December 12, 2024
  • December 12, 2024
Breaking News
May 1, 2018

காவிரிப் படுகையில் துணை ராணுவப் படையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்

By 0 871 Views

காவிரி டெல்டா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…

“தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் எடுப்பு, மீத்தேன் எடுப்பு,ஷெல் எரிவாயு எடுப்பு போன்ற பேராபத்துமிக்க திட்டங்களைப் புகுத்தி காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக்க சதித்திட்டம் தீட்டி மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

தற்போது காவிரிப் படுகை நிலப்பகுதிகளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் துணை ராணுவப்படையினரை திடீரென ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து குவித்திருப்பது காலங்காலமாய் அம்மண்ணில் வாழ்ந்து வரும் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

தமிழகத்தை இன்னொரு காஷ்மீராக, இன்னொரு நாகலாந்தாக, இன்னொரு மணிப்பூராக மாற்றுவதை நோக்கமாகக் கண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதைதான் இது போன்ற நடவடிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன.

காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நீண்ட நெடு நாட்களாகப் போராடிக் கொண்டிருக்கிற சூழலில் அதனைப் பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்துத் தமிழர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிற மத்திய அரசு அவ்வகைத் திட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பினை சமாளிக்க துணை ராணுவத்தைப் பயன்படுத்தத் தயாராகியிருக்கிறது.

அவற்றின் நீட்சியாகவே தற்போது காவிரிப் படுகையில் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இது ஜனநாயக மரபுகளுக்கும், மக்களாட்சிக் கோட்பாட்டிற்கும் எதிரான சர்வாதிகார நடவடிக்கைகளாகும்.

மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதி கொண்ட எவராலும் அடக்குமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, காவிரிப்படுகையில் குவித்து வைக்கப்பட்டிருக்கிற துணை இராணுவப்படையினை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லாவிடில், தமிழகத்திடமிருந்து மிகப்பெரும் போராட்ட எதிர்வினையை மத்திய அரசானது எதிர் கொள்ள நேரிடும் என இதன் மூலம் எச்சரிக்கிறேன்..!”