமான இரண்டு பேர் இரண்டு விதமாக நினைத்தது பல விதமான செயல்களைச் செய்ய, பல குழப்பங்களுக்கு ஆளாகி  கடைசியில் என்ன ஆனது என்பதை இயக்குனர் எல்.ஜி. ரவிசந்தர்.

சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்கு சென்ற ஹீரோவும் அவரது நண்பரும் சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகர செயல்களையும் சாதாரணமாக செய்ய தயாராகிறார்கள்.

விரைவில் பணக்காரர்களாக வேண்டும் ஆசையில் பேருந்து கடத்துகிறார்கள். பேருந்தில் 40 குழந்தைகளும் இரண்டு இளம் பெண்களும் இருக்க, அவர்களை வைத்து பணம் பறிக்க பெரும் திட்டம் வகுக்கின்றனர். இரு நண்பர்களுக்கும் அந்த இளம் பெண்கள் மீது காதலும் வந்து விடுகிறது.

இதற்கிடையில் பேருந்தில் இருந்த இரண்டு இளம் பெண்களைக் குறி வைக்கும் வில்லனின் சதித்திட்டத்தையும், காவல்துறை இவர்களைத் தேடுவதையும் நண்பர்கள் அறிந்து என்ன முடிவு எடுக்கிறார்கள், வில்லனுக்கும் நண்பர்களுக்கும் இடையேயான தொடர்பு என்ன?அந்த இளம் பெண்கள் யார்?அந்த 40 குழந்தைகள் யார்? பேருந்து கடத்தும் ஐடியா எப்படி வந்தது? நண்பர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசை நிறைவேறியதா? கதாநாயகர்களுடன் கதாநாயகிகள் உடனான காதல் ஆசை நிறைவேறியதா? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

கதாநாயகனாக பெற்றோரை இழந்து திருடனாக மாறிப்போன ‘பிக்பாஸ்’ பாலாஜி முருகதாசுக்கு இது அறிமுகப் படம். கடத்தியவர்களை வைத்து பணம் சம்பாதிப்பதுதான் நோக்கம் என்றாலும், மனிதாபிமானமுள்ள கெட்டவனாக இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

கடத்தப்பட்ட இரு பெண்களில் ஒருவரான மஹானா சஞ்சீவ் மனதில் இடம்பிடிப்பதுடன் பாடல் காட்சியில் ரசிக்கும்படி ஆடுகிறார். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் வருங்காலத்தில் மக்கள் மனதிலும் இடம்பிடிக்க வாய்ப்பு உண்டு.

படத்தின் இரண்டாம் ஹீரோவாக ரெடின் கிங்ஸ்லி. கண்களை அகலமாய் விரித்துப் பார்த்தபடி வசனங்களை இழுத்து இழுத்துப் பேசுகிற அவரது வழக்கமான ஸ்டைலில் மாற்றமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடத்தப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்ரி ரெமாவை காதலிப்பதில்  கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

பாலாஜி முருகதாஸுக்கு பொருத்தமான ஜோடியாக மகானா சஞ்சீவ். பளபள தோற்றத்திலும், பளீர் சிரிப்பிலுமாக பாடல் காட்சிகளில் இளமையை தாராளாமாய் காட்டியிருக்கிறார். நடிப்பையும் காட்ட கற்றுக் கொண்டால் முன்னேறலாம்.

அழுதுவடிகிற கதாபாத்திரங்களிலேயே பார்த்துப் பழகிய காயத்ரி ரெமாவை இந்த படத்தில் கலகலப்பாக பார்க்க முடிகிறது.

தோட்டா ராஜேந்திரனாக மைம் கோபி. ரவுடி கதாபாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார்.

காவல்துறை உயரதிகாரியாக வருகிற இயக்குநர் சரவணன் சுப்பையாவின் மிடுக்கான நடிப்பு ஓகே.

சிங்கம்புலி, தீபா சங்கர் ஜோடி காமெடி என்ற பெயரில் செய்யும் சேட்டைகள் அவ்வளவாக எடுபடவில்லை.

வையாபுரி. பயில்வான் ரங்கநாதன், வாசு விக்ரம், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், ரஞ்சன், போராளி’ திலீபன் என படத்தில் நிறைய காமெடி கூட்டம் ஆனால் அந்த அளவுக்கு சிரிக்க முடியவில்லை

‘தேனிசைத் தென்றல் தேவாவின் இசையை நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் கேட்க நேர்ந்தது ஆறுதலாக இருக்கிறது.

அவரே பாடியிருக்கும் ‘வா வரலாம் வா’ பாடல் ரசிக்க வைக்கிறது அதில் ஹீரோவுடன் சேர்ந்து கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கிறார் அஸ்மிதா.

பெரிய நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த அளவு ஓடி விடாமல் போக நேர எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு போதிய விளம்பரங்கள் செய்தால் ரசிகனை ‘வா வரலாம் வா’ என்று தியேட்டருக்கு இழுக்க வாய்ப்பு இருக்கிறது.