பெரிய பட்ஜெட் படங்கள் சொல்ல மறக்கிற அல்லது சொல்ல மறுக்கிற மருந்து மாபியாக்கள் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் படம். அந்தக் காரணத்தாலேயே பல சர்வதேச விருதுகளை இந்தப்படம் வென்று வந்திருக்கிறது.
அந்த நம்பிக்கையுடன் பார்க்க உட்காரும் படம் வழக்கமான திரைக்கதையில் நகர்கிறது. என்றாலும் தமிழ் வழிக்கல்வி, தமிழ் மருத்துவம், தமிழர் உணவகம் என்று கதை சொல்லத் தொடங்குவதில் படம் மீதான பற்று நம்மையறியாமல் ஏற்படுகிறது.
ஆங்கில வழிக்கல்வி, ஆங்கில மருத்துவம் இவை எந்த அளவுக்கு நம் சமூகத்தில் வேரூன்றிக் கிடக்கிறது என்பதை முன்பாதியில் சொல்கிறார் இயக்குநர் சபரிநாதன் முத்துப் பாண்டியன். அப்படி தமிழ்ப் பற்றுடன் வாழும் நாயகன் செந்தில்நாதன் தன் ஆறு வயதுப் பெண் குழந்தை மீது உயிரையே வைத்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன், கதையை உணர்ந்து நடித்திருப்பதைப் பாராட்டலாம். பெரிய நடிகர்களே காதல் காட்சிகளில் சொதப்பும் சினிமாவில் இவர் காதலில் தேற முயற்சி செய்து இருக்கிறார். மகளை கண்ணெதிரே சதிகாரர்கள் கடத்த, அவர்களை வெல்ல முடியாமல் மகளைக் காக்கவும் முடியாமல் தவிப்பதில் நிறைவாகச் செய்திருக்கிறார்.
அழகாகச் சிரித்து அளவாக நடித்திருக்கிறார் முதல் நாயகி சாண்ட்ரா நாயர். மற்றொரு நாயகியாக வரும் அர்ச்சனா சிங் நடிப்பும் ஒகே. செந்தில்நாதனின் மகளாக நடித்திருக்கும் பதிவத்தினி, மனம் கவர்கிறார். தந்தையை செல்லமாக மிரட்டுவது, பாசம், அக்கறை என நெகிழ வைத்திருக்கிறார்.
செல்லதுரையின் நடிப்பு நெகிழை வைக்கிறது. அவர் சொல்லும் கதை உருகாத மனங்களையும் உருக வைக்கும். முன்னெல்லம் குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைக்கவோ, அல்லது குழந்தை இல்லாதவங்க கிட்ட விற்கவோதான் கடத்துனாங்க. இப்ப உறுப்புகளைத் திருட கடத்துறாங்களே../” என்று அவர் கதறுவது கல் நெஞ்சங்களையும் கரைய வைக்கும்.
கவிஞர் விக்ரமாதித்யன் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். இந்த இரு முதியவர்களின் துயரத்தில் நிறைவு பெறும் படத்தில் கனக்கிறது இதயம்.
அதேபோல் இந்த மாபியாக்களைத் தேடிப்போகும் செந்தில்நாதன் சமுதாயத்தின் கவனத்தைக் கவர தீக்குளிக்க முயன்று ஆட்சியரின் கவனத்துக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு போகும் இடமும் பலே போட வைக்கிறது. ஆனால், எல்ல முயற்சியும் பலன் அற்றுப்போவது எதார்த்தமான சுடும் உண்மை.
பெரிய நடிகர்கள் நடித்து, பட்ஜெட்டும் கூடியிருந்தால் இன்னும் கவனம் பெற்றிருக்கும் படைப்பு. ஆனால், பெரிய நடிகர்கள் இப்படிப் படங்களில் நடிக்க முன் வர வேண்டுமே..?