சமீபகாலமாக வட சென்னைக் கதைகள் கோலிவுட்டை முழுக்க ஆக்கிரமித்து இருக்கின்றன. இந்நிலையில் அதற்குப் போட்டியாக தென்சென்னை என்ற இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டு இருக்கிறார் ரங்கா.
வடசென்னைக் கதைகள் என்றாலே கால்பந்தாட்டம், குத்துச்சண்டை, ரவுடியிசம் என்று இருக்க தென் சென்னைக்கு எதை அடையாளமாக வைத்திருக்கிறார் ரங்கா என்று பார்த்தால் உணவகம் ஒன்றே மையப்படுத்தி இருக்கிறார்.
கதை இதுதான்.
ரங்காவுக்கு நேவியில் பணியாறற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அப்பா தொடங்கிய உணவகத்தை நடத்தும் பொறுப்பு வந்து சேருகிறது. அவருடைய மாமா செய்த தவறினால் அந்த உணவகம் இன்னொருவருக்கு கைமாறி போய் அதே உணவகத்தில் பணியாளராக இருக்க நேர்கிறது ரங்காவுக்கு.
அந்த உணவகத்தைக் கைப்பற்றும் வில்லன் நித்தின் மேத்தா கிரிக்கெட் உட்பட பல்வேறு சூதாட்டங்களை நடத்திக் கொண்டு அதற்கான பண பட்டுவாடாக்களை அந்த உணவகத்தில் வைத்து செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவரிடம் இருக்கும் சூதாட்ட பணத்தைச் சூறையாட ஒரு கும்பல் முயற்சிக்கிறது அதைக் காப்பாற்ற ரங்காவின் உதவியை நாடும் நித்தின் மேத்தா, அதற்கு பரிகாரமாக அவருடைய உணவகத்தைத் திரும்ப தந்து விடுவதாக உறுதி அளிக்கிறார்.
அதற்குப் பின் என்ன ஆனது என்பது மீதிக் கதை.
பெரிய படத் தயாரிப்பாளர்களே ஒரு புதிய வரை நம்பி படம் தயாரிக்க தயங்கும் நிலையில் தானே படத்தையும் தயாரித்து அதை இயக்கியது மட்டும் அல்லாமல் நடித்தும் இருக்கும் ரங்காவின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
ஆனால் சரியான கதையைத் தேர்ந்தெடுத்து அதைக் குழப்பம் இல்லாமல் சொல்லி இருந்தால் இந்தப் படத்தை இன்னும் ரசித்திருக்க முடியும்.
நடிப்பிலும் விஜய் ஆண்டனிக்குத் தம்பி போல் எல்லா உணர்ச்சிகளுக்கும் ஒரே ரியாக்சன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற விஷயங்களை திருத்திக் கொண்டால் தமிழ் சினிமா ரங்காவை கொண்டாடும்.
ஸ்டைலிஷான வில்லனாக வருகிறார் வில்லன் நித்தின் மேத்தா. அவரது பாத்திரத்தை இன்னும் டெவலப் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நாயகியாக நடித்திருக்கும் ரியா, நாயகனின் மாமாவாக நடித்திருக்கும் இளங்கோ குமரன், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சுமா உள்ளிட்டோர் அவரவர் பாத்திரங்களில் பொருந்துகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சரத்குமார்.எம், இசையமைப்பாளர்கள் சிவா பத்மயன் மற்றும் ஜென் மார்டின் ஆகியோர் பட்ஜெட்டுக்கு ஏற்ப வேலை பார்த்திருக்கிறார்கள்.
படத்தில் உணவகத்தின் தேவை என்ன என்பது புரியவில்லை. உணவகத்தின் சூழல்களும் இயல்பாகக் காட்டப்படவில்லை. ஆனால் சூதாட்ட பணப்பரிமாற்ற விஷயங்கள் நல்ல ஒரு திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கின்றது.
எப்படி இருந்தாலும் இரண்டு தோள்களில் மூன்று பொறுப்புகளைத் தாங்கி இருக்கும் ரங்காவின் முயற்சியை வரவேற்கலாம்.
தென் சென்னை வாசிகளும் தங்கள் பகுதியும் படத்தில் வந்து விட்டதில் பெருமை கொள்ளலாம். அவர்கள் வந்து பார்த்தாலே படம் தப்பித்துக் கொள்ளும்.