விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தி பல படங்கள் வந்திருந்தாலும் அதை சொல்லும் விஷயத்தில் சுவாரசியத்தை சேர்க்காமல் விட்ட காரணத்தால் பல படங்கள் வலுவிழந்து தோல்வியை சந்தித்து இருக்கின்றன.
ஆனால் இந்தப் படம் விவசாயத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அதில் ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் விஷயங்களை சேர்த்து நம்மை முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார்கள் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனும், நடிகர் கார்த்தியும்.
நியாயமான காரணங்களுக்காக ரவுடியிசத்தை பயன்படுத்தி நல்ல தாதாவாக இருக்கிறார் நெப்போலியன். மனைவியை இழந்த அவரது மகனான கார்த்தி நெப்போலியனிடம் வேலைபார்க்கும் கிட்டத்தட்ட 100 ரவுடிகளை அண்ணன்களாக நினைத்து வளர்கிறார்.
படிப்புக்காக வெளியூர் சென்றுவிட்டு பல கனவுகளுடன் வரும் அவரிடம் இந்த ரவுடிகளை வழிநடத்தும் பொறுப்பை தந்துவிட்டு இறந்துபோகிறார் நெப்போலியன். அதே சமயம் புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் கமிஷனர் ரவுடியிசத்தை ஒழிக்க அவர்களை சுட்டுக் கொல்லும் வேலையை ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில் அண்ணன்களாக அவர்களை நினைக்கும் கார்த்தி அத்தனை பேரையும் எப்படி பாதுகாத்தார் அதன் மூலம் சமுதாயத்திற்கு என்ன நன்மை செய்தார் என்பதே இந்த படத்தின் கதை.
கார்த்தியின் சிறப்பே அவரை படித்தவராகவும் பார்க்க முடியும், பருத்திவீரன் ஆகவும் கொள்ள முடியும். அதன் கலவையாக இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் சுல்தான் பாத்திரத்தில் படித்தவராகவும், வன்முறைக்கு வன்முறையில் பதில் சொல்பவராகவும் வருவதுடன் விவசாயத்தை மேம்படுத்தும் இளைஞனாகவும் மிளிர்கிறார்.
காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி என்று எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடும் பாத்திரத்தை ஏற்று முழுமையான நடிகராகத் தெரிகிறார் கார்த்தி.
அந்த 100 ரவுடிகளை எப்படித்தான் பிடித்தார்களோ காட்சிக்கு காட்சி அவர்கள் அத்தனை பேரையும் வைத்து படமாக்கியிருப்பது இந்த படத்தின் அசுர சாதனை. பிரேமுக்கு பிரேம் அத்தனை பேரும் வந்து அதகள படுத்துகிறார்கள்.
அவர்களுக்குள்ளும் பாசம் காமெடி எல்லாம் இருப்பது ரசிக்க வைக்கிறது. அவர்களில்… குறிப்பாக கார்த்தியின் பாடிகார்ட் ஆக வரும் அந்த ஏழு அடி உயர இளைஞரும் மலையாள நடிகர் லால் மற்றும் காமெடியன் யோகிபாபு மிகவும் ரசிக்க வைக்கிறார்கள்.
முகம் தெரியாவிட்டாலும் படத்தில் வரும் இரண்டு வில்லன்களும் தெலுங்கு படங்களுக்கு சவால் விடுவது போல் வந்து மிரட்டுகிறார்கள்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா இந்த படத்தில் கிராமத்து பெண்ணாகவே வந்து நம்மை ரசிக்க வைக்கிறார். அனாயசமாக டிராக்டர் ஓட்டுவதும் கோழி விற்பதும் பால் கறப்பதும் எத்தனை பெரிய ரவுடியாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து நிற்பதும் ஆக அவரது சண்டைக்கோழி பாத்திரம் ரசிக்க வைக்கிறது.
சிறிய பாத்திரத்தில் வந்தாலும் தன் அனுபவ நடிப்பால் மனம் கவர்கிறார் நெப்போலியன். அவரது வலதுகரமாக வரும் லால் பாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் படத்தின் பிரம்மாண்டத்தில் ஒரு பாகுபலியை கொடுத்திருக்கிறார் என்று சொல்ல முடியும். ஒரு ரவுடி கதையில் விவசாயத்தின் மேன்மை, காதலின் மென்மை, பலமான சென்டிமெண்ட் எல்லாம் கலந்து அற்புதமான கமர்ஷியல் படத்தை அலுப்பில்லாமல் கொடுத்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் யுவனின் பின்னணி இசை. விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் மீண்டும் கேட்க வைக்கின்றன. சத்யன் சூரியனின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது.
சுல்தான் – சூடான ஆக்ஷன்..!