October 5, 2024
  • October 5, 2024
Breaking News
July 8, 2023

முதலில் இந்தப் படத்துக்கு மாமன்னன் தலைப்புதான் வைத்திருந்தோம் – தூக்கு துரை இயக்குனர்

By 0 210 Views

‘ஓபன் கேட் பிக்சர்ஸ்’ சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தூக்கு துரை’.

விஸ்வாசம் படத்தில் அஜித் ஏற்றிருந்த பாத்திரத்தின் பெயர் ஞாபகத்துக்கு வருகிறதா..? ஆனால் இந்தப் படத்தின் ஹீரோ யோகி பாபு.

படப்பிடிப்பு முழுதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகியிருக்கும் ‘தூக்கு துரை’ படக்குழு சார்பாக இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் மற்றும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத்ராஜ் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

 

படம் பற்றிப் பேசினார் டென்னிஸ் மஞ்சுநாத்.

“ஒரு காலத்தில், ராஜாவாக வாழ்ந்தவர்களின் பரம்பரையில் வந்த வாரிசுகள் இப்போது சாதாரண மக்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஊர் பழக்க வழக்கங்கள் அவர்கள் தலைமையில்தான் நடைபெறுவது வழக்கம்.

அப்படிப்பட்ட ஒரு அரச குடும்பத்தின் தலைமையில் அந்த ஊரில் உள்ள கோயில் திருவிழாவில் நடைபெறும் பலவித சம்பவங்களை உள்ளடக்கியது படத்தின் கதை.

இதில் யோகி பாபு கதையைத் தாங்கும் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக இனியா நடித்திருக்கிறார். அந்த ஊரின் ராஜகுடும்பத்து வாரிசாக மாரிமுத்துவும், மரியாதைக்கு ஏங்கும் அவரது தம்பியாக நமோ நாராயணனும் நடித்திருக்கிறார்கள்.

அந்த ராஜ பரம்பரை பற்றிய 18 ஆம் நூற்றாண்டுக் கதையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதை முழுவதும் அனிமேஷன் முறையில் சொல்லியிருக்கிறோம்.

இது மட்டும் இல்லாமல் 1999 – திலும், தற்போது 2023 -லுமாக இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையைச் சொல்லி இருக்கிறோம்

இதில் இனியாவுக்கு இளமையாகவும், நடுத்தர வயதுடனும் இரண்டு கெட்டப்புகள் இருக்கின்றன.

இவர்களுடன் பால சரவணன், புதுமுகம் அஷ்வின், மொட்டை ராஜேந்திரன், சென்றாயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க குடும்ப உறுப்பினர்களை மையப்படுத்தி நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை மன்னர் காலத்தை மையப்படுத்தி இருப்பதால், மாமன்னன், மன்னாதி மன்னன் போன்ற தலைப்புகளை யோசித்து வைத்திருந்தோம்.

ஆனால், ‘மாமன்னன்’ என்ற தலைப்பு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்ததால், மன்னன் என்ற பெயர் சார்ந்த எந்த ஒரு தலைப்பும் வைக்க முடியாதபடி ஆனது. 

எனவே, வேறு தலைப்பை யோசித்த போது தான் அரசர்களை துரை என்று அழைப்பார்கள் என்றும், மன்னர்களின் மகுடத்தைத் தூக்கி காண்பிக்கும்போது மக்கள் வணங்குவார்கள் என்ற விஷயங்கள் எல்லாம் கருத்துக்கு வர ‘தூக்கு துரை’ என்று தலைப்பு வைக்க முடிவு செய்தோம்.

ஊர் திருவிழா சமயத்தில் வெளியூரிலிருந்து  வரும் ஒரு கோஷ்டி அந்த மகுடத்தைத் தூக்கவும் பிளான் செய்கிறது. இதனாலும் இந்த தலைப்பு பொருத்தமாக ஆனது…” என்றார் டென்னிஸ் மஞ்சுநாத்.

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் யோகி பாபு, தான் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டு விவாதிக்கப்பட்ட விஷயத்தை அவரிடம் கேட்டு “உங்கள் படத்திலும் அவரால் ஏதாவது பிரச்சனை வந்ததா..?” என்று கேட்டோம்.

“அவர் கொடுத்த தேதிகளை நாங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோம். அவரும் எங்கள் படத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். அவர் நடித்த படங்களில் நான் உதவியாளராக பணியாற்றியிருப்பதால் அவரை எனக்குப் பல வருடங்களாகத் தெரியும்.

என்னுடைய முதல் படமான ‘ட்ரிப் ‘பிலும் எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. அதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை..!” என்றவர், “படத்தில் யோகி பாபு, இனியா ஜோடியின் கெமிஸ்ட்ரி அற்புதமாக வந்திருக்கிறது. இரண்டு பேருக்கும் இடையே காதல் காட்சிகள் இருந்தாலும் பாடல் காட்சிகள் இல்லை.

யோகி பாபு – இனியா காதலால்தான் ஊருக்குள் பிரச்சனை வரும். அந்தப் பிரச்சனை எப்படி போய் முடிகிறது, என்பதுதான் முழுக் கதை..!” என்றார்.

ரவி வர்மா.கே ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கே.எஸ்.மனோஜ் இசையமைத்திருக்கிறார். 

“படத்தின் வெளியீடு எப்போது..?” என்று இணை தயாரிப்பாளர் வினோத் ராஜிடம் கேட்டபோது, “படத்தை நாங்கள் பார்த்து விட்டோம். எங்களுக்குத் திருப்தியாக வந்திருக்கிறது. இந்தப் படம் குடும்ப ஆடியன்சைக் குறி வைத்திருப்பதால் வர இருக்கும் தேர்வுகளை அடுத்து வரும் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்..!” என்றார்.

நல்ல திட்டம்தான்..!