April 26, 2024
  • April 26, 2024
Breaking News
November 12, 2020

சூரரைப் போற்று திரைப்பட விமர்சனம்

By 0 873 Views

‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படாதே’ என்பார்கள். ஆனால் கையில் இருப்பதை வைத்துக்கொண்டு தான் மட்டுமல்ல, தன்னைப்போன்ற எல்லா சாமானியர்களையும் பறக்க வைத்த ஒரு எளிய மனிதனின் சாதனைப் போராட்டம்தான் இந்தப்படம்.

ஆகாயத்தில் பறக்கும் மனித முயற்சியில் விமானக் கண்டுபிடிப்பு காலம் காலமாகக் கைக்கொள்ளப்பட்டு அத்தனை முயற்சிகளும் wrong ஆகப் போன நிலையில் அதை Right என்று ஆக்கியது ரைட் சகோதரர்களின் முயற்சி. ஆனாலும் கூட அந்த சாதனைப் பயணத்தை ஆதிக்க சக்திகள் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு விமானப் பயணக் கட்டணங்களை விண்ணில் ஏற்றி வைத்திருந்தனர்.

அதை மண்ணுக்குக் கொண்டு வந்து விமானத்தையும் ஒரு மகிழுந்து அளவில் மக்களைப் பயன்படுத்த வைத்தது ஒற்றை இந்தியரான ஜி.ஆர்.கோபிநாத்தின் ‘ஏர் டெக்கான்’ முயற்சி. அதற்காக தான் மேற்கொண்ட அமில சோதனைகள் எப்படி ஆகாய சாதனைகளாக மாறின என்பதை வைத்து அவர் எழுதிய Simly Fly என்ற சுய சரிதப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் இந்தப் படமாக்கம்.

சாமானியனின் பறக்கும் ஆசை விண்ணிலிருந்து எப்படி மண்ணுக்குக் கொண்டு வரப்பட்டதோ, அதற்கு ஈடான சாதனைதான் ஒரு ‘பயோகிராபி’யை ‘செல்லுலாய்ட் கிராபி’க்குள் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் சுதா கொங்கராவின் சாதனையும். அந்த முயற்சியை முன்னெடுத்தது மட்டுமல்லாமல் அதற்கு முகமும் கொடுத்த சூர்யாவை முதலில் பாராட்டியாக வேண்டும். அந்த வகையில் இந்தப்படத்துக்கு ‘சூர்யாவைப் போற்று’ என்றுதான் இயக்குநர் தலைப்பு வைத்திருக்க வேண்டும்.

ரயில் கூட நிற்காமல் செல்லும் சோழவந்தான் சூர்யா, எப்படி ஆகாயத்தை அளந்த ஆள வந்தானாக மாறினார் என்பதை அதன் வலி, வேதனைகளுடன் எளிய வாழ்வின் அழகியல்களும் மாறாமல் அற்புதமாகச் சொல்லியிருக்கும் சுதாவுக்கு அடுத்த பாராட்டு போய்ச் சேர வேண்டும். 

என்ன பாத்திரம் கிடைக்கிறதோ அதன் வடிவத்துக்கு தன்னை மாற்றிக் கொள்ளும் தண்ணீர் போலானவர்களே நல்ல நடிகர்கள். அந்த வகையில் சூர்யா இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டருடன் தன் நடிப்பில் குடுவை, ஜாடி, குடம், அண்டா என்று சலக பரிமாணங்களிலும் மா(ற்)றிக்கொண்ட தண்ணீராகிறார். சட்டி வைத்து வெட்டிக்கொண்ட (ஹேர்) கட்டிங்கில் ஆரம்பித்து விமானிகளுக்கான பயிற்சியில் சகலத்தையும் மழித்துப்போட்ட சவரம் வரை ஒவ்வொரு ஒப்பனையையும் ஒப்பற்ற அளவில் மேற்கொண்டிருக்கும் அவர், வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் மேற்கொள்ளும் போராட்டங்களை அதன் சூடு குறையாமல் பரிமாறியிருக்கிறார்.

தூக்கத்திலிருந்து திடீரென்று விழித்த ஒருவனின் கண்கள் எப்படி இருக்கும்..? இரவில் இயற்கை உபாதையைப் போக்கிக்கொள்ள நாயகி எழுந்து வர, அப்போது சத்தம் கேட்டு சடாரென்று சூர்யா எழுந்து கொள்ளும் காட்சியில் அதை அப்பட்டமாகப் பார்க்க முடிகிறது. நடிப்பில்லாத நடிப்பு அது. (அடுத்த முறை பார்க்கும்போது கவனமாக அந்தக் காட்சியில் அவர் கண்களைப் பாருங்கள்…)

அஹிம்சையைப் போதிக்கும் அப்பாவிடம் “அப்புறம் என்ன மயித்துக்கு என் மேல கையை வச்சீங்க..?” என்று கேட்டு வீட்டை விட்டு வெளியேறும் அந்தக் கோபம், அதன் காரணமாக கடைசிவரை அந்த அப்பாவைப் பார்க்க முடியாமலே போக, சினம் கொண்ட அம்மாவிடம் சின்னக் குழந்தையாக உருகி அழுவது வரை அங்குலம் அங்குலமாக தன்னைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார் சூர்யா.

தங்கள் விமானம் இறங்க சிக்னல் கிடைக்காமல் போக, “த்தா… இறக்குடா… நான் பாத்துக்கறேன்…” என்று நண்பனுக்குக் கட்டளையிடும் வெறித்தனம் மட்டுமல்லாமல் “உன்னைக் கிறுக்கின்னும், என்னைக் கிறுக்கன்னும் ஊர் சொல்லுது. நாம் ரெண்டுபேரும் ஏன் கட்டிக்கக் கூடாது..?” என்று மருகும் காதல் வெளிப்பாட்டிலும் ஒளிர்கிறார் சூர்யா. 

அப்படிப்பட்ட சூர்யாவுக்கு ஜோடி யாரு, அபர்ணா பாலமுரளியா… “யார் அது..?” என்று கேட்பவர்களுக்குச் சரியான சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் அந்த ‘அபர்ணா’. பெண் பார்க்க சூர்யா வரமாட்டேன் என்று சொன்னதால், அவரை ‘மாப்பிள்ளை பார்க்க’க் குடும்பத்துடன் கிளம்பிப் போவது மட்டுமல்லாமல், முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்துப் போய்விட, ஆனால், தனக்காக அவர் தன் கனவுகளை விட்டு வெளியே வந்துவிடக் கூடாதென்ற அபிமானத்தில், “முதல்ல நீங்க ஏரோப்ளானையும், நான் பேக்கரியையும் கல்யாணம் பண்ணியிருக்கோம். அது எப்படிப் போகுதுன்னு பாத்துட்டு நம்ம கல்யாணத்தை யோசிக்கலாம்…” என்று கிளம்பும் அசல் ‘மதுரைக்காரி’யாக பம்மாத்து காட்டுகிறார் அபர்ணா.  

விமானத்தின் எடை குறைப்பை சூர்யா சொல்லிக்கொண்டிருக்க, “உங்களுக்கு வெயிட்டா இருந்தாலே பிடிக்காதோ..?” என்று அவர் மடியில் பொத்தென்று தன் முழு எடையை அமிழ்த்தி அமரும் அந்த ‘Bun’னுக்குள் அத்தனை நடிப்பா..? சத்தியமாக வேறு எந்த அனுபவ நடிகை நடித்திருந்தாலும் இந்த அளவுக்குக் கேரக்டரில் தோய்த்து எடுத்து நடித்திருக்க முடியாது. 

ஒரு சமயம் ஊர்வசியை தற்கால சாவித்ரி என்றார் கமல். அது பொய்யில்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஊர்வசி. உலக நடிப்பு ஊர்வசியுடையது. அவரது கணவராகவும், சூர்யாவின் அப்பாவாகவும் வரும் ‘பூ’ ராமு மிகையில்லாத நடிப்பில் மிளிர்கிறார்.

நடிக்காமல் நடித்து மிரட்டுகிறார் வில்லன் பரேஷ் ராவல். ஆரம்பத்தில் வில்லனாக வரும் மோகன்பாபு அப்படியே இருந்து விட மாட்டாரென்ற நம் எண்ணம் இறுதியில் ஈடேறுகிறது. காமெடிக்கென்ற கருணாஸும், காளி வெங்கட்டும் கிடைத்த இடங்களில் வெடிக்க வைக்கிறார்கள். 

ஜி.வி.பிரகாஷின் உணர்வுகளை மீட்டும் இசை படத்தை அழகாக ‘டேக் ஆஃப்’ செய்வதுடன் நிகேத் பொம்மிரெட்டியின் இதமான ஒளிப்பதிவு அதிராத ‘லேண்டிங்’கும் செய்திருக்கிறது.

நமக்குத் தோன்றும் எல்லாக் கேள்விகளுக்கும் படத்தின் வசனங்களில் விடையை ஒளித்து வைத்திருக்கும் சுதா, மணிரத்னத்தின் மணியான சிஷ்யை என்பதை இன்னொருதரம் நிரூபித்திருக்கிறார். “ரத்தன் டாட்டாவே 20 வருஷமா முயற்சி பண்ணி முடியாத விஷயம் இது…” என்ற உண்மையை உணர்த்தும்போது நிமிர்கிறோம். அதேபோல் “100 வருஷத்துக்கு முந்தி கரண்ட் வேணாம்னாங்க, 50 வருஷத்துக்கு முந்தி கார் தேவையில்லைன்னாங்க… இன்னைக்கு என்னாச்சு..?” என்று விமான சர்வீஸுக்கு கட்டியம் கூறுவதும் முத்தாய்ப்பான வசன உத்தி. ஊரே ஒன்றுகூடி சூர்யாவுக்கு நிதி உதவி அளிப்பதும், ஊர்வசி கண்ணீர் மல்க, “ஜெயிச்சுடுடா மாறா…” என்பதும் உணர்ச்சி மயமான கட்டம். 

நேர்த்தியான இயக்கத்தில் நின்று காட்டியிருக்கும் சுதாவுக்கு ஒரு ‘ஸ்டேன்டிங் ஓவேஷன்’ கொடுக்கலாம்..!

இந்த அசகாய சூரர் மாறனை ‘ப்ளூ சட்டை’ மாறனுக்குக் கூட பிடிக்கும் என்பது தெளிவாகத் தெரியும் உண்மை.

மற்றபடி நிறைகளே மிகுந்திருக்கும் இந்த அரிய முயற்சிப் படத்தின் குறைகளைத் தோண்டித்துருவி சொல்லாவிட்டால் என்னதான் குறை..? 

சூரரைப் போற்று – அக்னிச் சிறகுகள்..! 

– வேணுஜி