கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் உண்மையான கதாநாயகனாக பார்க்கப்படுபவர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட்.
ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வருவதையடுத்து சோனு சூட் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்துவிட்டார்.
ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார்.
வாழ்வதாரத்திற்காக சாலையில் சிலம்பம் சுற்றி பிழைத்து வந்த 85 வயது மூதாட்டியை தற்காப்பு கலை பயிற்சியாளராக மாற்றினார்.
இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சோனு சூட்டின் சேவையை பாராட்டி, ஐ.நா., மேம்பாட்டு திட்டத்தின் ‘சிறப்பு மனிதநேய விருது ‘ அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 28ம் தேதி அவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.
இந்த விருதினை இதற்கு முன், ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டிகாப்ரியோ, பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.
மக்களின் உண்மையான இந்த ஹீரோக்களை மட்டுமே ரசிகர்கள் தங்கள் நெஞ்சங்களில் போற்றி மகிழ்ந்தால்… அவர்களைப் பின்பற்றினால் இந்த நாடு வளம் பெறும்.
மாறாக விசிலடிச்சான் குஞ்சுகள் ஆகவே கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதும், கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி தங்கள் ஹீரோவை வளப்படுத்தவும், ட்விட்டரில்் சண்டை இட்டும் கொண்டிருந்தால் இந்த நாடு எந்த காலத்திலும் முன்னேற்றம் பெறவே பெறாது.