ஆச்சு… விஷாலும் தன் பட் எண்ணிக்கையில் வெள்ளிவிழாக் கொண்டாடிவிட்டார். அவரே நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 அவரது 25வது படமாக அமைகிறது. சண்டக்கோழி2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
அந்நிகழ்வில் விஷால் மனம் விட்டுப் பேசியதிலிருந்து…
“25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சண்டக்கோழி பாகம் ஒன்று எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல.அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது.கதை பற்றிக் கேள்வி பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட நண்பர் என்ற உரிமையில் அந்தப் படத்தை நான் நடிக்கின்றேன் என்று கூறினேன்.
அப்போது ‘செல்லமே’ படம் வெளிவரவில்லை. இருந்தும், சண்டக்கோழியில் என்னை ஆக்க்ஷன் ஹீரோவாக அவர் நிறுத்திவிட்டார்.
அங்கே தொடங்கியதுதான் என் வாழ்க்கை.கனல் கண்ணன் மாஸ்டர் அந்தப் படத்தில் கொடுத்த தைரியம் ஆக்க்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது. ‘தாவணி போட்ட தீபாவளி’ பாடல் என்னைப் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. தெலுங்கிலும் ‘பந்தய கோழி’ என்று வெளியிட்டார்கள்.லிங்கு சாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்துப் படம் எடுத்திருக்கலாம். என் அப்பா நினைத்திருந்தால் அப்படத்தை காப்பி ரைட்சுக்கு பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம்.ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நிறுத்த நினைத்தார் அங்கு இரண்டு வாரத்திற்கு கூட்டம் இல்லை. மூன்றாவது வாரத்திலிருந்து அலை மோத ஆரம்பித்தனர். அன்று முதல் 24படம் முடித்து 25வது படத்திற்காக உங்கள் முன்னால் நிற்கிறேன்.
அதுவும் சண்டக்கோழியே 25வது படமாக அமைந்தது தான் எனக்கு சாதனையாக தோன்றுகிறது.
இதில் என் நாயகி கீர்த்தியுடைய மற்ற படங்களைப் பார்த்து இருக்கின்றேன். மகாநதி பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறினேன். அவருடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் எழுத்தாளர். நான் படம் இயக்குவேனோ இல்லையோ கட்டாயம் கீர்த்தி சுரேஷ் இயக்குநராக வலம் வருவார்.
வீட்டில் எங்க அப்பாவை எப்படி பார்த்தேனோ அதே போல் செட்டில் ராஜ்கிரண் சாரைப் பார்த்தேன்.லிங்குசாமி என்னிடம் “இரண்டாம் பாகத்தில் சக்தி தான் கேமராமேன்… சரியா..?” என்று கேட்டார். “உனக்கு யாரை தோணுகிறதோ அவர்களை வைத்துக்கொள்..!” என்றேன். சக்தி மீது நாங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை அதைவிட இரண்டு மடங்கு வேலை செய்துள்ளார்.
நான் இயக்குநராக வரவேண்டும் என நினைத்தேன். என்னை ஹீரோவாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. பிரபு சாருடனோ, ராஜ்கிரண் சாருடனோ நடிக்கும் போதும் பாலா சார் இயக்கத்தில் நடிக்கும் போதும் அவ்வப்போது என்னை நான் கிள்ளிப் பார்ப்பேன்.
‘சண்டக்கோழி 2’, ‘பந்தயக்கோழி 2’ இரண்டுமே அக்டோபர்-18ல் வெளிவரவுள்ளது. அதுவும் ஆயுத பூஜை அன்று பெரிய அளவில் 2000 பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போன்று வெளிவரும்..!”