May 3, 2024
  • May 3, 2024
Breaking News
December 10, 2023

கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்பட விமர்சனம்

By 0 106 Views

பேய்க் கதைகள் என்றாலே ஒரே விதமான டெம்ப்ளேட்தான். கதை மாந்தர்கள் ஒரு ஆவியிடம் அல்லது பேயிடம் சிக்கிக் கொள்வதுதான் அது. 

ஆனால், இதில் வித்தியாசம் வேண்டி அவரவர் ஒவ்வொரு வழியை நாட, இந்தப் பட இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் புதுவிதமான வழியைக் கையாண்டு இருக்கிறார்.

இதிலும் நாயகன் சதீஷ் அண்ட் கோ பேயுலகில் மாட்டிக் கொள்கிறார்கள் ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் இது நிஜ உலகில் அல்லாமல் கனவுலகில் நிகழ்கிறது.

புதிய விளையாட்டுகளைக் கண்டுபிடிக்கும் ‘கேமிங் ஆப்’ உருவாக்கும் வேலையில் இருக்கும் சதீஷுக்கு வினோதமான பொருள் ஒன்று கிடைக்க அதன் மூலம் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து அதில் பேயிடம் சிக்கிக் கொள்கிறார்.

அந்தக் கனவுக்குள் உயிர் போய்விட்டால் வெளியிலும் அவரது உயிர் போய்விடும் என்கிற சிக்கல் முடிச்சு இருக்க, அதைத் தவிர்க்க தன் குடும்பத்தினர் அனைவரையும் மட்டுமல்லாது தனக்கு கடன் கொடுத்தவர், தனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் என்று எல்லோரையும் கனவுக்குள் இழுத்துச் சென்று சதீஷ் படுத்தும் பாடுகள்தான் கதை.

தனக்கு என்ன வரும் என்று தெரிந்து வைத்திருக்கும் சதீஷ் அந்த வழியிலேயே கதாநாயகனாக முடிவெடுத்து இருப்பது பாராட்டத்தக்கது. அதிரடி ஹீரோவாகவெல்லாம் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தன் வழியே அவர் காமெடியில் இந்தப் படத்திலும் பயணிக்கிறார்.

அவர் அம்மாவாக வரும் யூட்யூபர் சரண்யா பொன்வண்ணனும் சரி அப்பாவாக வந்து பாவாடை ஆட்டம் போடும் விடிவி கணேஷும் சரி, சிரிக்க வைப்பதில் சேர்ந்தே வேலை பார்த்திருக்கிறார்கள்.

பேய் ஓட்டுபவர்களாக வரும் ரெஜினாவும், நாசரும் பாத்திரம் உணர்ந்து நடிக்க ஒத்துக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.

ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, ஆதித்யா கதிர் என நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் நகைச்சுவையில் ஆனந்தராஜ் முதலிடமும், கிங்ஸ்லி இரண்டாம் இடமும் பிடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையில் தன் பாணியில் பாடல்களுக்கு இசைத்து விட்டு பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருக்கிறார்.

நிஜ உலகம், கனவுலகம் என்று மாறுபட்டுத் தெரியவேண்டி கடுமையாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா. தன் பங்குக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் எடிட்டர் பிரதீப் இ.ராகவ்.

திகிலில் கொஞ்சம் திரில்லைக் கலந்து மாவு பிசைந்து அதை நகைச்சுவையில் வறுத்துக் கொடுத்திருக்கிறார்கள். டைம் பாஸ் பண்ண கொஞ்சம் கொரிக்கலாம் – கொஞ்சம் சிரிக்கலாம்.

கான்ஜூரிங் கண்ணப்பன் – கனவுக்குள்ளும்  மிரட்டுபவர்..!