இன்று காலையில் அதிர்ச்சித் தகவலாக இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் முதல்வர் ஐயா உதவவேண்டும் அவசரம் என்று பதிவிட்டிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது தன் வீட்டுக்கு வருமாறு அழைத்த அவர் அங்கே பேட்டி அளித்தார்.
“வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து ஆபாசமாக திட்டுகின்றனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக கூறி செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன.
முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்க வேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன். கதை பிடித்ததால் அப்படத்தில் நடிக்க முன்வந்ததாகவும் அதன் பிறகே பின்னணி தெரிந்ததாகவும் விஜய் சேதுபதி கூறினார்.
அதன்பிறகு “நன்றி, வணக்கம்’ என கூறியதன் அர்த்தம் என்ன என விஜய்சேதுபதியிடம் கேட்டேன். விஜய்சேதுபதி நலன் கருதியே 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினேன். விஜய் சேதுபதி தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தினேன்.
இதனால் விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாக கூறி தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. எனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரியும்; சினிமாவில் உள்ள அரசியல் தெரியாது.விரைவில் காவல்துறையில் எழுத்துபூர்வமாக புகார் அளிக்க உள்ளேன்..!” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு சீனுரமசாமி கேட்டுக் கொண்டால் அவருக்கு பாதுகாப்பு தர தயார் என்று கூறியிருக்கிறார்.