எல்லோர் வாழ்விலும் எதிர்பாராத தருணம் என்று ஒன்று வரும். அதில் நல்லதும் நடக்கலாம் – தீயதும் நடக்கலாம். அது நம் வாழ்வை எப்படிப் பாதிக்கிறது என்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான விஷயம்தான்.
இந்த லைனை வைத்துக்கொண்டு இரண்டே கால் மணி நேரத்துக்கு ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன்.
அப்படி ஒரு தருணத்தில் நாயகன் கிஷன் தாசும் நாயகி ஸ்மிருதி வெங்கட் டும் சந்தித்து பழகிக் காதல் கொள்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே இளம் பெண்களை தங்கள் காம வலையில் வீழ்த்தும் வில்லன் ராஜ் ஐயப்பா, ஸ்மிருதி வெங்கட்டை வீழ்த்த ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
ஆனால் கிஷன் தாஸுக்கும் ஸ்மிருதிக்கும் திருமணமே நிச்சயமாகும் சூழலில் அவர்களைப் பிரிக்க திட்டம் போடும் ராஜ் ஐயப்பாவின் சதி வலையில் விழுந்து கிஷன் தாசை மறுதலிக்கிறார் ஸ்மிருதி.
இதைப் பயன்படுத்தி அவரைத் தன் வசப்படுத்த ராஜ் ஐயப்பா முயலும் போது எதிர்பாராத தருணத்தில் அவர் இறக்க நேர்கிறது. அந்த நேரத்தில் அங்கே கிஷன் தாசும் வந்து சேர… அடுத்து என்ன என்பதெல்லாம் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லராகப் போகிறது.
மத்திய ரிசர்வ் படை போலீஸ் ஆக வரும் கிஷன் தாஸ் ஸ்மார்ட்டாக அந்த வேடத்தில் பொருந்தி இருக்கிறார். நடை, உடை, உடல் மொழி, சண்டை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியை வெளிப்படுத்தி இருக்கும் அவர் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து நடிக்க ஆரம்பித்தால் முன்னணிக்கு வந்து விடலாம்.
காதலிக்கத் போதான அழகு முகம் கொண்ட ஸ்மிருதி வெங்கட்டும் தன் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.
வில்லத்தனத்துக்கு நியாயம் செய்து நடித்திருக்கும் ராஜ் ஐயப்பா சடுதியில் இறந்து போவார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாதுதான். ஒரு கட்டத்தில் அவர் எழுந்து விடுவார் என்று நினைக்கிறோம். ஆனால் அப்படி நடக்கவில்லை.
ராஜ் ஐயப்பாவின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் நிலை பரிதாபகரமானது. தன் மகனைத் தேடி அலையும் அவர் ஒவ்வொரு கட்டத்திலும் சரியாகவே கணித்தும் மகனை மீட்க முடியாதது அந்தோ பரிதாபம்.
கிஷன் தாசின் நண்பராக நடித்திருக்கும் பாலசரவணன் கிஷனின் திட்டத்தில் பகடைக் காயாகப் பயன்படுவதும், ஏனென்று கேட்காத அப்பாவித்தனத்துடன் பால சரவணன் நடந்து கொள்வதும் லாஜிக் இல்லாவிட்டாலும் சிரிக்க வைக்கிறது.
தர்புகா சிவாவின் இசை இந்தப் படத்துக்கு பலம். ஆனால் அருமையான ஒரு காதல் பாடலை படத்தின் முடிவில் இணைத்திருப்பது அந்தப் பாடலின் எதிர்பார்ப்பைக் குறைக்கிறது.
அஸ்வின் ஹேமந்தின் பின்னணி இசை காதுகளைக் கிழிக்காமல் திரில் ஏற்படுத்துகிறது.
படத்தின் முதல் ஷாட்டிலேயே “அட..!” போட வைக்கும் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி கதை நடக்கும் சின்னச் சின்ன இடத்தில் கூட இடறாமல் பணியாற்றி இருக்கிறார்.
ஒரு இறந்த உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்துவது… அதற்கான சரியான லாஜிக்குகளை பிடிப்பது என்பதெல்லாம் சாமானியமான வேலை இல்லை. அப்படி பின்பாதியில் பதட்டத்தை ஏற்படுத்தி ஆனால் ஒரு வழியாக அதைச் செய்து முடிக்கிறார் இயக்குனர் அரவிந்த்.
ஆனால் அவர் போட்ட திட்டப்படியே எல்லாம் நடப்பதால் பிரச்சனை இல்லாமல் கதை முடிகிறது. எல்லா இடத்திலும் சிக்கல் வருவதற்கு வாய்ப்பு இருந்தும் எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் போட்ட திட்டப்படியே எல்லாம் நடந்து முடிகிறது.
அதுவும் மகன் கொலை நடந்த பிளாட்டின், எதிர் பிளாட்டிலேயே இருக்கும் அவரது அம்மா கீதா கைலாசம் அவ்வப்போது இந்த வீட்டையே நோட்டம் பார்த்துக் கொண்டிருக்க, அவ்வளவு எளிதாக ராஜ் ஐயப்பாவின் உடலை வெளியே கொண்டு வந்து அப்புறப்படுத்துவது எல்லாம் லாஜிக் மீறல்தான்.
இருந்தாலும் ஒரு சின்ன விஷயத்தை வைத்துக் கொண்டு, அடுத்து என்ன என்ற பரபரப்பிலேயே நம்மை வைத்திருப்பது சிறப்பு.
அதேபோல் பின்பாதிப் படத்தைப் போல், முன்பாதியிலும் இன்னும் சுவாரஸ்யம் கூட்டி இருக்கலாம்.
தருணம் – எதிர்பாராதது..!
– வேணுஜி