வாழ்ந்தவர்கள் சரித்திரம் படமானாலே அதற்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், வாழும் உதாரண சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படத்துக்கு அவர் பெயரையே தலைப்பில் வைத்து கிரீன் சிக்னல் நிறுவனம் ‘டிராஃபிக் ராமசாமி’ என்று தயாரித்திருப்பதால் அதற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு விருந்தினர்கள் பேசுமிடம் சாட்சிக் கூண்டு போல் இருந்தது புதுமையாக இருந்தது.
நிகழ்ச்சியில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது…
“இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் நான் கேட்ட போது “எங்கிருந்தாலும் வருவேன்..!” என்றார். அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா , சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர்.
உலகமே வியக்கும் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். “உறுதியாக வருவேன்..!” என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர் .அதனால்தான் என்னுடன் 17 படங்களில் ஏன்னிடம் ஒரு திட்டு கூட வாங்காமல் பணியாற்ற முடிந்தது.
இங்கே இருக்கும் என் மற்ற இதவி இயக்குநர்கள் ராஜேஷ், பொன்ராமுக்கும் நன்றி. ராஜேஷைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் சில சமயங்களில் உண்மை பேசுவார். என் ஒரு பிறந்தநாளுக்கு விருந்து வைத்தபோது அப்படித்தான். விருந்தில் எல்லாமும் இருக்கும்தானே. அப்படி சாப்பிட்டுவிட்டு நான் இல்லை என்று உறுதி செய்துகொண்டு, “இவரெல்லாம் ஒரு டைரக்டரா..? எதிர்காலத்தில் நான் டைரக்டராகி இவரை அஸிஸ்டன்ட் ஆக வைத்துக் கொள்வேன்..!” என்றார். அவருடன் அதே நிலைமையில் இருந்த தயாரிப்பு நிர்வாகியும் “நானே உன்னை வைத்துப் படம் தயாரிக்கிறேன்..!” என்றார்.
இந்தப் பட இயக்குநர் விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.
இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது..? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது..? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்..!”
இயக்குநர் ஷங்கர் பேசும் போது “இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் “வட போச்சே..!” என்ற ஏமாற்றம் . இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்…!” என்றார்.
டிராஃபிக் ராமசாமி பேசும் போது, “இந்தப் படம் உருவாவதில் எனக்குப் பெருமை. பயமின்மை , தன்னம்பிக்கை, தைரியம் மூன்றும் இருநதால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும். யாருக்கும் பயப்பட வேண்டாம். பயமில்லை என்றால் நீ ராஜா. பயந்தால் நீ கூஜா..!” என்றார்.