நல்ல கதை ஹீரோவாக இருக்கும்போது அந்தப் படத்துக்கு ஒரு முன்னணி ஹீரோ தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் ஹீரோக்களைத் தேடி ஓட மாட்டார்கள் என்பது ஒரு சினிமா சித்தாந்தம்.
அப்படி நாயகியை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் மேற்கூறிய கூற்றை மெய்ப்பிக்கிறதா என்று பார்க்கலாம்.
சமுதாயத்திற்கென்றே உழைப்பவர்கள் கண்டிப்பாக சொந்த வாழ்க்கைக்கு ஒரு நன்மையும் செய்ய மாட்டார்கள். அப்படி சமுதாயப் போராளியான ஒருவர், தன் 10 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வர அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டு மரணம் அடைகிறார்.
அவருடைய தோழரின் அரவணைப்பில் வளரும் அந்தப் பெண் குழந்தைதான் கதையின் நாயகி. அதாவது ரெஜினா என்கிற நம்ம சுனைனா.
பருவ வயதில் தனக்குரிய துணையை அவர் தேர்ந்தெடுத்து வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ளும்போது அதற்கும் ஒரு சோதனை வருகிறது. வங்கியில் பணிபுரியும் சுனைனாவின் கணவன் வங்கிக் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மரணம் அடைய ரெஜினா என்ன முடிவெடுத்தார் என்பதே இந்தப் படத்தின் கதை.
ஒரு ஆக்ஷன் ரிவெஞ்ச் திரில்லருக்கான கதையில் நடிக்க சுனைனாவின் உருவப் பொருத்தம் மிக நன்றாக அமைந்திருக்கிறது. ஐந்தே முக்கால் அடி உயரத்தில் தோல் சீவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு போல் தளதளவென்று இருக்கிறார் சுனைன்ஸ்.
“உதவி தேடி உங்ககிட்ட வந்தா நீங்களே வெளியே போ…ன்னா நான் எங்கே போவேன்..?” என்று போலீஸிடம் பரிதாபமாகக் கேட்பதில் தொடங்கி, நெருங்க முடியாத கொடியவர்களை அவர்களது கோட்டைக்குள்ளேயே போய் கொன்றெடுக்கும் பெண் புலியாகத் திரும்பி வருவது வரை படத்தில் சுனைனாவின் ராஜ்ஜியம்தான்.
அழுகைப் படலம் முடிந்து ஆக்சன் எபிசோடுக் காக கேரள வர்க்கலை கடற்கரைப் பகுதியில் புதிய களம் தொடங்கும் போது திரில்லாக இருக்கிறது. கடற்கரை ஹோட்டலில் நவநாகரீக ஆடைகளில் சுனைனா பணியாளராக இருக்க, அந்த ஓட்டலின் முதலாளியாக இன்னொரு அரபிக் குதிரையை அறிமுகப்படுத்துகிறார்கள்.
ரித்து மந்த்ராதான் அவர். இந்த சர்க்கரைவள்ளி கிழங்குக்கு ஈடாக இன்னொரு மரவள்ளிக்கிழங்கு சிலையாகத் தெரிகிறார் ரித்து. அவரது கணவன் சிறையில் இருக்க ரித்துவுடன் நெருங்கிப் பழகும் சுனைனாவின் நோக்கம் என்ன என்பதே நமக்கு சிறிது நேரம் பிடிபடவில்லை.
ரித்து மந்திராவைப் பார்த்து நம் ஆம்பிளை புத்தி என்ன நினைக்கிரறதோ அதே நிலையில் சுனைனாவும் அவரைப் பார்த்து “நீ ரொம்ப அழகாக இருக்கே..!” என்று படுக்கையில் வைத்துத் தோளில் முத்தமிடும்போது பஞ்சும் பஞ்சும் பற்றிக்கொண்டு திரையில் ஃபயர் பற்றி எரியுமோ என்று பதட்டமாக இருக்க, நெருங்கிய ஆபத்து ரித்துவின் கணவன் சிறையில் இருந்து திரும்பியவுடன் திசை மாறுகிறது.
ரித்துவின் கணவனாக நிவாஸ் ஆதித்தன். ரித்து என்ற குதிரையை கட்டியாளத் தோதான கட்டுமஸ்தான உடலுடன் இருக்கும் நிவாஸ் ஆதித்தன் சுனைனாவிடம் சிக்கி அவரது கட்டளைகளுக்கு ஆடும் நாட்டியக் குதிரையாக மாறுவது பரிதாபம்.
தன் காதலியைத் தொட்டவன் கைகளை சுத்தியலால் நாலு போடு போட்டு கரகரவென அறுக்கும் கொடூர வில்லன் தீனாவின் அறிமுகம் பக் என்று இருக்கிறது. அவரைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட அடியார்கள் இருக்க அங்கே சென்று சுனைனாவால் அவரைப் போட்டுத் தள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்க… திக் திக் நிமிடங்கள் அவை.
அதேபோல் ரித்துவை ஆசை வார்த்தை கூறி கூட்டிக் கொண்டு போய் சுனைனா அன்புச் சிறை வைக்கும் மலைச் சிகரமும் அமர்க்களமான லொகேஷன்.
மேற்படி காட்சிகள் எல்லாம் ஒரு ஆங்கிலப் படம் பார்க்கும் அனுபவத்தை ஏற்படுத்துவது நிஜம்.
சுனைனா வளர்வதில் உறுதுணையாக இருக்கும் எழுத்தாளர் பவா செல்லதுரையும், கேரளாவில் உதவும் திருநங்கையும் தங்கள் பாத்திரங்களை செம்மையாக செய்திருக்கிறார்கள்.
ஆனால் சுனைனாவுக்காக இருவரும் கைதாகி சித்திரவதைப் படுவதை நியாயப்படுத்த முடியவில்லை.
டொமின் டிசில்வாவின் இயக்கத்தில் அமைந்த இந்தப் படம் அடுத்த காட்சி எப்படி திரும்பும் என்று யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
கொஞ்சம் கரணம் தப்பியிருந்தாலும் ராம் கோபால் வர்மாவின் சமீபகாலப் படங்களை போன்று மாறி இருக்கக்கூடிய சாத்தியம் இந்தப் படத்திற்கு இருக்கிறது இருந்தாலும் சமயத்தில் சுதாரித்து அதை ஆக்ஷன் பாதைக்குக் கொண்டு போகிறார் இயக்குனர்.
சிறப்பாகப் பணியாற்றிய ஒளிப்பதிவாளருக்கு போனஸ், சுனைனாவையும் ரித்துவையும் படம் பிடிக்க நேர்ந்ததுதான்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் என்பதால் இசையமைப்பாளர் சதீஷ் நாயர் வெகு சிறப்பான டியூன்களில் பாடல்களுக்கு மெட்டமைத்து இருக்கிறார். அதிலும் சித் ஸ்ரீராம் பாடல் ‘ சூறாவளி ‘ பாடல் படம் முடிந்தும் கூட காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது.
பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார் சதீஷ் நாயர்.
ரெஜினா – ரிவெஞ்ச் எடுத்த சுனைனா..!
– வேணுஜி