இதுவும் ஒரு சூப்பர் ஹீரோ கதைதான்..!
ஆனால் இந்த சூப்பர் ஹீரோ கற்பனை கதாபாத்திரம் அல்ல. தமிழர்களின் மனதிலும், உணர்விலும் இரண்டறக் கலந்து விட்ட நிஜ சூப்பர் ஹீரோவான எம்ஜிஆரை வைத்து இதில் கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் நலன் குமரசாமி.
அந்த முயற்சியில் அவர் பின்னி எடுத்திருக்கிறாரா என்று பார்ப்போம்.
எம்ஜிஆரின் பரம ரசிகர்களாக இருக்கும் ராஜ்கிரண், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் எம்ஜிஆரின் ‘குடியிருந்த கோயில்’ படத்தின் ரீலை வாங்கி வந்து ஒரு தியேட்டரில் கொடுத்து ஓட்டச் சொல்லுகிறார்கள்.
காரணம், எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தருணம் அது. அவரை நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்பதற்காக இப்படி படத்தில் பார்த்தாவது ஆறுதல் பெறலாம் என்பதுதான் அவர்களது விருப்பம்.
படம் ஓடிக் கொண்டிருக்கும்போது எம்ஜிஆர் இறந்த தகவல் வர ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீரில் மிதக்கிறது. எம்ஜிஆர் இறந்த அதே நேரத்தில் ராஜ்கிரனின் மகன் பி.எல்.தேனுப்பனுக்கு ஒரு குழந்தை பிறக்க, அதையே எம்ஜிஆர் ஆக நினைத்து அவர் நினைவுகளையே ஊட்டி வளர்க்கிறார் தாத்தா ராஜ்கிரண்.
அவரது கனவுப் பேரன் எம்ஜிஆரைப் போலவே நேர்மையானவனாக வளர்ந்து சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் தாத்தாவின் விருப்பம். அப்படியே வளரும் ஹீரோ கார்த்தியும் தாத்தாவின் கனவுப் படியே போலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறார்.
ஆனால் எம்ஜிஆர் வழியில் நடந்தால் பத்து பைசா சம்பாதிக்க முடியாது என்று கண்டு கொள்ளும் கார்த்தி, தாத்தாவுக்கு தெரியாமல் நம்பியாரை போல் சகல நேர்மறையான வேலைகளுக்கும் உடன்பட்டு பெரும் பணம் சம்பாதிக்கிறார். அதன் விளைவாக ஒரு கட்டத்தில் சஸ்பெண்டும் ஆகிறார்.
எம்ஜிஆராக வளர்த்த பேரன் நம்பியாராக மாறியது கேட்டு ராஜ்கிரன் உயிரை விட அதற்குப்பின் என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.
கார்த்தி தன் கேரியரில் இதுவரை ஏற்றிராத அட்டகாசமான வேடம். அவருக்கு வில்லத்தனமான வேடம் நன்றாக பொருந்தி வருவது நமக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால் எம்ஜிஆர் கெட்டப்புக்கும் அவர் பொருத்தமாக இருக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் ஹைலைட்.

அதற்காக அப்படியே எம்ஜிஆரைக் காப்பியாக அடிக்காமல் அவருக்குள் எம்ஜிஆர் புகுந்தால் எப்படி வெளிப்படுவாரோ அப்படி அந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டையில் எம்ஜிஆர் போல் கம்பு சுற்றி எதிரிகளைப் பந்தாடும் சண்டை ‘ மாஸ்..!’
என்ன ஒன்று… நாயகி கிருத்தி ஷெட்டியுடனான காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லை.
கிருத்தி ஷெட்டியின் பாத்திரம் கதையில் சற்று ஓட்டாமல்தான் செல்கிறது. ஆவி அமுதா போன்று ஆவிகளுடன் பேசுவதும், நடுநிசியில் ஆந்தையுடன் பரிவர்த்தனை நிகழ்த்துவதுமான அந்த பாத்திரம் சற்று மிகைதான். பெயர் வேறு ‘ வூ’ வாம்..!
ஆனால், இது எல்லாக் குறைகளையும் கிருத்தியின் நிகரில்லாத அழகு ஈடு செய்து விடுகிறது.
எம்ஜிஆரின் பரம ரசிகராக வரும் ராஜ்கிரன் பாத்திரம் மனதில் பதிகிறது. அவர் முகத்தை ஏஐ எல்லாம் பண்ணி இளமையாக்கி இருக்கிறார்கள். கூடவே அந்த வாய்ஸையும் இளமையாக்கி இருக்கலாம்.
கதைப்படி அவரது தோழராக வரும் ஆனந்தராஜ் பேரன் கார்த்தியுடைய தோழராகவும் தொடர்ந்து கொண்டிருப்பது ஆகப்பெரிய ஆச்சரியம்.
அதைவிட ஆச்சரியம் சபாரி சூட் துணியில் கார்த்தி தன்னுடைய இன்ஸ்பெக்டர் உடைகளை தைத்து படம் முழுவதும் போட்டுகொண்டு வருவது. அதற்கெல்லாம் லாஜிக்காக ‘ இது ஒரு கற்பனை கதை..!’ என்று முதலிலேயே முன் ஜாமீன் வாங்கி விடுகிறார் இயக்குனர்.
நிஜத்தில் எம்ஜிஆரின் ரசிகரான சத்யராஜை அதற்கு தோதான வேடத்தில் போடாமல் எம்ஜிஆரின் எதிரியாக்கி விட்டதும், ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகும் அவரது பாத்திரம் சட் என்று முடிந்து விடுவதும் கூட சுவாரசியத்தை குறைக்கிறது.
அவரது மகளாக வரும் ஷில்பா ஷெட்டின் பாத்திரமும் துண்டாக நிற்கிறது.
இவர்களுடன்
ஜி எம் சுந்தர், நிழல்கள் ரவி, யார் கண்ணன், கருணாகரன் உள்ளிட்டோர் தத்துமது பாத்திரங்களை செழுமைப்படுத்த உதவியிருக்கிறார்கள்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி உள்ள உலகில் எந்த மூலையில் இருந்து கொண்டும் மோசடிகளை செய்வதை மாற்றி ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சமுதாயத்திற்கு நன்மைகளை செய்யும் அந்த ‘ மஞ்சள் குழு’ சிந்தனை பாராட்ட வைக்கிறது.
ஜார்ஜ் சி வில்லியம்சன் ஒளிப்பதிவு ஜாலம் புரிந்து இருக்கிறது.
சந்தோஷ் நாராயணனின் இசையும் வித்தியாசமாக சதுராடி இருக்கிறது.
அதில் ‘ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…’ ரீமிக்ஸ் தியேட்டரில் தூள் கிளப்புகிறது.
தமிழக முதல்வரே நேரடியாக ஊழலில் ஈடுபடுவது, ஒட்டுமொத்த தமிழக காவல்துறையும் சரிகாரர் சத்யராஜின் கட்டுப்பாட்டில் இயங்குவது போன்றதெல்லாம் நலனின் ஓவரான கற்பனை.
தன் பேரன் அயோக்கியன் என்ற நினைவுடனையே ராஜ்கிரன் இறந்து போயிருக்கும் நிலையில் கடைசியில் அவர் நல்லவராக மாறி விடுவதை கிருத்தி ஷெட்டியின் ஆவிகள் உலகின் மூலம் பேச வைத்து ராஜ்கிரணின் ஆன்மா சாந்தி அடைவதாக முடித்திருந்தால் கதைக்கு முழுமை கிடைத்திருக்கும்.
வா வாத்தியார் – கலியுக எம்ஜிஆர்..!
– வேணுஜி