September 13, 2025
  • September 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தம்பி யில் அண்ணியுடன் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறேன் – கார்த்தி
December 15, 2019

தம்பி யில் அண்ணியுடன் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறேன் – கார்த்தி

By 0 1001 Views

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அமைவதால் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி ‘தம்பி’ படம் வெளியாக இருக்கும் நிலையில் கார்த்தி படம் குறித்து பேசினார். அதிலிருந்து…

“ஜீத்து ஜோசப் சார் இயக்கம் என்றதும் சிறப்பாகத் தோன்றியது. ஏனென்றால், அவருடைய ‘த்ரிஷ்யம்’ பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாணியில் இருக்கும். அதேபோல், அவர் கதை கூறும் பாணியும், நேர்த்தியும் உறுதியாக இருக்கும். இது குடும்ப கதையை மையப்படுத்தியது என்பதால், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். எனக்கு முன்பே அண்ணி கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். என்னிடம் அதைக் கூறும்போது உற்சாகமாக இருந்தது. இருவரும் பணியாற்ற வேண்டுமென்பதால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா? என்று யோசித்து தான் முடிவெடுத்தோம்.

எனது அண்ணியை… அவர் பணிபுரிந்து நான் பார்த்ததில்லை. இங்குதான் பார்த்தேன். படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பே அன்றைக்கு உடுத்த வேண்டிய உடைகள், சிகை அலங்காரம் என்று முன்பே திட்டமிட்டு தயார் செய்து வைத்துவிடுவார். என்ன வசனம் பேசவேண்டும்? என்பதை முன்பே வாங்கி மனப்பாடம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு தயாராக வருவார். அவருடைய அந்தத் தயாரிப்பு எனக்கு பிடித்திருந்தது. அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் பெரிய உழைப்பு தெரிந்தது.

மேலும், இப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. என்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. ஆகையால், என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் என்னுடைய நிஜ கதாபாத்திரத்திற்கு ஒன்றி இருப்பதால், நடிப்பது சுலபமாக இருந்தது. 

இப்படத்தின் பலமே நடிகர்கள் தான். சத்யராஜ் சார் பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இளவரசு இருக்கிறார்.

முக்கியமாக ‘சௌகார்’ ஜானகி அம்மா நடித்திருக்கிறார். அவருக்கு 88 வயதாகிறது. இதுவரை கிட்டதட்ட 400 படங்களில் நடித்துவிட்டார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கும். அனைத்துமே சுவாரஸ்யமான காட்சிகளாக இருக்கும். இத்தனை வயசானாலும் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்.

இன்றும் தானே சமைத்து சாப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல், படக்குழுவிற்கு இரண்டு நாட்கள் சமைத்துக் கொடுத்திருக்கிறார். வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார். பணி என்று வந்துவிட்டால் நேர்மையாக இருக்கிறார். அவர் காலத்து கலாச்சாரம் நம்மை வியப்படைச் செய்கிறது.

சத்யராஜ் சார் இத்தனை படங்கள் நடித்துவிட்டோம். நமக்கு எல்லாம் தெரியும் என்றில்லாமல், இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய முதல் படம் மாதிரி இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். 

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்த அனுபவம், பெரிய இயக்குநரிடம் நடிக்கிறோம் என்றில்லாமல் இயல்பாக இருந்தது. அனைவரும் இணைந்து தான் இப்படத்தை எடுக்கிறோம். அனைவரும் ஒரே குடும்பமாக செயலாற்றி இப்படத்தை முடித்தோம். மேலும், படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் என்னிடம் மட்டுமல்லாமல், உதவி இயக்குநர், நடிகர் நடிகைகள், அண்ணி என்று எல்லோருடனும் கலந்து ஆலோசிப்பார்.

இந்தக் காட்சியை இதைவிட இன்னும் சிறிது மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறினால், அதையும் ஏற்றுக் கொள்வார். அதேபோல், அன்று வரவேண்டிய நடிகர் நடிகைகள் யாரேனும் வரமுடியாது என்று கூறினால், படப்பிடிப்பை ரத்து செய்ய மாட்டார். உடனே முடிவெடுத்து வேறு விஷயங்களை செய்து முடிப்பார்.

வசனங்களுக்கு மணிகண்டனிடமும், மேலும் இரண்டு இணை இயக்குநர்களிடமும் கலந்தாலோசித்து அன்றைக்குத் தேவையான வசனங்கள் அர்த்தம் மாறாமல் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்வார். இது மாதிரி நிறைவான படம் அரிதாகத்தான் வருகிறது. மலையாளத்தில் கலைஞர்களுக்கு நடிப்பதற்கான இடமும், சந்தர்ப்பமும் நிறைய இருக்கும். அதை எங்களுக்கும் கொடுத்தார் ஜீத்து ஜோசப்.

‘96’ படத்திற்குப் பிறகு கோவிந்த் வசந்தா இசையமைக்கும் படம் இது. ஒரு காதல் பாடல் இருக்கிறது. சின்மயி பாடியிருக்கிறார். திரில்லர் படம் என்பதால் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். அதை கோவிந்த் வசந்தா சிறப்பாக கொடுத்திருக்கிறார். 

இப்படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. வருட கடைசியில் பண்டிகை தருணத்தில் அனைவரும் கொண்டாடக்கூடிய படமாகவும், புது அனுபவமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்..!”