May 2, 2024
  • May 2, 2024
Breaking News
January 28, 2024

தூக்கு துரை திரைப்பட விமர்சனம்

By 0 374 Views

ஓடுகிற குதிரை மேல் பணம் கட்டி விட்டால் போதும், அது எப்படி ஓடினாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில் ரேசுக்கு பந்தயம் கட்டியது போன்ற முயற்சி.

அப்படி யோகி பாபுவை நாயகனாகக் காட்டிவிட்டால் படம் ஓஹோ என்று ஓடிவிடும் என்று கணக்குப் போட்டு இருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.

கிராமத்து விசேஷங்களுக்கு படம் காட்ட ஃபிலிம் சுருளுடன் வருபவர் யோகிபாபு. அப்படி கதை நடக்கும் கைலாசம் (கண்டிப்பாக நித்யானந்தா கிராமம் இல்லை) கிராமத்துக்கு வரும் யோகி பாபு அந்த ஊர் தலைக்கட்டு மன்னர் வாரிசான மாரி முத்துவின் மகள் இனியாவைக் காதலிக்கிறார்.

இனியாவுக்கு யோகி பாபுவுடன் ஓடி விடுவதில் அப்படி என்ன அவசரமோ தெரியவில்லை. இரவோடு இரவாக இருவரும் ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்கள். 

இந்நிலையில் மாரிமுத்துவின் தம்பி நமோ நாராயணனுக்கு அண்ணன் மேல் வெறுப்பு. அதற்குக் காரணம் அவர்கள் வம்ச கிரீடம் மாரிமுத்துவின் வசம் இருப்பது. அதனாலேயே ஊர் திருவிழா உட்பட எல்லா முக்கிய நிகழ்வுகளும் மாரிமுத்துவின் தலைமையிலேயே நடக்க அந்த மரியாதை தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஏக்கத்திலும் கோபத்திலும் இருக்கிறார் நமோ நாராயணன்.

இன்னொரு பக்கம் பட்டணத்தில் திருட்டுத் தொழிலை கல்லூரிப் பாடமாக எடுக்கிறார் மொட்ட ராஜேந்திரன். அவரிடம் பாடம் படிக்க வந்து சேரும் சென்ராயன் பால சரவணன் அண்ட் கோவுக்கு ஒரு திருட்டு அசைன்மென்ட் தருகிறார் மொட்ட ராஜேந்திரன்.

அது கைலாசம் கிராமத்துக்கு போய் மன்னர் வம்ச கிரீடத்தைத் திருடுவது. 

ஆக, ஓடிப்போன யோகி பாபு இனியாவை மணந்து கொண்டாரா, நமோ நாராயணன் திட்டப்படி மாரிமுத்துக்கான மரியாதை இவருக்கு வந்து சேர்ந்ததா, மாரிமுத்து வசம் இருக்கும் வம்ச கிரீடத்தை மூவர் அணி திருட முடிந்ததா என்பதற்கெல்லாம் இந்தப் படத்தின் பின்பாதி பதில் சொல்கிறது.

யோகி பாபுவை ஹீரோவாகப் போட்டு விட்டால் போதும் போலிருக்கிறது. அவருக்கென்று ஸ்கிரிப்டோ வசனம் எழுதவோ தேவையில்லை என்று ஆகிவிட்டாற் போலிருக்கிறது. அவராகவே வசனங்களை அள்ளி விடுகிறார்.

அப்படி அஜித் படச் சுருளுடன் வேனில் வரும் யோகி பாபுவைப் பார்த்து மாரிமுத்து “இவன் யாரை ஏத்திட்டுப் போக வண்டில வர்றான்..?” என்று கேட்க அதற்கு பதில் சொல்லும் யோகி பாபு, “உன்ன பாடையில ஏத்திட்டு போறதுக்கு தான்..!” என்கிறார்.

“என்ன சொன்னே..?” என்று மாரிமுத்து மீண்டும் கேட்க, “எதிர்காலத்தை சொன்னேன்..!” என்கிறார் யோகி பாபு. இதைக் கேட்கும் போது மாரிமுத்துவின் மரணம் நினைவுக்கு வர, நமக்கு பகீர் என்கிறது.

ஆனால் படம் முழுவதும் யோகி பாபு வந்தாரா என்று கேட்டால் அதுதான் இல்லை. ஊரை விட்டு ஓடுவதுடன் அவர் கதை முடிந்தது.

இனியாவும் யோகி பாபுவுக்கு தானே ஜோடியானோம் என்கிற ஏமாற்றத்துடனேயே நடிப்பது போல் இருக்கிறது.

ஹாரர் காமெடி வகைப் படம் என்பதால் எந்த லாஜிக்கும் இல்லாமல் திரைக்கதை எப்படி எப்படியோ பாய்கிறது. ஆனால் படம் நெடுக நம்மால் சிரிக்க முடிந்திருந்தால் அத்தனை லாஜிக் ஓட்டைகளையும் மறந்திருப்போம்.

மொட்ட ராஜேந்திரன், சென்ராயன் பால சரவணன், நமோ நாராயணன், அவர் மகனாக வரும் கும்கி அஸ்வின் என்று எல்லோருமே ஒரு சிரத்தை இல்லாமல் நடித்ததைப் போலிருக்கிறது.

முதல் பாதியை விட இரண்டாவது பாதி சற்று வேகமாக நகர்வது ஆறுதல்.

ஒரு காமெடி படத்துக்கு என்ன தேவையோ அந்த அளவுக்கு பட்ஜெட் இருப்பது போல் தான் தெரிகிறது. ஒளிப்பதிவும் இசையும் ஓகே ரகம்.

ஆனால் ஸ்கிரிப்ட் வலுவாக இருந்து நகைச்சுவையும் தூக்கலாக இருந்திருந்தால் தூக்குதுரை கிரீடத்தை தூக்கிக் கொண்டாடி இருக்கலாம்.

தூக்கு துரை – ஏமாற்றாதே… ஏமாறாதே..!