இது சமந்தாவின் சீசன் போலிருக்கிறது. அதிலும் சமந்தாவை மட்டுமே முன்னிலைப்படுத்தி ‘ஹீரோயின் ஓரியன்டட்’ ஆகக் கதை சொல்லியிருப்பதால் ‘இது சமந்தா ஸ்பெஷல்..!’
பெற்றோரின் விருப்பத்துக்காக கணவன், குழந்தை என்று திருமண பந்தத்தில் விழாமல் தன் சுய விருப்பத்தின் பேரில் பத்திரிகையாளராகிச் சாதனை படைக்க நினைக்கும் சமந்தாவின் வாழ்வில் நிகழும் ஒரு ‘திக் திக்’ சம்பவம்தான் படத்தின் கதை.
(இதற்கு மேல் கதை சொன்னால் படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடும்…)
வழக்கமாக நாம் பாலங்களைக் கடக்கையில் இடையில் மீடியனுக்காக வைத்திருக்கும் கற்களை நகர்த்திவிட்டு சிலர் ‘யு டர்ன்’ போட்டபடி கடப்பதைக் கவனித்திருக்கலாம். குறுக்குவழியில் சீக்கிரமாகப் போய்விடுவதற்காக ஒருசிலர் செய்யும் அந்தத் தவறு பிறர் வாழ்வையே முடித்துவிடும் எமனாக எப்படி மாறுகிறது என்கிற செய்தியையும் அந்த ‘திக் திக்’கின் இடையே தெளிவான பாடமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பவண் குமார்.
அப்பாவியான முகம், ஆழமான பார்வை, அழுத்தமான உணச்சிகள் என்று உடல் முழுதும் பாத்திரத்துக்காகவே படைக்கப்பட்டவர் போலிருக்கிறார் சமந்தா. அணியும் ஆடைகளும் அவருக்கு அப்படிப் பொருந்துகின்றன. நடந்த கொலைக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று போலீஸிடம் மன்றாடும்போது படம் பார்ப்பதை மறந்து அவர்மீது பரிதாபமே ஏற்படுகிறது.
கடைசியில் ‘யு டர்ன்’ மர்மங்களின் புதிரை அவிழ்க்க அவரே ‘யு டர்ன்’ எடுக்கும்போது பதைபதைத்து விடுகிறோம்.
சமந்தாவைக் காதலிப்பதால் இந்தப்படத்தின் கதாநாயகனாக தன்னைச் சொல்லிக் கொள்ளலாம் ராகுல் ரவீந்திரன். இயல்பான நடிப்பில் அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறார் அவர்.
ஆனால், பாராட்டுக்குரியவர் ஆதிதான். ஏற்கனவே தமிழிலும், தெலுங்கிலும் ஹீரோவாக வலம் வந்தாலும் இதில் நாயகன் அல்லாத… இன்னும் கேட்டால் அறிமுகக் காட்சியின் முக்கியத்துவம் கூட இல்லாத கேரக்டரை ஒத்துக் கொண்டு அதில் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். வித்தியாசமாக கதைக்காக இப்படி ஒத்துக்கொண்டிருக்கும் ஆதி… தி கிரேட்..!
அதேபோல் பூமிகா சாவ்லாவும், நரேனுக்கும் கூட சிறிய பாத்திரங்கள்தான். அதை மனமுவந்து ஏற்று நடித்திருப்பதால் படத்தின் நிறமும் நேர்த்தியாகியிருக்கிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன் அடையும் எரிச்சலில் போலீஸ் வேலையின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வைக்கிறார்.
படத்தின் மொத்தக் கேரக்டர்களும் இவ்வளவுதான். எல்லா மர்மங்களும் இவர்களுக்குள்தான் என்றாலும் நாம் அவற்றை உணரும் முன்னரே அங்கங்கே ‘யு டர்ன்’ போட்டு திருப்பங்களை ஏற்படுத்தி வியக்க வைக்கிறது பவண் குமாரின் திரைக்கதை. படத்தின் முடிவும், முடிவில் பாவத்துக்கு தரப்படும் தண்டனையும் எதிர்பாராதது.
இத்தனை நேர்த்தியான திரைக்கதையில் இடைவேளையில் மட்டும் இன்னும் கொக்கி போட்டிருக்கலாம். அதற்குப்பின் என்ன என்கிற அழுத்தமும், எதிர்பார்ப்பும் இடைவேளையில் குறைவாக இருக்கிறது.
அதேபோல் இரவெல்லாம் போலீஸ் விசாரணையில் இருந்த சமந்தா அந்த விஷயத்தை முதலில் ராகுல் ரவீந்திரனிடம்தானே விவரித்திருக்க முடியும்..? ஒரு ‘கிரைம் ரிபோர்ட்டர்’ என்ற அளவிலாவது அவர் உதவியை சமந்தா ஏன் நாடவில்லை என்பதற்கு அழுத்தமான காரணம் இல்லை.
ஆனால், இடைவேளைக்குப்பின் ஒவ்வோருவர் தலைக்கு மேலும் தொங்கும் கத்தி மாறி மாறி பதைபதைக்க வைக்கிறது. அந்த அட்வகேட் கொலையுறும் காட்சியில் உடலில் ஒரு நடுக்கம் ஏற்படாதவர்கள் இருக்க முடியாது.
‘நிக்கேத் பொம்மிரெட்டி’யின் ஒளிப்பதிவும், ‘பூர்ண சந்திர தேஜஸ்வி’யின் இசையும் படத்தின் தேவையை இதமாகப் பூர்த்தி செய்திருக்கின்றன. ‘கவின் பாலா’வின் வசனங்களும் பதமாக இருக்கின்றன.
கடைசிக் காட்சியில் காட்டப்படும் நிஜ ‘யு டர்ன்’ காட்சிகளில் யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாதென்று பதைபதைக்கிறோமே அதுதான் படத்தின் வெற்றி.
யு டர்ன் – ரசிக்கத்தக்க படம்… புரிந்துகொள்ள வேண்டிய பாடம்..!