கடந்த சில நாள்களாக கேஸ், பெட்ரோல் விலை உயர்வைத்தாண்டி ‘மீடூ’வைத்தாண்டி ஊடகங்களில் பரபரப்புக்குள்ளான விஷயம் இந்த ‘சர்கார் கதைத் திருட்டு’ விஷயம்தான்.
ஒவ்வொரு முறையும் ஏ.ஆர்.முருகதாஸின் கதைகள் திருட்டு முத்திரை குத்தப்படுவதும் அவர் அதிலிருந்து வெளியே வந்து அதைத் தன் கதையாகவே நம்ப வைத்துவிடும் சாதுர்யமும் அவரை மேலும் மேலும் தவறுகள் செய்யும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டிருந்தது எனலாம்.
அவர் காப்பியடித்த நபர்களில் ஹாலிவுட்டின் ‘கிறிஸ்டபர் நோலனி’ல் இருந்து ‘சர்கார் கதை நாயகன்’ வருண் ராஜேந்திரன் வரை எல்லா ரேஞ்சிலும் இயக்குநர்கள் நிற்கிறார்கள் வரிசைக் கட்டி.
இதில் கடந்த ‘கத்தி’ படக்கதை தன்னுடையது என்று கோபி நயினார் அறிவித்தபோதுதான் முருகதாஸின் வேடம் வெளிபட்டது.
ஆனாலும் கடைசிவரை கோபி போராடாமல் ஜகா வாங்கியதால் அந்தக் கதையும் ஏ.ஆர்.முருகதாஸின் கதையே என்றானது. இப்போது வருண் ராஜேந்திரன் உறுதியாக நின்றதுடன் அதற்குத் துணையாக நின்ற காதாசிரியர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜின் தன்னலமில்லா தன்மையும் இந்தப் பிரச்சினையிலிருந்து அவ்வளவு சீக்கிரம் வெளிவரமுடியாமல் முருகதாஸின் மீதான பிடியை இறுக்கின.
இந்நிலையில் தீபாவளிக்கு ‘சர்கார்’ படம் வெளியாக வேண்டிய சூழலில் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய அவசியமும் கலந்து கொள்ள இனிமேல் ‘நம்ம பப்பு’ வேகாது என்று புரிந்துகொண்ட முருகதாஸ் இன்று கோர்ட்டுக்கு வந்து இந்தக் கேஸிந் விசாரணையில் சமரசம் செய்து கொள்ள ஒத்துக்கொண்டார்.
அதன்படி ‘சர்கார்’ கதை வருண் ராஜேந்திரனுடயதுதான் என்று ஒத்துக்கொண்ட முருகதாஸ், படத்தின் டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி கார்டும் போட ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இது உறுதியாக நின்ற வருண் ராஜேந்திரனுக்கும், பின்புலமாக செயல்பட்ட கே.பாக்யராஜுக்கும் மற்றும் உண்மைக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.
என்ன ஒன்று, இனிமேல் முருகதாஸ் கதை சொல்லப்போனால் “இது உன்னோட கதைதானா, இல்ல மண்டபத்துல யாராவது எழுதிக்கொடுத்ததா..?” என்று கேட்பார்கள்..!