November 8, 2024
  • November 8, 2024
Breaking News
January 28, 2024

ஜெய் விஜயம் திரைப்பட விமர்சனம்

By 0 345 Views

உங்கள் வீட்டில் உள்ள அப்பா, மனைவி, தங்கை என்று எல்லா உறவுகளும் உங்களை ஏமாற்றுவதாக நீங்கள் ஒருநாள் உணர்ந்தால் என்ன ஆகும்..?

இதுதான் இந்த படத்துக்காக இயக்குனர் ஜெய சத்தீஸ்வரன் நாகேஸ்வரன் எடுத்துக் கொண்டிருக்கும் லைன்.

அப்படியான ஒரு நிலைதான் நாயகன் ஜெய் ஆகாஷுக்கு ஏற்படுகிறது. தன்னுடைய அப்பாவாக இருப்பவர் உண்மையான அப்பா தானா, மனைவி நிஜம்தானா, தங்கை எப்படிப்பட்டவள் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியாத ஹலுசினேஷன் என்று சொல்லக்கூடிய பழைய நினைவுகளை மறந்த நிலையில் இருக்கும் அவர் நியாயமான கேள்வியை எழுப்பும் போதெல்லாம் ஒரு மாத்திரையைக் கொடுத்து தூங்க வைத்து விடுகிறார்கள்.

சொந்த வீட்டில் அவர் முகம் பார்க்க கண்ணாடி மறுக்கப்படுகிறது. டிவி பார்க்க அனுமதியில்லை. செய்தித்தாள்களோ வேறு எந்த ஊடகமுமோ உள்ளே வர அனுமதி இல்லாத நிலையில், ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அங்கிருந்து தப்பித்து தன் நிலை குறித்து போலீசில் புகார் செய்கிறார் அவர்.

“ஒரு நல்ல மனநல மருத்துவரைப் போய்ப்பார்..!” என்று அங்கேயும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அனுப்பி விடுகிறார்கள்.

தான் யார் என்பதை ஜெயா ஆகாஷ் உணர்ந்தாரா அவரது பழைய நினைவுகள் மீண்டும் வந்தனவா என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஜெய் ஆகாஷின் தோற்றத்துக்கும் திறமைக்குமான இடம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கிடைக்காதது ஆச்சரியம்தான். ஆனாலும் தன் விடாமுயற்சியாக சொந்தமாகவே வருடத்துக்கு ஒரு படமாவது தயாரித்து நடித்து விடுகிறார்.

அவர் பேசும் தமிழ் மட்டும் இலங்கைத் தமிழாக இல்லாமல் இன்னும் கொஞ்சம் புரியும் படியாக இருக்கலாம் – அதற்கான முயற்சி எடுக்க வேண்டும் அவர்.

ஜெய் ஆகாஷின் மனைவி வேடத்தில் அக்ஷயா காந்தனமுதன் நடித்திருக்கிறார். கொஞ்சம் முதிர்ச்சி இல்லாத நடிப்பை அவரது அழகு நேர் செய்து விடுகிறது.

தங்கைக்கென்றே வார்த்த தோற்றத்தில் வருகிறார் அட்சயா ரே. அவரது ஃப்ளாஷ்பேக் கேட்க நேரும்போது பரிதாபமாக இருக்கிறது.

ஜெய் ஆகாஷ் அப்பாவாக நடிக்கும் ஏசிபி ராஜேந்திரனும் அவர் பங்கை சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார்.

இந்த மேற்படி 3 கேரக்டர்களுக்கும் படத்தின் பின் பாதியில் வேறு பாத்திரங்கள் ஏற்க நேர்வதும் சுவாரசியமான விஷயம்தான்.

கதையால் மட்டுமே கவனிக்கப்படுகிற படங்களின் வரிசையில் இந்தப் படமும் சேரும்.

ஆனால் பட்ஜெட் குறைவாக இருந்ததாலோ என்னவோ பட ஆக்கத்தில் நேர்த்தி இல்லாமல் ஒரு குறும்படம் பார்க்கும் அனுபவத்தையே இந்தப் படம் ஏற்படுத்துகிறது.

இந்தக் குறையைக் களைந்து இருந்தால் கவனிக்கத்தக்க படமாக ஆகி இருக்கும்.

மர்டர் மிஸ்ட்ரியான இந்தப் படம் கதை நடக்கும் வீட்டுக்குள் புகை மண்டலமாக இருக்க, ஆவிகள் நடமாடும் ஹாரர் திரில்லராக மாறிவிடுமோ என்று யோசிக்க வைக்கிறது.

ஆனால் வீட்டுக்குள் அலையும் அந்தப் புகைக்கும் ஒரு கேரக்டர் கொடுத்து கடைசியில் அதையும் பாசிட்டிவ் ஆக முடிக்கிறார் இயக்குனர்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட சின்ன வளையத்துக்குள் என்னென்ன வித்தைகள் காட்ட முடியுமோ அதையெல்லாம் முடிந்தவரை காட்டியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் பால் பாண்டியும், இசையமைப்பாளர் சதீஷ் குமாரும்…

காட்சியில் காட்ட முடியாத உணர்ச்சிகளை எல்லாம் இசையமைப்பாளர் தன் தோளில் போட்டுக்கொண்டு இசைக்கருவிகளை உருட்டு உருட்டு என்று உருட்டி நமக்கு உணர்ச்சி ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்.

சினிமா படங்களில் மட்டுமே ஒருமுறை மண்டையில் அடிபட்டால், நடந்தவை எல்லாம் மறந்து போய் இன்னொரு முறை அடிபட்டால் மறந்ததெல்லாம் நினைவுக்கு வந்து விடுகிறது.

முன்பாதி படத்தை விட பின் பாதி வேகம் எடுக்கிறது.

ஜெய் விஜயம் – தலைப்பிலாவது இருக்கட்டும் இரட்டை வெற்றி..!