தமிழ்சினிமாவின் ஒட்டுமொத்த துறைகளும் வேலை நிறுத்தத்தில் இருக்க, வர்ம் 23 தேதி முதல் வெளியூரில் நடந்து வரும் படப்பிடிப்புகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.
இந்நிலையில் காலையிலிருந்து பரபரப்பாகி வருவது விஜய் நடிக்க, சன் டிவி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பதுதான். இதுதெரிந்து ஏ.வெங்கடேஷ், ஜேஎஸ்கே உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கொதிப்புடன் விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என்று சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த விஷயம் வைரலாக, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் எஸ்.எஸ்.துரைராஜ் வாட்ஸ் ஆப்பில் பேசியிருக்கிறார். அதில்,
“16ம்தேதி முதல் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டாலும் ஓரிரு நாள் செட்டைக் கலைக்க வேண்டியோ, ஷெட்யூல் முடிக்க வேண்டியோ இருக்கும் படங்களை மட்டும் ஆய்வு செய்து அவர்களுக்கு மட்டும் அந்த ஷெட்யூலை முடிக்க சங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் சன் பிக்சர்ஸ் சார்பாக அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில் இப்போது அவர்கள் படப்பிடிப்பு நடத்திவரும் செட்டில் இரண்டு நாள் வேலை பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதில் நடனக்காட்சிகளுக்கு ஆந்திராவில் இருந்து மாஸ்டர் மற்றும் நடனக் கலைஞர்கள் பணியாற்றி வருவதால் அதை முடிக்க வேண்டி இருப்பதாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இருந்தும் அவர்கள் 16 முதல் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
அதேபோல் சமுத்திரக்கனி இயக்கும் படத்தின் படப்பிடிப்பும் வெளியூரில் நடந்து வருகிறது. அதை முடிக்க 24ம்தேதி ஆகும் என்பதால் அவர்களும் ஒருநாள் நீட்டித்து அனுமதி கேட்டிருந்தனர். அதேபோல் இசிஆரில் படப்பிடிப்பு நடந்து வரும் ஒரு படத்துக்கும், ஆன்டோ ஜோசப் என்பவர் தயாரிக்கும் படத்துக்கும் அனுமதி வழங்கக்கப்பட்டதன் அடிப்படையில் இன்று படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
இதுவும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாதென்ற காரணத்தினால்தான். மற்றபடி விஜய் படத்துக்கென்று சிறப்பு அனுமதி அளிக்கப்படவில்லை..!”