November 22, 2024
  • November 22, 2024
Breaking News
June 1, 2023

துரிதம் திரைப்பட விமர்சனம்

By 0 561 Views

ஒருவர் ஆசைப்பட்டு சினிமாவுக்குள் நுழைந்து விட்டால் அதற்குப் பிறகு அவரை சினிமா விடவே விடாது. இதற்கு பலரை உதாரணமாகச் சொல்ல முடியும். அதில் ஒரு உதாரணமாக இருப்பவர் இந்த படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான ஜெகன்.

ஏற்கனவே சண்டியர் என்ற படத்தில் நடித்து அடையாளம் காணப்பட்ட ஜெகன் ஒரு இடைவெளிக்குப் பின் இந்த படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார்.

சின்ன லைன்தான் கதை என்றாலும் சுவாரஸ்யமானது. லாங் ரைடிங்குக்கு ஒரு பைக்கும், அந்த பைக்கின் பின்னால் காதலிக்கும் ஒரு பெண்ணும் இருந்து விட்டால் ஒரு இளைஞனுக்கு அதைவிட சொர்க்கம் வேறு ஏது?

அப்படி ஒரு வாய்ப்பு அமையப் பெறுகிறது நாயகன் ஜெகனுக்கு. கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் ஜெகன், காரில் ஐடி துறையில் வேலை பார்க்கும் நாயகி ஈடனும் அவரது தோழிகளும் வருவது வழக்கம். ஈடனைக் காதலிக்கும் ஜெகன் தன் காதலைச் சொல்ல முடிவெடுக்கும் வேளையில் ஈடன் தன் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுக்கிறார்.

இனி ஈடன் கிடைக்கவே மாட்டார் என்று நினைத்த ஜெகன், பெருத்த கவலையுடன் சொந்த ஊருக்குச் செல்லும் பைக்கில் சந்தர்ப்பவாசத்தால் ஈடனும் செல்ல நேர அந்தப் பயணம் என்ன விதமான அனுபவங்களைத் தந்தது என்பதே இந்தப் படம்.

ஜெகனின் உயரத்துக்கு அவர் எப்பேர்பட்ட ஆக்சன் படத்திலும் நடிக்கலாம். ஆனால் இதில் காதலே முதன்மையாக இருப்பதால் ஆக்ஷனுக்கு ஆப்ஷன் இல்லை. தன் பாத்திரம் உணர்ந்து நடித்திருந்தாலும், காதலி அருகில் வந்தும் ஏன் சோகமாகவே இருக்கிறார், தெரியவில்லை.

ஈடனைப் பார்க்கும்போது அந்த காலத்து ஸ்ரீவித்யா நினைவுக்கு வருகிறார். குண்டு குண்டான மூக்கும் முழியுமாக ஈடனைப் பார்த்து ஜெகனுக்கு காதல் வந்ததில் வியப்பில்லை. ஆனால் உடன் தங்கி இருக்கும் தோழிகளை விட அவர் கொஞ்சம் மூத்தவராக இருப்பதாகத் தோன்றுகிறது.

ஜெகனின் தோழனாக வரும் பால சரவணன் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.

ஈடனின் முரட்டு அப்பாவாக வரும் ஏ. வெங்கடேஷுக்கு என்னதான் பிரச்சனை என்பது புரியவில்லை. ஈடனின் தோழிகளை நம்பும் அளவுக்கு கூட அவர் மகளை நம்பவில்லை என்பது கொடுமை.

சிறிய பாத்திரம் என்றாலும் தன்னுடைய அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் பூ ராமு, இந்தப் படத்தில் கொஞ்சம் வில்லத்தனத்தையும் காட்டியிருக்கிறார். அவரால் முழு வில்லனாகும் ராம்ஸ் அப்படியும் ஆக முடியாமல் நம் அனுதாபத்தை சம்பாதிக்கிறார்.

சமீபகாலப் படங்களில் வரும் மேலத்தெரு, கீழத்தெரு – வடக்குப்பட்டி, தெற்குப் பட்டி போல இதிலும் வடக்குப்பட்டி, தெற்குப் பட்டி பிரச்சினைதான். இப்படிப் பெயர் வைத்தாலே ஒரு பட்டியில் இருப்பவர்கள் பட்டியல் இனத்தில் இருப்பார்கள். இதிலும் இரு பட்டிக் காரர்களும் தங்கள் ஜாதிகளைக் காரணம் காட்டி மோதிக் கொள்கிறார்கள்.

சாதிப் பிரச்சினையை முன் நிறுத்திக் கதையை ஆரம்பித்து விட்டு கடைசியில் ஒரு காதல் கதையாக பொசுக்கென்று முடித்துவிட்டார் சீனிவாசன். இந்த இரண்டு ஜாதிகளும் எந்த காலத்திலும் ஒன்று சேராது என்பது போல் இருக்கிறது கிளைமேக்ஸ்.

முதல் பாதிப் படம் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதிப் படம் தலைப்ப போலவே துரிதமாக நகர்கிறது. அதிலும் ஈடனைத் தன் காரில் ராம்ஸ் கடத்திக் கொண்டு போக ரிப்பேரான பைக்குடன் ஜெகன் அவரை எப்படி கண்டுபிடிப்பார் என்கிற பதை பதைப்பு நமக்குக் கூடி விடுகிறது.

அதேபோல் ஜெகனுடன் பைக்கில் பயணித்துக் கொண்டே ஈடன் தன் தோழிகளுடன் காரில் வருவதாக அப்பா வெங்கடேஷை நம்ப வைக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

கடைசியில் அப்பா வெங்கடேஷிடம் மாட்ட விருந்த ஈடன் அதிலிருந்து தப்பிக்கும் போது நமக்கு ” அப்பாடா…” என்று இருக்கிறது..!

நாயகியின் தோழிகளாக வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் வாசன் மற்றும் அன்பு டென்னிஸ் இருவரின் ஒரே கேமரா… சேலம் வரை நெடுஞ்சாலையிலேயே பயணித்து திரைக்கதைக்கு வேகம் கூட்டினாலும் நரேஷின் இசை தேவையில்லாத இடங்களில் எல்லாம் மௌனமாகி படத்தின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது.

நிறைய பொருட்செலவு, பெரிய ஹீரோ, முன்னணி இசையமைப்பாளர், இன்னும் கொஞ்சம் சுவாரசியமான திரைக்கதை என்றெல்லாம் இருந்திருந்தால் இந்தப் படம் நிச்சயமான ஒரு வெற்றிப்படம்தான்.

துரிதம் – லாங் ரைடு லவ்..!