சூது கவ்வும் முதல் பாகம் அதிரி புதிரி வெற்றியடைந்த நிலையில் அதன் இரண்டாவது பாகத்தையும் அதே தயாரிப்பாளரான சி.வி.குமார் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் இதன் இயக்கம் மட்டும் எஸ்.ஜே. அர்ஜுன்.
அதேபோல் கடந்த பாகத்தில் விஜய் சேதுபதி ஏற்று இருந்த பாத்திரத்தில் இதில் மிர்ச்சி சிவா. சதா நேரமும் அன்லிமிடெட் போதையுடன் இருக்கும் அவர் முதல் பாகத்தைப் போன்று ஒரு கற்பனை காதலியுடன் உலா வருகிறார்.
கடந்த பாகத்தில் தமிழக நிதி அமைச்சராக கருணாகரன் ஆனார் அல்லவா..? அங்கிருந்து தொடங்குகிற கதையில் ஒன்றாம் நம்பர் ஊழல் அமைச்சராக இருக்கிறார் அவர். ஆனால் அவர்தான் கட்சிக்கு நிதி ஆதாரம் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் இன்னொரு பொறுப்பையும் அவர் வசம் ஒப்படைக்கிறார்.
அது தேர்தலில் ஓட்டு போடுவதற்காக மக்களுக்குப் பணம் கொடுக்கும் பொறுப்பு. அதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாயை வெளிநாட்டு வங்கியில் டெபாசிட் செய்து அதனை பட்டுவாடா செய்வதற்கான கருவியையும் வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார் கருணா.
இந்த நேரம் பார்த்து கருணாகரனை மிர்சசி சிவா கடத்தி விடுகிறார். அதனால் அரசியலிலும், கருணாகரன் வாழ்விலும் ஏற்படும் மாற்றம் என்ன என்பதுதான் இந்த பாகத்தின் கதை.
அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா வழக்கம்போல் நம்மை சிரிக்க வைக்கிறார் ஆனால் போதை இல்லாமல் அவரால் இருக்க முடியாது என்கிற அளவில் மதுவுக்கான பிராண்ட் அம்பாசிடராகவே இதில் அவர் வருவதாக தோன்றுகிறது.
ஆனால், கதையின் மையப்புள்ளியான அருமை பிரகாசம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன் நடிப்புதான் அருமையாக இருக்கிறது. பெயரளவுக்குதான் மிர்ச்சி சிவா ஹீரோ என்றாலும் அவரைவிட ஒரு படி மேலே நடித்து படத்தைத் தனி ஒரு மனிதனாக தங்கி செல்கிறார் கருணாகரன்.
இந்த ஒரே வாரத்தில் கருணாகரனுக்கு இரண்டு படங்கள் வெளியாகி இரண்டிலும் அவருக்கு சிறப்பான பாத்திரம் வாய்த்திருப்பது அருமையிலும் அருமை.
அதிலும் இதில் அவர் குழந்தையாக இருக்கும் போதே தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்துகிறார் என்பதெல்லாம் சூப்பர் லந்து.
கடந்த பாகத்தில் கற்பனை நாயகியாக சஞ்சனா வந்தது போல் இதில் ஹரிஷா ஜஸ்டின் வந்து ரசிக்க வைக்கிறார்
இவர்களுடன் அருள்தாஸ், கல்கி, கவி, யோக் ஜேபி, கராத்தே கார்த்தி உள்ளிட்டவர்கள் தங்கள்.பங்கைச் சரியாக செய்திருக்கிறார்கள்.
பாடல்களுக்கு எட்வின் லூயிஸ், பின்னணி இசைக்கு ஹரி எஸ்.ஆர் இன்று இருவர் பொறுப்பேற்று இசையை நிறைவு செய்திருக்கிறார்கள்.
இது முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதை மனதில் வைத்து ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார் கார்த்திக் கே.தில்லை
முதல் பாகம் அளவுக்கு இந்த பாகம் ரசிக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் கடந்த பாகத்தைப் பார்த்து ரசித்தவர்களுக்கு இந்தப் படமும் சுவாரசியத்தைத் தரும்.
சூது கவ்வும் 2 – தரத்திலும் 2ம் இடம்.