காதல் கதைகளுக்கு இதைப் போன்று இலக்கியத்தரமான தலைப்பு கிடைப்பது அபூர்வம். அப்படி ஒரு தலைப்பைப் பிடித்ததுடன் எந்தக் காலத்திலும் அலுக்காத முன்னாள் காதலர்கள் இந்நாளில் இணைந்தால் என்ன ஆகும் என்கிற கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன்.
இந்த லைனில் ஏகப்பட்ட கதைகள் வந்தாயிற்று. இந்தக் கதையில் புதுமை என்ன என்றால் கல்லூரி நாட்களில் காதலித்து பிரிந்த ஜோடி இருவரும் திருமணம் ஆன பின் மீண்டும் சந்திக்க நேர, சில நாட்கள் பழைய காதலை நினைத்துச் சுற்றி வருவதுடன் மீண்டும் சந்திக்கக் கூடாது என்கிற வைராக்கியத்துடன் பிரிகிறார்கள்.
அவர்களால் அப்படி இருக்க முடியாது என்றுதான் கதை நீளும் இல்லையா..? அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று கற்பனையை நீட்டித்து ஒரு சுவாரஸ்யமான கதையை சொல்ல முடிவு எடுத்து இருக்கிறார் இயக்குனர். அப்படி சுவாரஸ்யமாக சொல்ல முடிந்ததா என்பதுதான் கேள்வி.
முன்னாள் காதலர்களாக ஜெய்யும் ஐஸ்வர்யா ராஜேஷும். திருமணமான பின் ஜெய்க்கு ஜோடியாக ஷிவதா இருக்கிறார். அஜ்மத்தின் மனைவியாக ஐஸ்வர்யா இருக்கிறார்.
இரண்டு ஜோடிகளுக்குள்ளும் இருக்கும் வித்தியாசம், ஜெய்யும் ஷிவதாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோஷமான வாழ்க்கை நடத்தி வர, அஜ்மத் – ஐஸ்வர்யாவுக்கு இடையே நாளொரு சண்டையும், பொழுதொரு அடிதடியுமாக நகர அஜ்மத்தை விட்டுப் பிரிகிறார் ஐஸ்வர்யா.
அங்கிருந்து தொடங்கும் பிரச்சனை ஐஸ்வர்யாவை ஜெய்யைத் தேடி ஓடி வர வைக்க, தனது அன்பான குடும்பத்தையும் இழக்க முடியாமல் மாஜி காதலியின் விருப்பத்தை நிறைவேற்றவும் முடியாமல் ஜெய் எப்படி இந்த பிரச்சனையை சமாளித்தார் என்பதுதான் பின் பாதி.
ஜெய் இதுபோன்ற பல கதைகளில் நடித்து முடித்துவிட்டார் என்ற அளவில் அவருக்கு மிக சாதாரணமான வேடந்தான். அவரும் இன்னும் எத்தனை கதைகள்தான் இப்படி எடுப்பீர்கள் என்கிற அலுப்புடனையே நடித்துக் கடக்கிறார்.
பெரும்பாலான கதை ஐஸ்வர்யா ராஜேஷைச் சுற்றியே நகருகிறது. மாஜி காதலனை மீண்டும் பார்க்கும்போது ஏற்படக்கூடிய பரவசம், பிரியும்போது ஏற்படும் சோகம், மீண்டும் அவனை நாடி வர வேண்டிய நிர்ப்பந்தம், மீண்டும் பழைய காதல் கைகூடாதா என்பதில் காட்டும் ஆர்வம் என்று பல முகங்களைக் காட்டி நடித்துள்ளார்.
அதிலும் தன்னை அடித்து உதைத்த அஜ்மத்தை விட்டுப் பிரிந்து தோழியுடன் தங்கியிருக்கும் வேளையில் அவருடைய அம்மாவும் அப்பாவும் சமாதானத்துக்கு அஜ்மத்தை கூட்டிக் கொண்டு வர, அவர்கள் முன்னிலையில் அஜ்மத்துக்கு ஓங்கி ஒரு அறை விடுகிறார் பாருங்கள் – அந்த இடத்தில் தியேட்டரே கைதட்டுகிறது..!
இப்படிப்பட்ட ஒரு மோசமான கணவனுடன் சேர்த்து வைக்க வரும் ஐஸ்வர்யாவின் அப்பா மாரிமுத்துவுக்கும், அம்மாவுக்கும் கூட ஒரு அறை விட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
கால்வாசி படத்துக்கு மேல் கிட்டத்தட்ட வில்லியாகவே வரும் அவருடைய பாத்திரம் என்னதான் ஆகும் என்கிற கேள்வியை ஏற்படுத்தி இப்படித்தான் இந்தக் கதை முடியும் என்கிற அளவிலேயே முடிகிறது.
ஷிவதா போன்ற ஒரு மனைவி கிடைப்பவர்கள் வேறு எந்த தவறும் பண்ண மாட்டார்கள் என்று தலையில் அடித்து சத்தியம் செய்யலாம். அந்த அளவுக்கு அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்த்து நடித்திருக்கிறார் ஷிவதா.
அஜ்மத்தையும் அவரது கோபத்தையும் பார்த்தாலே அவருடன் எந்தப் பெண்ணும் வாழ விரும்ப மாட்டாள்.
சித்துக்குமாரின் இசை ஓகே. இதுபோன்ற காதல் படங்களுக்கு இழைத்து இழைத்து இசைத்திருக்க வேண்டாமா..? ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம், படத்தின் நேர்த்தியை கூட்டி இருக்கிறார்.
திரைக்கதையின் மிகப்பெரிய சவாலே எந்தக் கேள்வியையும் எழுப்ப முடியாத அளவில் அதில் பதில்களை வைத்திருப்பதுதான். ஆனால் இந்தப் படத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. பாத்திரங்கள் யாரும் அவர்களது பிரச்சினையை இன்னொருவருடன் மனம் விட்டு பேசுவதாகவே இல்லை.
இதையெல்லாம் கவனித்து சரி செய்திருந்தால் மிகச் சிறந்த காதல் காவியமாக இந்தப் படம் இருந்திருக்கக் கூடும்.
தீராக்காதல் – போதாத களம்..!