அமேசான் பிரைமில் சுழல் முதல் சீசன் வெளிவந்தபோதே அது பெரும் வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம் வழக்கமான சீரிஸ்கள் போல் அல்லாமல் இது திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தந்ததுதான்.
அந்த அனுபவம் கொஞ்சமும் குறையாமல் இந்த சீசன் 2 சுழல் வெளிவந்திருக்கிறது.
முதல் சீசனுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் ஆனால் அதிலிருந்து விலகி இருக்கும் இன்னொரு கருப்பொருளைத் தொட வேண்டும் என்கிற சவாலுடன் இந்த இரண்டாவது சீசனில் களம் இறங்கி இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் புஷ்கரும் காயத்ரியும்.
எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த சுழல் 2 வை பிரம்மாவும், சர்ஜுன் கே.எம்மும் இயக்கியிருக்கிறார்கள்.
கதை தூத்துக்குடி பகுதியில்தான் நடக்கிறது. அங்கே வழக்கறிஞராக இருக்கும் லால் தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். அதை விசாரணை செய்ய வரும் காவல் அதிகாரியாக கதிர் இருக்க, அவருடன் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் சரவணனும் இணைகிறார். லால் வீட்டுக்குள் இருக்கும் ஒரு தாழிடப்பட்ட மர பீரோவுக்குள் துப்பாக்கியுடன் … அமர்ந்திருக்கிறார். ஆனால் அந்த பீரோ வெளியில் இருந்து தாழிடப்பட்டிருக்கிறது. எனவே அவர் கொலையாளியாக இருக்க வாய்ப்பில்லை என்று போலீஸ் கருதும் நிலையில் தூத்துக்குடியின் பல பகுதிகளில் இருந்தும் ஏழு பெண்கள் தாங்கள்தான் லாலைக் கொன்றோம் என்று சொல்லி சரணடைகிறார்கள்.
முதலில் அத்தனை பெண்களையும் போலிஸ் சந்தேகித்து அவர்களுக்கெல்லாம் லால் பிரச்சனை கொடுத்தவராக இருப்பார் என்று சந்தேகிக்கிறது. ஒரு கட்டத்தில் லால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீஸ் கருதுகிறது.
இந்த நிலையில் 8 இளம் பெண்களும் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் சிறையில்தான் முதல் சீசனில் தன் சித்தப்பாவை கொலை செய்துவிட்டு கைதான ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். அவருக்கும் கதிருக்குமான தொடர்பு முதல் பகுதியிலேயே நமக்குத் தெரிந்ததுதான்.
இந்நிலையில் 8 பெண்களை சந்தேகிக்கும் கதிர், சிறையில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் மூலம் அவர்களிடம் இருக்கும் உண்மையை அறிய முயற்சி செய்கிறார். அதில் எட்டு பெண்களும் தங்களை போலீஸிடம் சிக்க வைத்து விடுவார் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் மீது சந்தேகப்படுகிறார்கள்.
இப்படி எட்டு எபிசோடுகளின் முடிவிலும் குழப்பத்துக்கு மேல் குழப்பமாக சுழல் சுழன்று அடித்து எப்படி முடிவுக்கு வருகிறது என்பது மிகவும் சாமர்த்தியமாகவும் சுவாரசியமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
முதல் சீசனில் வெளியில் தெரியாமல் குடும்பங்களுக்குள் நடக்கும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் இருக்க அதன் தொடர்ச்சியாக இந்தப் சீசனில் அது எப்படி மாவட்டங்கள் தாண்டி, மாநிலம் தாண்டி, தேசம் தாண்டும் குற்றமாக இருக்கிறது என்பதை நம் நெஞ்சம் பதை பதைக்க சொல்லியிருக்கிறார்கள் புஷ்கர் & காயத்ரி.
எட்டு காளிகள் சேர்ந்து ஒரு அரக்கனை அழிக்கும் வட்டாரக் கதையை மையமாக வைத்து, தூத்துக்குடி பகுதியில் நடக்கும் திருவிழா பின்னணியுடன் பிரம்மாண்டமாக இந்த சுழல் 2 தயாரிக்கப்பட்டிருக்கிறது.
நாயகன் கதிர் விசாரணை அதிகாரியாக வந்து தன் பணியை செவ்வனே செய்கிறார். அவர் விசாரணை திருப்பங்களுக்கு மேல் திருப்பமாக போய்க்கொண்டிருக்க அவரது மேலதிகாரி ஒரு கட்டத்தில் அவர் மேல் நம்பிக்கை இழப்பதும் ஆனால் தன்னம்பிக்கையுடன் கதிர் பணியாற்றுவதும் பாராட்டத்தக்க அம்சம்.
எந்த சலனமும் காட்டிக் கொள்ளாமல் சரவணன் இதில் நடித்திருப்பது அந்த பாத்திரத்தின் தன்மையை புரிய வைக்கிறது.
குற்றவாளியாக வந்தாலும் குற்றமற்ற அப்பாவி முகத்துடன் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு இந்த சுழல் 2 டிலும் பிரதானமாக அமைகிறது. 8 பெண்களின் பின்னணியையும் சிறையில் இருந்தவாறு புரிந்து கொண்டு அவர்களுக்கு நேரும் துன்பங்களில் எல்லாம் தானும் பங்கெடுத்துக் கடைசியில் அவர்களைப் பெரும் குற்றம் செய்யாமல் தடுப்பது வரை ஐஸ்வர்யா ராஜேஷின் போராட்டமயமான நடிப்பு நம்பகமாக இருக்கிறது.
அதேபோல் லால் நல்லவரா கெட்டவரா என்று தெரியாத அளவில் ஆரம்பத்தில் அவர் மீது அடுக்கடுக்கான குற்றங்களும் கடைசியில் அவையெல்லாம் அப்படியே திரும்பி அவருக்கு இன்னொரு முகம் இருப்பதை காட்டுவதும் பரபரப்பான திருப்பங்கள். லாலின் நடிப்பை தனியாகச் சொல்லத் தேவையில்லை.
உள்ளிட்ட 8 பெண்களின் பின்னணியும் அவர்கள் வேடங்களில் வரும் சிறுமிகளும் அற்புதமான தேர்வாகி இருக்கிறார்கள்.
கடைசி கடைசியாக சிறையில் இருக்கும் சரோஜா என்ற பாத்திரம் மிரட்டி விடுகிறது.
பிரம்மா, சர்ஜன் கே.எம் என இருவர் ஒவ்வொரு எபிசோடையும் இயக்கி இருந்தாலும் அதில் சீரான தன்மை இருப்பது பாராட்டுக்குரியது
ஆபிரகாம் ஜோசப்பின் ஒளிப்பதிவு தயாரிப்புச் செலவை எந்த விதத்திலும் விரயமாக்கி விடாத அளவில் அதை இரட்டிப்பான பிரம்மாண்டத்துடன் காட்டி இருக்கிறது. அதிலும் அந்தத் திருவிழா காட்சிகள் அபாரம்.
இதன் இசையமைப்பாளர் யார் என்பதை கண்களை மூடிக்கொண்டு அனுபவ சினிமா ரசிகர்கள் கண்டுபிடித்துவிட இயலும். அப்படி ஒரு அதிரடி இசையை தந்திருக்கிறார் சாம் சி எஸ். அரக்கனை காளிகள் கொல்லும் காட்சிகளில் நம் காது சவ்வு கிழிந்து விடுகிறது.
படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவினுக்குதான் வேலைகள் அதிகம். ஆனால் பல திருப்பங்களும் பல மர்மங்களும் நிறைந்த இந்தத் திரைக் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் புரிய வைத்திருக்கிறார்.
சுழல் 2 – முதல் பகுதிக்கு சற்றும் குறைவில்லாமல் இரட்டிப்புடன் சுழன்று ரசிக்க வைக்கிறது.
– வேணுஜி
.