January 23, 2022
  • January 23, 2022
Breaking News
February 8, 2020

சீறு திரைப்பட விமர்சனம்

By 0 871 Views

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களை எதிர்க்கும் மனத் திண்மையை பெண்களுக்கு ஏற்படுத்த ஆண்கள் உறுதி ஏற்று பாரதி சொன்னது போல் ‘சீற’ வலியுத்துகிறது படத்தின் கதை.

மாயவரம் பகுதியில் லோக்கல் டிவி நடத்திக்கொண்டு அன்பான தங்கையுடன் வாழ்ந்து வரும் ஜீவாவுக்கு பெண்களின் அபயக் குரல் எங்காவது கேட்டால் போதும். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சீறி எழுந்து வந்து சினம் கொண்டு புரட்டி எடுத்து விடுவார். அப்படித்தான் தொடங்குகிறது கதை. சதிகாரர்களிடம் சிக்கிக்கொண்ட இரு பெண்களை அவர் அப்படி ஆபத்பாந்தவனாக வந்து காப்பாற்றுவதில் தொடங்கும் கதை அப்படியே பயணிக்கிறது. 

ஜீவாவுக்கு இந்தக் கேரக்டர் சரியாகப் பொருந்துகிறது. அடி உதை கொண்ட ஆக்‌ஷன் படம் என்றாலும் அவர் எப்போதும் ஐடி ஸ்டூடண்ட் போலவே அலட்டிக்கொள்ளாமல் இருப்பது இயல்பாக இருக்கிறது. எந்த இக்கட்டிலும் “பயமே வரலை…மச்சி… ஒரு டீ சொல்லேன்…” என்று அவர் பேசுவது அவர் கேரக்டரை நியாயப் படுத்துகிறது. பார்க்கும் பெண்களெல்லாம் அவரை “அண்ணா…” என்பதில் நெக்குருகிப் போகும் அவர், “அண்ணான்னு கூப்பிட்டாலே அழுதிடுவேன்…” என்கிறார். அதுவும் அவரைக் காதலிக்கும் ரியா சுமனும் அவ்வப்போது விருந்தாளி போலவே வந்து கொண்டிருப்பதால் காதலைவிட பாசமே பற்றிக் கொள்கிறது.

சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு படத்தில் இருக்கும் இட ஒதுக்கீடு பாவம் பாதிக்கப்படாத நாயகி ரியா சுமனுக்கு இல்லை. அழகாக வந்து அளவாக காதலித்துவிட்டுப் போகிறார்.

அரைமணி நேரமே வந்தாலும் அதகளம் பண்ணிவிட்டுப் போகிறார் சாந்தினி. முதல் மதிப்பெண் பெற்ற மாணவியாக வந்து பத்திரிகையாளர்களிடம் “தான் ஒரு வழக்கறிஞராக வர ஆசைப்படுகிறேன்…” என்று சொல்கையில் அதற்காக எடுத்து வைக்கும் வாதங்களில் அழுத்தமும், நேர்த்தியும், பாசாங்கில்லாத பற்றும் இருப்பது அற்புதம். அவருக்காகப் பழிதீர்க்கக் கிளம்பும் பெண்களிடமும் அப்படியொரு கனல்..!

தங்கைக்காகவே படைக்கப்பட்டது போல் இருக்கிறார் ஜீவாவின் தங்கையாக வரும் காயத்ரி. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட அவர், கர்ப்பிணியாக வந்து பிரசவ நேரத்தில் ஜீவாவும் இல்லாமல் போக நேர நம்மை பதைபதைக்க வைக்கிற காட்சி அது. அங்கே அந்த நேரத்தில் வில்லன் வருணும் வந்து சேர… என்ன ஆகப்போகிறதோ என்று நினைக்க வைத்து இயக்குநர் வைத்திருக்கும் ட்விஸ்ட் ‘அடடே.!’ 

வருண் ஏற்றிருக்கும் ‘மல்லி’ வேடம் வில்லன் போல் தெரிகிறது. ஆனால், அவரை இரண்டாவது ஹீரோ எனலாம். அவரும் அநியாயத்துக்கு ஜீவாவுக்கு மேல் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் ‘பாசக்கார’ அண்ணனாகத் தெரிகிறார். வில்லன் முலாம் பூசப்பட்ட அந்தப் பாத்திர வார்ப்பு புதிதாக இருக்கிறது.

முழுக்க ஆக்‌ஷன் பொறி பறக்கும் கதையில் முதல் பாதியில் காயத்ரியும், பின்பாதியில் சாந்தினியும் சென்டிமென்ட் தூவி படத்தைத் தூக்கி நிறுத்திவிடுகிறார்கள்.

தன்னை அடையாளம் தெரியாமல் தேடி வரும் ரவுடிகளுடனேயே ஜீவா பயணிக்கும் காட்சியும் நன்று. 

எதிர்பாராமல் படத்துக்குள் வரும் முரட்டு வில்லன் நவ்தீப்பை வழக்கறிஞர் என்கிறார்கள். ஆனால், அவர் கோர்ட்டில் இருப்பதைவிட குஸ்தியிலேயே அதிகம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். உடம்பையும் அப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

ஜீவாவின் நண்பராக வரும் சதீஷ், போனில் ஜீவாவைத் திட்டும் கால் வர, “எங்கிட்ட கொடு… நான் அவனை ராதாரவி மாதிரி அசிங்கமா திட்றேன்…” என்பது ஸ்பான்டேனியஸ்.

இமானின் இசை படத்தின் பலம். அவர் இசைத்த பாடல்களில் ‘வாசுகி’, ‘செவ்வந்தியே…’ பாடல்கள் உணர்வு பூர்வமானவை. அதிலும் ‘செவ்வந்தியே…’ திருமூர்த்தியின் அருமையான குரலில் மனத்தில் ஊடாடிக் கொண்டிருக்கிறது. அவற்றை நன்றாகக் காட்சிப்படுத்தியிருக்கும் பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவும் நன்று. அவர் ஒளிப்பதிவில் மயிலாடுதுறை புதிய களமாக ஆகியிருக்கிறது.

ஆனால், பரபரப்பான திரைக்கதையில்  “இதோ பக்கத்து ஊர் மாயவரத்துலதான் இருக்கேன்…” என்று எஸ்எம்எஸ் பார்த்து ஜீவா பைக் எடுத்துக்கொண்டு பல கிலோமீட்டர் தூரம் வந்து உதைப்பதற்குள் சதிகார்கள் சப்ஜாடாக வேலையை முடித்துவிட்டுப் போய்விட மாட்டார்களா என்பது போன்று லாஜிக் கேட்காமல் பார்த்தால் நிறையவே ரசிக்கலாம்.

சீறு – சிறப்பு..!